இன்றைய இறைமொழி
வெள்ளி, 13 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 23-ஆம் வாரம், வெள்ளி
1 கொரிந்தியர் 9:16-19, 22-27. லூக்கா 6:39-42
தன்னையே தகுதியாக்குதல்
தன்னடக்கம் மற்றும் தன்னறிவு நோக்கிய நம் பயணத்தைப் பற்றிப் பேசுகின்றன இன்றைய வாசகங்கள். கடவுள் நமக்குக் கொடுத்துள்ள பணிக்கு நாம் நம்மையே தகுதியாக்கிக்கொள்ள வேண்டும். நாம் நமக்கு வெளியே அடையும் வெற்றிகள் அல்ல, மாறாக, நாம் நம்மையே வெற்றிகொள்தலும், மதிப்பீடு, அன்பு, தாழ்ச்சி ஆகியவற்றில் வளர்வதே முதன்மையானவை. பந்தயத்திடலுக்குப் பலர் வந்தாலும் ஒருவரே வெற்றி பெறுகிறார் எனச் சொல்கிற பவுல், வெற்றிபெறக்கூடிய அந்த நபரைப் போல மேன்மையுடன் வாழ நம்மை அழைக்கிறார்.
(அ) நற்செய்திக்கான ஒழுக்கம்
இன்றைய முதல் வாசகத்தில், கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், நற்செய்தி அறிவிப்பு என்பது பெருமைக்குரிய பதவி அல்ல, மாறாக, கடவுளால் வழங்கப்பட்ட கொடை என அறிவிக்கிறார். பந்தயத்திடலில் ஓடுகிற விளையாட்டு வீரர்களின் ஒழுக்கம் பற்றிப் பேசுகிற பவுல், அவர்கள் தங்களைNயு ஒழுக்கத்திலும் தன்னடக்கத்திலும் வளர்ப்பதுபோல ஆன்மிகம் என்னும் பந்தயத்திடலில் வெற்றிபெறுவதற்கும் நாம் நம்மையே ஆளுகை செய்ய வேண்டும்.
கிறிஸ்தவ வாழ்வுப் பயணம் மேம்பட வேண்டுமெனில் அன்றாட முயற்சிகளும் செயல்பாடுகளும் அவசியம். கடவுளோடு நெருக்கமாக இருக்குமாறு நம் எண்ணங்களையும் இதயங்களையும் உடல்களையும் நெறிப்படுத்தி ஆளுகை செய்கிறோமா? தொடர் நம்பிக்கையும் மதிப்பீடும் அவசியம்.
(ஆ) தீர்ப்பிடும் முன் தாழ்ச்சி
நற்செய்தி வாசகத்தில், நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடும் முன் தாழ்ச்சியோடும் தன்னறிவோடும் செயல்பட வேண்டும் என அழைக்கிறார் இயேசு. பார்வையற்ற நபர் ஒருவர் மற்றொரு பார்வையற்ற நபரை வழிகாட்டுவதும், கண்ணில் உளள் மரக்கட்டையை அகற்றுவதற்குப் பதிலாக மாற்றவர்களின் கண்களில் உள்ள துரும்பைப் பார்ப்பதும் ஆபத்தாக முடியும். எனவே தன்னிறிவு கொள்வதும் நம்மையே தகுதியாக்கிக்கொள்வதும் அவசியம். நம்மைச் சரிசெய்வதன் வழியாகவே மற்றவர்களை சரி செய்ய முடியும்.
நம் குறைகளைக் காண்பதற்குப் பதிலாக மற்றவர்களின் குறைகளைக் காட்டுவதற்கு நாம் முயற்சி செய்கிறோம். நம் வலுவின்மைகள் பற்றிய புரிதல் என்ன? தீர்ப்பிடுவதை விட இரக்கம் காட்டுவது மேலானது.
(இ) பணிவிடை வழியாக நம்மையே தகுதியாக்கிக்கொள்தல்
நம்மையே தகுதியாக்கிக்கொள்தல் நம் நலனுக்காக அல்ல, மாறாக, குழுமத்திற்குப் பணி செய்வதற்காகவே. ‘வலுவற்றவர்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர வலுவற்றவர்களுக்கு வலுவற்றவன் ஆனேன். எப்படியாவது ஒருசிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்’ என்கிறார் பவுல். கடவுளின் கண்களில் நம்மையே தகுதியாக்கிக்கொள்தல் என்றால் தாழ்ச்சியில் வளர்வதாகும்.
‘எல்லாருக்கும் எல்லாம் ஆதல்’ என்பது நம் தாராள உள்ளத்தில் தொடங்குகிறது. ஒருவர் மற்றவருக்கு ஏற்றாற்போல மாறுதல் என்பது தன்னலத்துக்காக அல்ல, மாறாக, மற்றவரை வெற்றிகொள்வதற்காக!
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ தங்களையே தன்னாளுகை செய்கிறார்கள். தாழ்ச்சியிலும் பணியிலும் வளர்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 198)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: