• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. வெள்ளி, 26 ஜூலை 2024. மேன்மை பொருந்திய மனிதர்!

Friday, July 26, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
வெள்ளி, 26 ஜூலை 2024
பொதுக்காலம் 16-ஆம் வாரம் – வெள்ளி
புனிதர்கள் சுவக்கீம், அன்னா, மரியாவின் பெற்றோர் – நினைவு
சீராக்கின் ஞானம் 44:1, 10-15. மத்தேயு 13:16-17

 

மேன்மை பொருந்திய மனிதர்!

 

நம் கத்தோலிக்கத் திருஅவை சில நூல்களை ‘மறைக்கப்பட்ட நூல்கள்’ அல்லது ‘ஏற்றுக்கொள்ளப்படாத நூல்கள்’ என வரையறுத்து அவற்றை விவிலியத்திற்குள் சேர்க்கவில்லை. ஆனால், அந்த நூல்கள் முன்மொழிகிற சில கருத்துகளை திருஅவையின் மரபு ஏற்றுக்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, யோசேப்பின் கையில் உள்ள லீலி மலர். இன்னோர் எடுத்துக்காட்டு, இன்று நாம் கொண்டாடுகிற புனிதர்கள் சுவக்கீம், அன்னா, மரியாவின் பெற்றோர் நினைவு.

 

மரபும் கதையாடல்களும்

 

இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘யாக்கோபின் முதல் நற்செய்தி,’ மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘மரியாவின் பிறப்பு நற்செய்தி’ என்னும் இரண்டு ஏற்றுக்கொள்ளப்படாத நூல்களின்படி, ‘அன்னா’ (எபிரேயத்தில், ‘ஹன்னா’ – அருள்) யூதேயாவில் உள்ள பெத்லகேமில் பிறந்தார். அவர் நாசரேத்தில் வாழ்ந்த சுவக்கிம் (எபிரேயத்தில், ‘யோயாகிம்’ – ஆண்டவரால் ஏற்படுத்தப்பட்ட) என்பவரை மணமுடிக்கிறார். இறைவனுக்கு உகந்த தம்பதியாக இருந்த இவர்களுக்குக் குழந்தைப்பேறு இல்லை. குழந்தைப்பேறு இல்லாததால் எருசலேம் ஆலயப்பணியிலிருந்து நீக்கப்படுகிற சுவக்கீம் தனிமையான ஓரிடத்தில் சென்று இறைவேண்டலில் நிலைத்திருக்கிறார். தன் கணவரை நீங்கிய தனிமை, குழந்தைப்பேறின்மை என்னும் வருத்தம் ஆகியவற்றால் உந்தப்படுகிற அன்னா கடவுள் முன்னிலையில் ஒரு வாக்குறுதி எடுக்கிறார். தனக்குக் குழந்தை பிறந்தால் அக்குழந்தையைக் கடவுளின் பணிக்காக ஒப்புவிப்பதாக முன்மொழிகிறார். இருவருக்கும் காட்சியில் தோன்றுகிற வானதூதர், அன்னா கருவுற்று வியக்கத்தக்க குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பதாக அறிவிக்கிறார். தங்களுடைய மகளின் பிறப்பில் மகிழ்கிற தம்பதி, அக்குழந்தைக்கு ‘மரியா’ (எபிரேயத்தில், ‘மிரியம்’ – குழந்தைக்கான விருப்பம்) எனப் பெயரிடுகிறார்கள். குழந்தைக்கு மூன்று வயது நிறைவுற்றபோது, அன்னாவின் வாக்குறுதிக்கேற்ப, மரியா எருசலேம் கோவிலுக்குக் கொண்டுசெல்லப்படுகிறார்.

 

இந்நிகழ்வு பழைய ஏற்பாட்டு அன்னாவை நமக்கு நினைவூட்டுகிறது (காண். 1 சாமு 1). குழந்தைப்பேறில்லாத அன்னா குழந்தை பெற்றவுடன் சாமுவேலை கடவுளின் பணிக்காக அர்ப்பணிக்கிறார்.

 

இன்னொரு மரபின்படி, மரியா பிறந்த சில ஆண்டுகளில் சுவக்கீம் இறந்துவிடுகிறார். தூய ஆவியாரால் தூண்டப்பட்ட அன்னா மறுமணம் செய்கிறார். அந்த மறுமணத்தின் வழியாகவே அவர் திருத்தூதர்கள் யோவான் மற்றும் யாக்கோபு (செபதேயுவின் மக்கள்), சீமோன், யூதா, இயேசுவின் சகோதரர் யாக்கோபு என்பவரின் பாட்டியாகிறார்.

 

திருக்குரானில் மரியாவின் பெற்றோர் ‘அன்னா-இம்ரான்’ என்று கொடுக்கப்பட்டுள்ளது (காண். ஸூரா அல் இம்ரான் 3:36-37).

 

திருத்தந்தை பிரான்சிஸ்

 

சுவக்கீம்-அன்னா திருநாளுக்கு அருகில் வருகிற ஞாயிற்றுக் கிழமையை ‘தாத்தா-பாட்டியர் மற்றும் வயது நிறைந்தோர் நாள்’ என 2021-ஆம் ஆண்டில் அறிவித்தார். இயேசுவின் தாய்வழி தாத்தா-பாட்டியை நாம் நினைவுகூர்கிறோம்.

 

(அன்றுமுதல் இன்று வரை நம் இல்லங்களிலும் தாய்வழி தாத்தா-பாட்டியை நாம் கொண்டாடும் அளவுக்கு தந்தைவழி தாத்தா-பாட்டியை கொண்டாடுவதில்லை. சில இடங்களில் விதிவிலக்கு இருக்கலாம்!)

 

தாத்தா-பாட்டியர் மற்றும் வயதுநிறைந்தோர்

 

(அ) யூத மரபில் முழுமையைக் குறிக்கிற எண்களில் ஒன்று ‘ஏழு‘ (7). ஒரு மனிதருடைய இருத்தலுக்கு ஏழு பேர் அவசியமாகிறார்கள் என்பதால்தான் ‘ஏழு’ என்பது முழுமையைக் குறிக்கிறது என நான் நினைக்கிறேன். ‘நான், அப்பா, அம்மா, அப்பாவின் அப்பா-அம்மா, அம்மாவின் அப்பா-அம்மா’ – என் இருத்தலின் முழுமைக்குக் காரணம் இந்த ஏழு பேர்தான். இந்த ஏழுபேரையும் உள்ளடக்கியதுதான் நான். மனித இருத்தல் அல்லது வேரூன்றுதல் தாத்தா-பாட்டியரால்தான் சாத்தியமாகிறது.

 

(ஆ) தாத்தா-பாட்டியர் சில காலங்களே நம்மோடு இருக்கிறார்கள். அவர்களின் நீட்சியாக நாம் வயதுநிறைந்தோரைக் காண்கிறோம். நம்மைச் சுற்றி வாழும் வயதுநிறைந்தோர் நமக்கு நம் தாத்தா-பாட்டியரை ஏதோ ஒரு வகையில் நினைவூட்டுகிறார்கள்.

 

(இ) 2021-ஆம் ஆண்டு தான் வழங்கிய (முதல்) செய்தியில் ‘தாத்தா-பாட்டியர் மற்றும் வயதுநிறைந்தோர் கொண்டிருக்கிற மூன்று தூண்களில் நம் குடும்பங்கள் நிற்கின்றன: கனவுகள், நினைவு, இறைவேண்டல்’ எனப் பதிவு செய்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். வாழ்வைப் பற்றிய பரந்த பார்வை, மனிதர்கள்பற்றிய மெய்யறிவு, தங்களுடைய துறையில் ஆழ்ந்த அறிவு, வாழ்வின் சின்ன விடயங்களையும் போற்றிக் கொண்டாடும் குழந்தைஉள்ளம் ஆகியவற்றை நாம் தாத்தா-பாட்டியர்;-வயதுநிறைந்தோரில் காண்கிறோம்.

 

இறைவார்த்தையின் ஒளியில்

 

‘மேன்மை பொருந்திய மனிதரையும் நம் மூதாதையரையும் அவர்களது தலைமுறை வரிசைப்படி புகழ்வோம். அவர்களும் இரக்கமுள்ள மனிதர்களே’ என்னும் சொற்களால் மூதாதையர் புகழ்ச்சியைத் தொடங்குகிறார் சீராக்கின் ஞானநூல் ஆசிரியர். மனிதர்களின் மேன்மை அவர்களுடைய இரக்கத்தில் வெளிப்படுகிறது என நாம் புரிந்துகொள்வோம். மனித வாழ்வை நாம் இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம்: மூளையின்படி வாழும் வாழ்வு, இதயத்தின்படி வாழும் வாழ்வு. ஏறக்குறைய 50 அல்லது 60 ஆண்டுகள்வரை நாம் மூளையின்படி வாழ்கிறோம் – போட்டி, பொறாமை, ஒப்பீடு, சண்டை, ஓட்டம், சேகரிப்பு என வாழ்க்கை ஓடுகிறது. 60 ஆண்டுகளுக்குப் பின்னர் நம் வாழ்வின் போக்கு சற்றே மாறுகிறது. இரக்கம், கனிவு, அமைதி பிறக்கிறது. மற்றவர்களை அவர்கள் இருப்பதுபோல ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறோம். நாம் வாழும் இந்தப் பொழுதே இதயத்தின்படி வாழத் தொடங்குதல் நலம்.

 

நற்செய்தி வாசகத்தில், ‘இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், காணவில்லை’ என்று சொல்லி தம் சீடர்களின் மேன்மையை எடுத்துரைக்கிறார் இயேசு. நம் தாத்தா-பாட்டியர் நம் கண்கள் வழியாக அவற்றைக் காண்கிறார்கள் என நான் புரிந்துகொள்கிறேன். ஒவ்வொரு தலைமுறையும் அதற்கென ஆசீரைக் கொண்டிருக்கிறது. இயேசுவின் சமகாலத்தவர் இயேசுவைக் கண்டார்கள். ஆனால், நாம் அவரைக் காணவில்லை. மனித வாழ்வு என்னும் நீடித்த ஆற்றின் ஒரு சிறு பகுதியாக நாம் வந்துசெல்கிறோம் என்பதை இயேசுவின் சொற்கள் நமக்கு உணர்த்துகின்றன. நம் மூதாதையரின் தோள்களில் நின்று நாம் உலகத்தைக் காண்கிறோம். நம் காலம் முடிந்ததும் நாம் மறைகிறோம்! ஆறு ஓடிக்கொண்டே இருக்கிறது.

 

இன்றைய நாளில், நம் தாத்தா-பாட்டியரை நினைவுகூர்ந்து, அவர்களைப் பற்றிய அறிவை நம் பெற்றோரிடமிருந்து பெறுவோம். தாத்தா-பாட்டியர், வயதுநிறைந்தோர் நிலையில் நாம் இருந்தால் நம் அனுபவத்தை நம் குழந்தைகளுக்குக் கொடுப்போம்.

 

நிற்க.

கைகளை விரித்துக் கொடுக்க கற்றுக்கொள்வதே சிறந்தது என்பார்கள் எதிர்நோக்கின் திருப்பயணிகள் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 157).

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: