இன்றைய இறைமொழி
வெள்ளி, 10 மே 2024
பாஸ்கா காலம் 6-ஆம் வாரம் – வெள்ளி
திப 18:9-18. யோவா 6:20-23அ.
எனக்குரிய மக்கள்
துயரம், மகிழ்ச்சி ஆகியவை அடுத்தடுத்த நிகழ்வுகள் அல்ல, எதிரெதிர் துருவங்கள் அல்ல, மாறாக, ஒரே நிகழ்வே துயரம், மகிழ்ச்சி என்னும் இரு பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது எனக் கற்பிக்கிறார் இயேசு. குழந்தை பெற்றெடுக்கிற தாய் உருவகத்தைப் பயன்படுத்துகிற இயேசு, குழந்தை பெற்றெடுக்கிற நிகழ்வு துயரம் நிறைந்ததாக இருந்தாலும், ஓர் உயிர் தோன்றியது பற்றி மகிழ்கிறார் தாய்.
ஆக, நிகழ்வுமுறை துயரம் நிறைந்ததாக இருந்தாலும், முடிவு அல்லது விளைவு மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்வுக்குத் தயாரிப்பது என்னும் நிகழ்வுமுறை துயரமாக இருக்கிறது, ஆனால், தேர்வு முடிவு மகிழ்ச்சி தருகிறது.
முடிவு அல்லது விளைவைப் போலவே நிகழ்வுமுறையும் அவசியம் என்பதை இன்றைய நாளில் நாம் கற்றுக்கொள்வோம்.
முதல் வாசகத்தில், கொரிந்து நகரில் பவுலுக்குத் தோன்றுகிற ஆண்டவர், ‘இந்நகரில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கிறார்கள். தொடர்ந்து பேசிக்கொண்டே இரு!’ என்று அவரை உற்சாகப்படுத்துகிறார். நாமும் ஆண்டவருக்குரிய மக்களாக இருப்பது நமக்கு மகிழ்ச்சி தருகிறது. ஆண்டவர் தருகிற உற்சாகமே அனைத்து எதிர்மறையான நிகழ்வுகளையும் பவுல் தாங்கிக்கொள்வதற்குத் துணையாக நிற்கிறது.
நிற்க.
ஆண்டவருக்குரிய மக்கள் நாம் என்னும் எண்ணம் நமக்கு எதிர்நோக்கு தருகிறது. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 94)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: