இன்றைய இறைமொழி
வெள்ளி, 14 ஜூன் 2024
பொதுக்காலம் 10-ஆம் வாரம் – வெள்ளி
1 அரசர்கள் 19:9, 11-16. மத்தேயு 5:27-32
அன்பும் அர்ப்பணமும்
தம் சீடர்களின் நெறி பரிசேயர்களின் நெறியைவிடச் சிறந்திருக்க வேண்டும் என மொழிகிற இயேசு, பத்துக்கட்டளைகளில் சிலவற்றுக்கு விளக்கம் தருகிறார். ‘விபசாரம் செய்யாதிருப்பாயாக!’, ‘பிறர் மனைவியை விரும்பாதிருப்பாயாக!’ என்னும் இரு கட்டளைகளின் விளக்கமாக இருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
‘ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், ‘ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று” என்கிறார் இயேசு.
இயேசு நம்மை படைப்பின் தொடக்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். படைப்பின் தொடக்கத்தில் ஆண் முதன்முதலாக பெண்ணைப் பார்த்தபோது, ‘இதோ! என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும்!’ என்று தன்னுடைய நீட்சியாகக் காண்கிறார்.
ஆனால், விபசாரத்தில், பெண் இன்னொருவருடைய எலும்பின் எலும்பும் சதையின் சதையுமாக இருக்கிறார். தாவீது-பத்சேபா நிகழ்வில், தாவீதின் பார்வையே அவருடைய பாவத்திற்கு அவரை இட்டுச் செல்கிறது. உரியாவின் எலும்பும் சதையுமான பத்சேபாவை தனக்குரியது என ஆக்கிக்கொள்ள விழைகிறார் தாவீது (காண். 2 சாமு 11)
தாவீதின் மகன் அம்னோன் அப்சலோமின் சகோதரிமேல் மோகம் கொள்ளும் நிகழ்வில் (காண். 2 சாமு 13), அவனுடைய பார்வையே தீச்செயலுக்கு அவனை இட்டுச் செல்கிறது. எந்த அளவுக்கு அவன் அவளை விரும்பினானோ, அந்த அளவுக்கு அவன் அவளை வெறுக்கத் தொடங்குகிறான்.
திருமணத்திற்குப் புறம்பே, திருமணத்திற்கு பிறழ்வே, திருமணத்திற்கு முன்பே உள்ள உறவுநிலைகள் அனைத்திலும் உள்ள பிரச்சினைகள் மூன்று:
(அ) ஈர்ப்பு உடல் சார்ந்ததாக இருக்கிறது. உடலின் இன்பம் மட்டுமே மையப்படுத்தப்படுகிறது.
(ஆ) மற்றவருக்குப் பதில் இன்னொருவர் என மாற்றப்படுகிறார்.
(இ) ஒருவர் மற்றவர்மேல் உள்ள பொறுப்பு உடனடியாகத் துறக்கப்படுகிறது.
‘விபசாரம் செய்யாதிருப்பாயாக!’ என்னும் கட்டளை ‘விபசாரம்’ என்னும் செயலைத் தடுப்பதற்காக அல்ல, மாறாக, கணவன்-மனைவிக்கு இடையே உள்ள அன்பையும் அர்ப்பணத்தையும் அதிகரிப்பதற்காகவே எனச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு.
அன்பும், அர்ப்பணமும், பொறுப்புணர்வும் கூடிய இடத்தில் விபசாரத்திற்கும், மணமுறிவுக்கும், பிறழ்வு உறவுக்கும் இடமில்லை.
நிற்க.
‘நீ இங்கே நில்!’ என்று எலியாவிடம் சொல்கிற கடவுள், மெல்லிய ஒலியில் தோன்றியபோது, ‘நீ இங்கே என்ன செய்கிறாய்?’ எனக் கேட்கிறார். ஆண்டவராகிய கடவுள் நம் இருத்தலையும் இயக்கத்தையும் நிர்ணயிக்கிறார். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 124).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: