இன்றைய இறைமொழி
வெள்ளி, 20 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 24-ஆம் வாரம், வெள்ளி
1 கொரிந்தியர் 15:12-20. லூக்கா 8:1-3
உள்ளடக்கிய சீடத்துவம்
மற்ற நற்செய்தியாளர்கள் பதிவு செய்யாத ஒரு குறிப்பை லூக்கா தன் நற்செய்தியில் பதிவு செய்கிறார்: ‘பெண்களும் இயேசுவோடு இருந்தார்கள். அவர்கள் தங்களை உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.’ இதைச் சொல்வதற்கு சற்று முன்னர், ‘பன்னிருவரும் அவருடன் இருந்தனர்’ என எழுதுகிறார் லூக்கா.
பன்னிருவரும் இயேசுவுடன் இருந்ததுபோல, சில பெண்களும் இயேசுவுடன் இருக்கிறார்கள்.
மாற்கு நற்செய்தியைப் பொருத்தவரையில், சீடத்துவம் என்பது இரண்டு பக்கங்களைக் கொண்ட ஒரு நாணயம். அவரோடு இருத்தலும், அனுப்பப்படுதலுமே சீடத்துவத்தின் இரு பணிகள். பன்னிரு திருத்தூதர்கள் இயேசுவோடு இருக்கிறார்கள், இயேசுவால் பணிக்கு அனுப்பப்படுகிறார்கள்.
லூக்கா நற்செய்தியாளர் அதே குறிப்பை எடுத்துக்கொண்டு, ‘திருத்தூதர்களை’ பன்னிருவர் என அழைப்பதன் வழியாக அவர்கள் இயேசுவோடு இருந்தார்கள், இயேசுவால் அனுப்பப்பட்டார்கள் என முன்மொழிகிறார். சற்றே ஒரு படி மேலே போய், இயேசுவோடு இருந்த பெண்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் இயேசுவுக்குப் பணிவிடை செய்கிறார்கள். இதுவே அவர்களுடைய திருத்தூதுப் பணி.
‘பணிவிடை புரிதல்’ என்பதை ‘அடிமையுணர்வு’ என்னும் ஆர்க்கிடைப்பின் பின்புலத்தில் நாம் புரிந்துகொள்ளக் கூடாது. ‘பணிவிடை’ என்பது தாழ்வான செயல் அல்ல, மாறாக, அது ஒரு மதிப்பீடு. ‘திருத்தொண்டு ஆற்றுதல்’ என்னும் பொருள்தரக் கூடிய ‘டியாகோனியா’ என்னும் சொல்லையே லூக்கா இங்கே பயன்படுத்துகிறார். தங்கள் உடைமைகளைக் கொண்டு இவர்கள் பணி செய்கிறார்கள் என்னும் லூக்காவின் குறிப்பு இவர்கள் கொண்டிருந்த பகிர்ந்த உள்ளத்தையும் குறிக்கிறது.
இந்த நற்செய்திப் பகுதி நமக்குச் சொல்வது என்ன?
(அ) சீடத்துவம் என்பது பாலினத்தோடு தொடர்புடையது அல்ல. அது பாலின பேதம் அற்றது. அல்லது இரு பாலினங்களையும் உள்ளடக்கிக்கொள்வது.
(ஆ) ஒவ்வொருவரும் தன் நிலையில் சீடத்துவத்தை ஏற்க முடியும்.
(இ) இயேசுவின் சீடத்துவம் தனிநபர் மாண்பைப் போற்றுவது. பன்னிருவரின் பெயர்களை முன்னர் குறிப்பிடுகிற லூக்கா, இங்கே பெண் சீடர்களுடைய பெயரையும் குறிப்பிடுவதன் வழியாக அவர்களுடைய மாண்பை உயர்த்துகிறார். ஆக, பெண்களின் மாண்பு இங்கே போற்றப்படுகிறது.
இன்றைய முதல் வாசகத்தில், இறந்தோர் உயிர்ப்பு என்னும் தலைப்பில் கொரிந்து நகர மக்களோடு உரையாடுகிற பவுல், இயேசுவின் உயிர்ப்பே அவர்களுடைய நம்பிக்கையின் அடித்தளம் என்பதை எடுத்துரைக்கிறார்.
பெண்கள் பற்றிய இயேசுவின் பார்வை நம்மை வியக்கவைக்கிறது. ரபிக்கள் பெண்களோடு பொதுவில் உரையாடுவதே தவறு என்று வழங்கப்பட்ட சமூகத்தில் அவர்களைத் தமக்குத் திருத்தொண்டு ஆற்றுபவர்களாக ஆற்றல்படுத்துகிறார்.
நிற்க.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ பாலினம் கடந்து ஒருவர் மற்றவரிடம் அக்கறை காட்டுகிறார்கள், ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 204)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: