இன்றைய இறைமொழி
வெள்ளி, 27 செப்டம்பர் ’24
பொதுக்காலம் 25-ஆம் வாரம், வெள்ளி
சபை உரையாளர் 3:1-11. லூக்கா 9:18-22
வாழ்வின் நிரப்புதன்மை!
வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் இரட்டைதன்மை எதிரெதிர் துருவநிலை அல்ல, மாறாக, நிரப்புதன்மை என்றும், அவற்றை ஒன்றாக இணைப்பவர் கடவுளே என்றும் முன்மொழிகின்றன இன்றைய வாசகங்கள். மகிழ்ச்சியையும் துன்பத்தையும், நேரத்தையும் நிரந்தரத்தையும், மனித வலுவின்மையையும் இறைவனின் வல்லமையையும் ஒன்றாக இணைப்பவர் கடவுளே!
(அ) வாழ்வின் காலநிலைகள்
‘பிறப்பதற்கு ஒரு காலம். இறப்பதற்கு ஒரு காலம். அழுவதற்கு ஒரு காலம். மகிழ்வதற்கு ஒரு காலம்’ என்று எதிரெதிர் காலங்களைக் குறிப்படுகிறார் ஆசிரியர். மேலோட்டமாகப் பார்த்தால், இவை ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. ஆனால், சற்றே ஆழமாகப் பார்த்தால், ஒன்று மற்றொன்றை நிரப்புகிறது அல்லது இணைக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு காலமும் பொருளுள்ளதாக இருக்குமாறு ஆண்டவராகிய கடவுள் காலங்களை வரையறுத்துள்ளார். நல்ல காலம், கெட்ட காலம் என்று வாழ்க்கை பிரிந்துகிடக்கவில்லை, மாறாக, நன்மையும் தீமையும் ஒன்றையொன்று நிரப்பிக்கொள்கின்றன. எதிரெதிர் காலங்கள் இணைந்தே வாழ்வுக்கு நிறைவை வழங்குகின்றன.
வாழ்வை எதிரெதிர் துருவங்கள் எனப் பார்ப்பதற்குப் பதிலாக, நல்லது கெட்டது எனக் காலங்களைப் பிரிப்பதற்குப் பதிலாக, அவற்றின் பொருந்துநிலையை அல்லது நிரப்புதன்மையை உணர்ந்துகொள்தல் நலம். கடவுளின் திட்டத்தில் ஒவ்வொரு காலத்துக்கும் பொருள் உண்டு.
(ஆ) மீட்பும் துன்பமும் ஒன்றையொன்று நிரப்புபவை
‘நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?’ என்று தம் சீடர்களிடம் கேட்கிறார் இயேசு. ‘நீர் கடவுளின் மெசியா’ எனப் பதில் தருகிறார் பேதுரு. இயேசு உடனடியாக தம் பாடுகள், துன்பம், புறக்கணிப்பு, இறப்பு, உயிர்ப்பு பற்றிப் பேசுகிறார் இயேசு. சீடர்களால் இரண்டையும் பொருத்திப் பார்க்க இயலவில்லை. ஒன்றைப் பற்றிக்கொண்டு மற்றதை விட்டுவிட நினைக்கிறார்கள். மாட்சியும் துன்பமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என நினைக்கிறார்கள். ஆனால், அவை ஒன்றோடொன்று பொருந்துபவை எனக் கற்றுத் தருகிறார் இயேசு.
மாட்சிக்கான இயேசுவின் வழி சிலுவையில்தான் அடங்கியுள்ளது. மெசியா நிலையையும் சிலுவை இறப்பையும் ஒரே நாணயத்தின் இரு துருவருங்கள்போலப் பார்க்கிறார் இயேசு. வாழ்வின் துருவங்களை இணைத்துப் பார்க்க நமக்குக் கற்றுத் தருகிறார்.
(இ) நேரத்தையும் நிரந்தரத்தையும் இணைப்பவர் கடவுள்
‘கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார். காலத்தைப் பற்றிய உணர்வை (நிரந்தரத்தை) மனிதருக்குத் தந்திருக்கிறார்’ என எழுதுகிறார் சபை உரையாளர். நிரந்தரத்தில் வாழ்கிற கடவுள் நேரத்தில் செயலாற்றுகிறார். நேரத்துக்குள் பிறந்து மடியும் மனிதர்கள் நிரந்தரம் பற்றிய உணர்வுடன் வாழ்கிறார்கள். நாம் நிகழ்காலத்தில் வாழ்ந்தாலும் எதிர்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் நம்மால் நீண்டுகொள்ள முடிகிறது. நம் நேரத்தின் வழியாகவே கடவுளின் நிரந்தரத்துக்குள் நாம் நுழைகிறோம்.
இந்தப் பூமிப்பரப்பில் நாம் மேற்கொள்ளும் பயணம் காலத்துக்கு உட்பட்டது. இந்தக் காலம் கடவுளுடைய நிரந்தரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. நேரமும் நிரந்தரமும் ஒன்றையொன்று நிரப்பக்கூடியதாக இருக்கிறது.
நிற்க.
அனைத்தையும் கடவுள் அவருடைய நேரத்தில் செம்மையாகச் செய்வார் என்ற நம்பிக்கையில் கடவுளின் நிரந்தரம் நோக்கிப் பயணம் செய்கிறார்கள் ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்.’ (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 210)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: