இன்றைய இறைமொழி
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 19-ஆம் வாரம் – வியாழன்
எசேக்கியேல் 16:59-63. மத்தேயு 19:3-12
திருமணம்
மணமுறிவு, மணஉறவு, மணத்துறவு என்னும் மூன்று கருத்துருக்களைச் சுற்றி நிற்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள திருமண உறவையும் இணைப்பையும் முறிப்பதற்கான வழிமுறைகளை மோசே சட்டம் (காண். இச 24:1-2) தந்தது. பத்துக் கட்டளைகளில் 6-ஆவது (‘விபசாரம் செய்யாதிருப்பாயாக!), மற்றும் 9-வது கட்டளையின் (‘பிறர் மனைவியை விரும்பாதிருப்பாயாக!) பின்புலத்தில் கொடுக்கப்பட்ட இந்த வழிமுறை ஆணுக்கு உரிமை தந்ததுடன், பெண்ணை வெறும் உடைமையாகப் பார்க்கும் நிலைக்கு வழிவகுத்தது.
ஆகவேதான், இயேசு மணஉறவின் வேருக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். படைப்பின் தொடக்கத்தில் ஆண்-பெண் என்னும் உறவுநிலை ஒருவர் மற்றவரை நிரப்புகிற நிலையாக, ஒருவர் மற்றவரை மேம்படுத்துவதாக இருந்தது. இந்த நிலைதான் கடவுள் விரும்புகிற, கடவுள் ஏற்படுத்திய நிலை என்கிறார் இயேசு.
தொடர்ந்து, மணத்துறவு பற்றிப் பேசுகிற இயேசு, விண்ணரசுக்காக ஏற்கப்படும் மணத்துறவின் தனித்தன்மையை எடுத்துரைக்கிறார். மணஉறவின் பிரமாணிக்கம் கடவுளை நோக்கியதாக மட்டுமே இருப்பதால் மணத்துறவு மேன்மை பெறுகிறது. மேலும், அருள்கொடையின் வழியாகவே இந்த நிலைக்கு ஒருவர் தன்னைக் கையளிக்க முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் உடன்படிக்கை பிரமாணிக்கத்தை முன்மொழிகிறார் ஆண்டவராகிய கடவுள்.
நிற்க.
மணஉறவின் பிரமாணிக்கமும், மணத்துறவின் அர்ப்பணமும் போற்றுதற்குரியவை (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 174).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: