இன்றைய இறைமொழி
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 17-ஆம் வாரம் – வெள்ளி
எரேமியா 26:1-9. மத்தேயு 13:54-58
தடம்மாறிய எதிர்பார்ப்புகள்
தச்சுத் தொழில் செய்யக்கூடிய யோசேப்பின் மகனாகிய இயேசு அவருடைய சொந்த ஊரில் தச்சுத் தொழில் செய்யக்கூடிய பட்டறையில் வேலை செய்திருந்தாலோ, அல்லது அவராகவே சொந்தமாக தச்சுத் தொழில் செய்யத் தொடங்கியிருந்தாலோ, அவருடைய ஊரார் அவரைக் குறித்து இடறல்பட்டிருக்க மாட்டார்கள். அவர் அவருக்குத் தொடர்பில்லாத செயல் ஒன்றைச் செய்வதால் – தொழுகைக்கூடத்தில் போதிப்பதால் – அவரைப் பற்றி இடறல்படுகிறார்கள் அவருடைய சொந்த ஊர் மக்கள்.
‘இவர் இப்படித்தான். இவர் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று நாம் மற்றவர்களை மதிப்பிடுகிறோம். அந்த மதிப்பீட்டுக்கு மாறாக ஒருவர் செல்லும்போது, நம் மதிப்பீடு தவறானது என்று உணர்ந்து அதைத் திருத்திக்கொள்வதற்குப் பதிலாக, நாம் ‘சரி’ என்ற நிலையிலேயே நின்றுகொண்டு மற்றவர்களைத் தீர்ப்பிடுகிறோம்.
இப்படியான ஒரு நிகழ்வுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நிகழ்ந்தேறுகிறது. இயேசுவின் போதனை மற்றும் வல்ல செயல்கள் பற்றி அவருடைய ஊரார் இடறல்படுகிறார்கள்.
இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியா அவருடைய சொந்த ஊரில், சொந்த மக்கள் நடுவே நின்றுகொண்டு, எருசலேம் ஆலய அழிவை முன்னுரைக்கிறார். மிகவும் அழகுவாய்ந்ததும், மக்களின் அடையாளமுமான எருசலேம் ஆலய அழிவை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். அதே வேளையில் தங்களுடைய சிலைவழிபாடு மற்றும் பிற செயல்கள்தாம் கடவுள் தரும் தண்டனைக்குக் காரணம் என்பதையும் அறியாமல் நிற்கிறார்கள்.
இரண்டு நிகழ்வுகளிலுமே, கடவுளின் மனிதர்கள் – இயேசுவும் எரேமியாவும் – மக்களின் எதிர்பார்ப்பிலிருந்து விலகிச் செல்கிறார்கள். அல்லது மக்கள் அவர்களைப் பற்றிய தவறான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்விரு நிகழ்வுகளும் நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?
(அ) நாம் ஒருவர் மற்றவரைப் பார்க்கும்போது ‘தீர்ப்பிடுதல்’ என்னும் நிலையில் பார்க்கக் கூடாது. விமர்சனப் பார்வையும் எண்ணமும் வேற்றுமை எண்ணங்களைத் தூண்டி எழுப்புகிறது.
(ஆ) முற்சார்பு எண்ணங்கள் நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு திரை போல நிற்கின்றன. அவற்றைப் பற்றிய தன்னறிவு நமக்கு அவசியம்.
(இ) மற்றவர்கள் நாம் விரும்புவதுபோல செயல்பட வேண்டும் என நினைப்பது தவறு. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட தான்மையும் அடையாளமும் பணியும் இந்த உலகத்தில் இருக்கிறது என்ற நிலையில் அவற்றை மதிக்கவும் கொண்டாடவும் வேண்டும்.
நிற்க.
தடம் மாறிய எதிர்பார்ப்புகள் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை மட்டுமல்ல, நமக்கும் பிறருக்கும் உள்ள உறவையும் அந்நியப்படுத்திவிடுகின்றன என அறிந்திருக்கிறார் ‘எதிர்நோக்கின் திருப்பயணி.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 163).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: