இன்றைய இறைமொழி
வெள்ளி, 19 ஜூலை 2024
பொதுக்காலம் 15-ஆம் வாரம் – வெள்ளி
எசாயா 38:1-6, 21-22, 7-8. மத்தேயு 12:1-8
கடவுளின் இரக்கம்
நோய்வாய்ப்படுதல் ஒரு கொடுமையான அனுபவம். மூன்று விடயங்களுக்காக இது ஒரு கொடுமையான அனுபவம்:
அ. நோய் தருகின்ற வருத்தம் அல்லது துன்பம். நாம் எவ்வளவுதான் மாத்திரை, மருந்துகள் எடுத்தாலும், நம்முடைய இருத்தல் மற்றும் இயக்கத்தில் ஒருவகையான அசௌகரியத்தை நோய் ஏற்படுத்துகிறது.
ஆ. நோய் உருவாக்கும் சார்புநிலை. மற்றவர்களைச் சார்ந்து வாழும் நிலைக்கு நோய் நம்மைத் தள்ளிவிடுகிறது. மருத்துவர், செவிலியர், உணவு தருபவர், அருகே அமர்ந்து பணிவிடை செய்பவர் என எல்லாரும் நம்மைச் சூழ்ந்து நிற்பது நமக்கு நல்லது எனத் தெரிந்தாலும், அவர்களைச் சார்ந்திருக்க நம்முடைய தான்மையும் தன்மதிப்பும் நம்மை அனுமதிப்பதில்லை.
இ. நோயின்போது கிடைக்கும் ஓய்வின் விளைவு. ஓய்வு உடலுக்கு நலம் தந்தாலும், உள்ளத்தை அமைதிப்படுத்தினாலும், அந்த ஓய்வின்போது, நம் வாழ்வில் நிறைய எண்ணங்கள் ஓடும். நாம் செய்த தவறுகள் நம் மனத்திற்கு வரும். நம் தவறுகளுக்காக நாம் தண்டிக்கப்பட்டுவிட்டோமா என்ற குற்றவுணர்வு வரும். கடவுள் இருக்கிறாரா என்ற எண்ணம் வரும்.
மேற்காணும் ஒரு கொடுமையான அனுபவத்தை இன்றைய முதல் வாசகத்தில் எதிர்கொள்கிறார் எசேக்கியா. ‘எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்’ என வாசகம் சொல்கிறது. ஆனால், எந்த வகை நோய் என்று இங்கே குறிப்பிடப்படவில்லை. ஆனால், இங்கே பயன்படுத்துகின்ற மருத்துவ முறையை வைத்துப் பார்க்கும் போது, போர்க்களத்தில் பட்ட காயம், அல்லது தன்னுடைய வயது மூப்பால் பெற்ற புண் அல்லது காயத்தால் அவர் துன்புற்றார் என்பதை நாம் உணர முடிகிறது. ஏனெனில், எசாயா, ‘ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்’ எனக் கூறுகின்றார். காய வைக்கப்பட்ட அத்திப்பழ அடை, புண்களின் எரிச்சல், அரிப்பு, மற்றும் நீர்கோர்த்தலைக் குணமாக்க வல்லது என்பது அன்றைய எகிப்திய மருத்துவம்.
ஆனால், கொஞ்ச நாள்களுக்கு முன் இதே எசாயா, எசேக்கியா அரசனிடம், ‘நீர் உம் வீட்டை ஒழுங்குபடுத்தும். ஏனெனில், நீர் சாகப் போகிறீர், பிழைக்க மாட்டீர்!’ என்கிறார். ‘உம் வீட்டை ஒழுங்குபடுத்தும்’ என்று கடவுள் வெகு சிலருக்கே வாய்ப்பு கொடுக்கிறார். எனவே, வீட்டை நாம் எப்போதும் ஒழுங்குபடுத்தி வைத்தல் அவசியம். ஒழுங்குபடுத்துதல் என்பது, இங்கே, அரச காரியங்களை ஒழுங்குபடுத்துவதையும், கருவூலம் மற்றும் படை இரகசியங்களை மற்றவர்களுக்குச் சொல்வதையும் குறிக்கிறது.
தன்னுடைய வெற்றிகளையும் சாதனைகளையும் ஆண்டவர் முன்பாகப் பட்டியலிடவில்லை எசேக்கியா. மாறாக, தன் வலுவின்மையிலும் கையறுநிலையிலும் கடவுளிடம் சரணாகதி அடைகிறார்.
எசேக்கியா உடனடியாக ஆண்டவரிம் மன்றாடுகின்றார். ஆண்டவர் அவருடைய செபத்தைக் கேட்கின்றார். ‘உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன். உனக்கு நலம் தந்தேன்’ என விடை தருகின்றார். மேலும் பதினைந்து ஆண்டுகள் அவருக்கு அளிக்கின்றார். இதன் அடையாளமாக, ‘சாயும் கதிரவனின் நிழல் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்கின்றார்.’
எசாயாவின் பின்வரும் பாடலே அருள்பணியாளர்களின் கட்டளை செபத்தில், இரண்டாம் வாரம் செவ்வாய்க் கிழமை காலைச் செபமாக வருகிறது:
‘என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே!
… …
என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல பெயர்க்கப்பட்டு என்னைவிட்டு அகற்றப்படுகிறது.
நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல என் வாழ்வை முடிக்கிறேன்.
தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்.
காலை தொடங்கி இரவுக்குள் எனக்கு முடிவு கட்டுவீர்.
… …
என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்.
எனக்கு உடல்நலம் நல்கி நான் உயிர்பிழைக்கச் செய்வீர்.
இதோ, என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்!’
நம் வாழ்நாளின் குறுகிய நிலையை நாம் எண்ணிப்பார்க்க, நம் நோயும் இயலாமையும் நமக்கு வாய்ப்பளிக்கிறது.
எசேக்கியா தன் நோயின் காலத்தில், தன்னைப் பார்க்காமல், இறைவனைப் பார்த்தார்.
இறைவன் அவருடைய கண்ணீரைக் கண்டார், மன்றாட்டைக் கேட்டார்.
நம் கண்ணீரைக் காண்பவரும், நம் மன்றாட்டைக் கேட்பவரும் அவரே!
‘ஏனெனில், அவரே நம்மைக் காண்கின்ற இறைவன்!’ (காண். தொநூ 16:13)
நற்செய்தி வாசகத்தில், ஓய்வு நாளில் கதிர்களைக் கொய்து உண்கின்ற தன் சீடர்களைக் கடிந்துகொள்கின்ற பரிசேயர்களிடம் உரையாடுகின்ற இயேசு, இரக்கத்தின் பொருளை உணர்ந்துகொள்ளுமாறு அவர்களை அழைக்கின்றார்.
கடவுளின் இரக்கம் மனிதர்களின் சட்டங்களையும் மிஞ்சி நிற்கிறது.
எசேக்கியோ கண்ட அத்திப்பழ அடை கடவுளின் இரக்கத்தை அவருக்கு அடையாளப்படுத்துகிறது. சீடர்கள் கசக்கி உண்ட கோதுமை மணிகள் இயேசுவின் இரக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
நிற்க.
யூபிலி ஆண்டில், நாம் கடவுளுடைய இரக்கத்தின் காணக்கூடிய அடையாளங்களாக மாறுவோம். இவ்வாறாக, நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு எதிர்நோக்கையும் நலனையும் வழங்குவோம். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 152).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: