இன்றைய இறைமொழி
வெள்ளி, 12 ஜூலை 2024
பொதுக்காலம் 14-ஆம் வாரம் – வெள்ளி
ஓசேயா 14:1-9. மத்தேயு 10:16-23
வாழ்தலும் வளர்தலும்
‘வாழ்க்கை கடினமானது!’ – இச்சொற்களைக் கொண்டு தம் சீடர்களை எச்சரிக்கிறார் இயேசு. கடவுளின் பணியைச் செய்வதால் மட்டும் வாழ்க்கை இனிமையாக அமையும் என நினைப்பது தவறு. உலகு கடவுளுக்கு எதிராகவே செயல்படுகிறது. நாம் மற்றவர்களுக்கு நல்லவர்களாக இருப்பதால் மற்றவர்களும் நமக்கு நல்லவர்களாக இருக்க வேண்டும் என நினைப்பது தவறு. ஒவ்வொரு மனிதரும், எவ்வளவு ஒழுக்கமும் கற்றலும் கொண்டிருந்தாலும், நேரம் வரும்போது தன் இயல்பு வெளிப்படுமாறு நடந்துகொள்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நிறைய சொல்லோவியங்களைப் பயன்படுத்துகிறார் இயேசு: ‘ஓநாய்கள் நடுவே ஆடுகளைப் போல உங்களை அனுப்புகிறேன்.’ ஓநாய்களும் ஆடுகளும் இயல்பில் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. ஓநாய்கள்முன் ஆடுகள் வலுவற்றவை. இருந்தாலும் அவை வாழவும் வளரவும் வேண்டும். வன்மையானதன் நடுவில் மென்மையானது நிலைபெற வேண்டுமெனில், ‘முன்மதி’ அல்லது ‘விவேகம்’ (‘பாம்பைப் போல’), ‘கபடற்று’ அல்லது ‘எளிமையாக’ இருப்பது (‘புறாக்கள் போல’). தனக்குத் தீங்கு வரப்போகிறது என்பதை முன்னுணர்கிற பாம்பு தன் விஷத்தைப் பயன்படுத்துகிறது. சூழலுக்கேற்றாற்போல செயல்பட்டுத் தன் உயிரைத் தக்கவைத்துக்கொள்கிறது.
மற்றவர்கள் நம்மிடம் எப்படி (எதிர்மறையாக) நடந்துகொண்டாலும், நாம் வாழவும் வளரவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
எப்படி?
(அ) திட்டமிடுதலும் விவேகத்துடன் செயல்படுதலும்
‘ஓநாய்கள் நடுவே ஆடுகளைப் போல …’ (மத் 10:16)
வாழ்வின் எதிர்மறையான சூழல்கள் நடுவே ஞானத்துடன் நாம் நகர்ந்துசெல்ல வேண்டும். அவற்றிலிருந்து தப்பிக்க முயற்சி செய்வது ஆபத்தாக முடியும். திட்டமிட்டு, முன்கூட்டியே உணர்ந்து, தெளிவான முடிவுகளை எடுத்தல் வேண்டும். நம் குழுமத்தாரோடு இணக்கமாகச் செயல்படுமாறு நாம் எளிமையாக வாழ வேண்டும்.
(ஆ) சவால்களை எதிர்கொள்ளத் தயாரித்தல்
‘மனிதர்கள் உங்களை நீதிமன்றங்களிடம் ஒப்புவிப்பார்கள் …’ (காண். மத் 10:17-18)
வரக்கூடிய சவால்களையும் தடைகளையும் முன்கணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்த்தகைவையும் தயார்நிலையையும் கொண்டவர்களாகப் பிரச்சினைகளைக் கையாள வேண்டும். நம் சொற்களைப் பயன்படுத்தி எதிரியிடமிருந்து தப்பிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
(இ) அகஆற்றலை நம்புதல்
‘… உங்கள் விண்ணகத் தந்தையின் ஆவியார் …’ (காண். மத் 10:19-20)
இயேசுவின் சீடர்கள் உள்மன ஆற்றலையும் திடத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்களுடைய திறன்மேல் அல்ல, மாறாக, கடவுளின் கரத்தின்மேல் சாய்ந்துகொள்ள வேண்டும். கடவுள் தம் அன்புக்குரியவர்களைக் கைவிடுவதில்லை. இதையே இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். தொடர்ந்து ஆண்டவராகிய கடவுள் தன் உடன்படிக்கைப் பிரமாணிக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
நிற்க.
இறைவனின் விரலைப் பற்றிக்கொண்டு வாழ்வின் எல்லாச் சூழல்களையும் கடந்து செல்கிறார் எதிர்நோக்கின் திருப்பயணி (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 146).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
Share: