• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. வெள்ளி, 21 ஜூன் 2024. உள்ளமும் உடலும்

Friday, June 21, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வெள்ளி, 21 ஜூன் 2024
பொதுக்காலம் 11-ஆம் வாரம் – வெள்ளி
2 அரசர்கள் 11:1-4, 9-18, 20. மத்தேயு 6:19-23

 

உள்ளமும் உடலும்

 

‘உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்’

 

‘கண் நலமாயிருந்தால் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்’

 

காணொலி ஒன்றில் அதன் ஆசிரியர், ‘நம் உள்ளத்தில் ஓடும் ஓர் எண்ணத்திற்கும் மற்றோர் எண்ணத்திற்கும் உள்ள இடைவெளியே நாம் யார் என்பதை உணர்த்துகிறது. இரண்டுக்கும் உள்ள இடைவெளி எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவர் மன அமைதியுடன் இருக்கிறார். இரண்டுக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருந்தால் அவர் அமைதியற்று இருக்கிறார்’ என்கிறார்.

 

நாம் கொஞ்ச நேரம் அமர்ந்து ஓடுகின்ற நம் எண்ணங்களைக் கவனித்தால், ஒரு நொடியில் பத்து இருபது என எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. வெளிப்புறத்தில் நாம் அமர்ந்திருப்பதாகத் தோன்றினாலும், நம் மூளையில் நாம் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். அங்கே ஒரு வித பரபரப்பு இருக்கிறது. சில நேரங்களில் நாம் தூங்கும்போதும் எண்ணங்கள் திரையில் ஓடுவது போல ஓடிக்கொண்டே இருக்கின்றன.

 

இவற்றை எப்படி நெறிப்படுத்துவது?

 

இயேசு மிக அழகான வாழ்க்கைப் பாடத்தைத் தருகின்றார். அதாவது, நம் உள்ளம் இங்கும் அங்கும் அலைபாயக் காரணம், இங்கும் அங்கும் நாம் செல்வத்தை அல்லது முதன்மையை வைத்திருப்பதால்தான். ‘இது செல்வம்! இது செல்வம்! அவர் செல்வம்! அவள் செல்வம்! அது செல்வம்! இதைப் பிடி! அதை முடி! இப்பவே செய்!’ என்று நம் உள்ளம் பல்வேறு செல்வங்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கின்றது. இச்செல்வங்கள் எல்லாம் பூச்சியும் துருவும் ஏறக்கூடிய செல்வங்கள். மற்றவர்கள் கன்னமிட்டுத் திருடிவிடக் கூடிய செல்வங்கள். ஆனால், இப்படி அழிவுக்குட்படாத ஒன்றின்மேல் நம் உள்ளத்தைப் பதிய வைத்தால் நம் உள்ளம் அலைபாய்வதை நிறுத்திவிடும்.

 

ஆக, முதலில், ‘இதுவே என் செல்வம்’ என்று நாம் நம் முதன்மையை வரையறுப்பதோடு, மற்ற செல்வங்களைப் புறந்தள்ள வேண்டும். மேலும், ‘இதன் மேல் கவனத்தைச் செலுத்து!’ என்று நம் உள்ளத்துக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

 

இரண்டாவதாக, இயேசு தன் சமகாலத்தில் விளங்கிய சொலவடை ஒன்றை எடுத்து, அதைத் தன் சீடர்களுக்குக் கற்பிக்கின்றார். ‘கண்தான் உடலுக்கு விளக்கு’ என்பது கிரேக்க மெய்யியல் சிந்தனை. விளக்கின் ஒளி கொண்டு நாம் பொருள்களைப் பார்க்கின்றோம். கண் ஒளி கொண்டிருப்பதால்தான் பொருள்களை நாம் பார்க்கின்றோம். மேலும் கண்களின் வழியாகத்தான் மூளை நிறைய தகவல்களைப் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, என் முன் இருப்பது மேடு, பள்ளம் என்பதை கண் அறிந்து மூளைக்குச் சொன்னால்தான், மூளை அதற்கேற்றாற் போல என் கால்களை இயக்கும். மனித அறிவும், தெரிவும், தகவல் சேகரிப்பும் கண்களைப் பொருத்தே அமைகின்றன. இத்தகைய திறன் வாய்ந்த கண் இருளாகி விட்டால், அல்லது ஒளி இழந்துவிட்டால், உடல் முழுவதும் இருளாகிறது. அது, கைகளும் கால்களும் எங்கு செல்வதென்று தெரியாமல் நின்று விடுகின்றன.

 

இயேசு முன்வைக்கும் இரண்டாவது சவால்: நாம் எத்தகையவற்றைப் பார்க்கிறோம்? எத்தகைய தகவல்களை மூளைக்கு அனுப்புகிறோம்? என்று ஆராய்ந்து பார்த்து, நாம் பார்வையைத் திருத்திக்கொள்வது, ஒளியுள்ளதாக்கிக் கொள்வது.

 

ஆக,

 

நற்செய்தி வாசகம் தரும் பாடங்கள் இரண்டு:

 

(அ) உள்ளத்தை அழியாத செல்வத்தில் பதிய வைப்பது.

 

(ஆ) உள்ளத்திற்குத் தகவல்கள் அனுப்பும் கண்கள் பற்றிக் கவனமாக இருப்பது.

 

நிற்க.

 

முதல் வாசகத்தில், பாகால் வழிபாடும் வழிபாடு சார்ந்தவற்றில் தொடர்புடையவர்களும் அழிக்கப்படுகிறார்கள். பிளவுபடாத அன்பே ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பதாக இருக்கிறது. (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 130).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: