இன்றைய இறைமொழி
வெள்ளி, 24 மே 2024
பொதுக்காலம் 7-ஆம் வாரம் – வெள்ளி
யாக்கோபு 5:9-12. மாற்கு 10:1-12
மணஉறவும் மணமுறிவும்
(அ) மையக்கருத்து (நற்செய்தி வாசகம்)
மணஉறவுக்கான கடவுளின் தொடக்க நோக்கம், மணமுறிவு உருவான பின்புலமும் பற்றி எடுத்துரைக்கிறது நற்செய்தி வாசகம். திருமணம் அல்லது மணஉறவு பற்றிய நம் புரிதல் மாறிக்கொண்டே வருகிறது. சிறிய புரிதலின்மைகூட மணமுறிவுக்கு வழிவகுக்கிறது. சகிப்புத்தன்மையும் தாராள உள்ளமும் குறைந்துவருகின்றன. திருமணத்திற்குப் புறம்பான உறவு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்றும் முன்மொழியப்படுகிறது. தியாகமும் அன்பும் நிறைந்த மணஉறவே கடவுள் ஏற்படுத்திய திருமண உடன்படிக்கையின் நோக்கமாக இருக்கிறது.
(ஆ) பாட அமைப்பு
மணமுறிவு பற்றிய பரிசேயர்களின் கேள்வி, மணஉறவு பற்றிய இயேசுவின் போதனை, மணமுறிவு பற்றிய இயேசுவின் புதிய புரிதலை சீடர்கள் கேட்டுத் தெளிகிறார்கள் என்று நகர்கிறது இன்றைய நற்செய்தி வாசகப் பாடம்.
(இ) வார்த்தைகளும் விளக்கங்களும்
1. பரிசேயர்களின் கேள்வி (வ. 2). ‘கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?’ என இயேசுவிடம் கேட்கிறார்கள் பரிசேயர்கள். ‘முறையே’ என இயேசு விடையளித்தால் திருமணம் பற்றிய கடவுளின் கட்டளையை மீறுபவராக அவரைக் குற்றம் சாட்டுவார்கள். ‘முறையில்லை’ என விடையளித்தால் மணமுறிவு பற்றிய மோசேயின் கட்டளையை மறுப்பதாக அவர்மேல் குற்றம் சாட்டப்படும். மோசேயின் கட்டளையில் தொடங்கி கடவுளின் திட்டத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார் இயேசு.
2. மணஉறவுக்கான கடவுளின் திட்டம் (வ. 6-9). படைப்பின் தொடக்கக் கதையாடல்களை மேற்கோள்காட்டி, கடவுளின் நோக்கம் ஆணும் பெண்ணும் எப்போதும் சேர்ந்திருப்பதே என வரையறுக்கிறார்: ‘ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்’ (தொநூ 1:27). ‘கணவன் தன் தாய் தந்தையை விட்டு’ (தொநூ 2:24).
3. சீடர்களின் கேள்வி (வ. 10). இயேசுவின் விடை பற்றி அவரிடம் தனிமையாகக் கேட்கிறார்கள் சீடர்கள். இயேசுவின் பாடுகள் பற்றிய புரிதலின்மை பற்றிக் கவலைப்படாத சீடர்கள், இப்போது அவரிடம் கேள்வி கேட்கிறார்கள். நமக்கு எது தேவையாக இருக்கிறதோ அதைத் தெரிந்துகொள்ளவே நாம் விரும்புகிறோம்.
4. இயேசுவின் விளக்கம் (வ. 11-12). திருமண உறவின் நிலைத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிற இயேசு, திருமண உறவை மீறுதல் அல்லது முறித்தல் என்பது விபசாரம் செய்வதற்கு ஒப்பானது – ஆறாவது கட்டளையை மீறுவது – எனச் சொல்கிறார். இவ்வாறாக, மணஉறவின் ஒன்றிப்பையும் நீடித்த தன்மையையும் முன்மொழிகிறார்.
(ஈ) முதல் வாசகம்
முணுமுணுத்தல், பொறுமையின்மை, ஆணையிடுதல் பற்றி தன் குழுமத்துக்கு எழுதுகிற யாக்கோபு, விவிலியத்தில் நாம் காண்கிற யோபுவின் பொறுமையை அவர்கள் கைக்கொள்ளுமாறு அழைக்கிறார். ‘ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை’ என்று இயேசுவின் மலைப்பொழிவு சொற்களை மேற்கோள் காட்டுகிறார் யாக்கோபு.
(உ) இறுதியாக
திருமண உறவு என்பது கடவுள் மானுடத்துக்கு வழங்கிய கொடை. கிறிஸ்து திருஅவையின்மேல் கொண்டிருக்கிற அன்பின் உருவகம். கடவுளுடைய உடனிருப்பே திருமணத்திற்கு வலிமை சேர்க்கிறது. மணமுறிவு ஏற்பட்ட குடும்பங்கள் மீண்டும் உறவில் இணைவதற்காகவும், வலுவற்ற உறவுகளுக்கு வலுவூட்டும் வண்ணம் அவர்களுக்குத் துணைநிற்பதும் நலம்.
நிற்க.
பிரமாணிக்கம், மன்னிப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை உறவு வாழ்வுக்கு அடிப்படையான பண்புகள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 106).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: