• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. வெள்ளி, 29 மார்ச் 2024. மூன்று உருவங்கள்

Friday, March 29, 2024   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி Easter Season Eastertide

இன்றைய இறைமொழி
வெள்ளி, 29 மார்ச் 2024
புனித வெள்ளி – திருப்பாடுகளின் வெள்ளி
எசாயா 52:13-53:12. எபிரேயர் 4:14-16, 5:7-9. யோவான் 18:1-19:42

 

மூன்று உருவங்கள்

ஆண்டவருடைய திருப்பாடுகளின் கொண்டாட்டத்தில் நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்;த்தை வழிபாடு முன்மொழியும் மூன்று உருவங்களை இன்று நாம் சிந்திப்போம்: துன்புறும் ஊழியன், தலைமைக்குரு, பாஸ்கா செம்மறி.

 

(அ) துன்புறும் ஊழியன்

இறைவாக்கினர் எசாயா நூலில் காணப்படும் நான்கு துன்புறும் ஊழியன் பாடல்களில், இறுதியாக உள்ளது இந்தப் பாடல் (முதல் வாசகம்). பாபிலோனிய அடிமைத்தனத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டுள்ள இந்தப் பாடலில் காணப்படும் ‘ஊழியர்’ என்னும் சொல் ‘இறைவாக்கினர் எசாயா,’ ‘அரசர் யெகோயாக்கின்,’ அல்லது ‘ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களை’ குறிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. கிறிஸ்தவப் புரிதலில், துன்புறும் ஊழியன் இயேசுவையே குறிக்கிறது. இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை முன்னுரைப்பதாக அமைவதால், இந்த இறைவாக்குப் பகுதி இயேசுவில் நிறைவேறுவதாக நாம் பொருள்கொள்கிறோம்.

 

துன்புறும் ஊழியன் நான்கு நிலைகளில் இயேசுவின் உருவமாக இருக்கிறார்: (1) துன்புறும் ஊழியன் நிராகரிப்பையும், அவமானத்தையும், துயரத்தையும் அனுபவிக்கிறார். இயேசு தம் சொந்த இனத்து மக்களால் நிராகரிக்கப்படுகிறார். தலைமைக்குருவாலும் ஆளுநராலும் அவமானத்துக்கு உள்ளாகிறார். சிலுவை துயரம் ஏற்கிறார். (2) துன்புறும் ஊழியன் அனுபவிக்கும் துன்பம் மற்றவர்களுக்காக அல்லது மற்றவர்களுக்கானதாக இருக்கிறது. துன்பம் யாருக்கு உரியதோ அவர்கள் துன்பப்படாமல் இருக்கும்பொருட்டு, துன்பத்துக்கு உரியவர் அல்லாத இவர் அவர்களுக்கான பதிலியாக மாறுகிறார். அனைவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாக பாவமே அறியாத இயேசு சிலுவைத் துன்பம் ஏற்கிறார். (3) துன்புறும் ஊழியன் தன்னைத் துன்புறுத்துவோருக்கு எந்தவொரு மறுமொழியும் பகரவில்லை. அவர்களைக் கடிந்துரைக்கவோ, சபிக்கவோ இல்லை. அவருடைய மௌனம் அவருடைய பொறுமையின், மன்னிப்பின், தாராள உள்ளத்தின் அடையாளமாமக இருக்கிறது. தம்மைத் துன்புறுத்தியவர்களுக்குத் துன்பம் நினைக்கவில்லை இயேசு. (4) துன்புறும் ஊழியன் அவமானம் மற்றும் இகழ்ச்சிக்கு உள்ளானாலும் ஆண்டவராகிய கடவுள் அவரை உயர்த்துகிறார். அவர் மேன்மைப்படுத்தப்பட்டு மாட்சி அடைகிறார். இயேசு கிறிஸ்து துன்பத்தின் வழியாகவே உயிர்ப்புக்குக் கடந்து செல்கிறார்.

 

துன்பம் என்னும் வாழ்வியல் எதார்த்தத்தை நமக்குக் கற்றுத் தருகிறார் துன்புறும் ஊழியன். துன்பம் வராது என்னும் போலியான வாக்குறுதியைத் தரவில்லை. மாறாக, துன்பத்தின் நடுவில் பொறுமையுடனும் அமைதியுடனும் துணிவுடனும் இருக்கிற நபர் அனைத்துத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்கிறார்.

 

(ஆ) தலைமைக்குரு

இரண்டாம் வாசகம் முன்மொழிகிற சொல்லோவியம் தலைமைக்குரு. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் ஆண்டவராகிய இயேசுவைத் தனப்பெரும் தலைமைக்குருவாக முன்மொழிகிறார். இயேசு லேவி குலத்தில் பிறந்தவர் அல்லர், அவருடைய பணிவாழ்வில் அவர் குருக்களுக்கும் ஆலயத்துக்கும் எதிரானவராக இரக்கிறார். பலரும் இடறல்படும் வண்ணம் சிலுவை இறப்பை ஏற்கிறார். மெல்கிசெதேக்கின் முறைப்படி என்றும் தலைமைக்குருவாக இயேசு இருப்பதாச் சொல்கிற ஆசிரியர், ‘ஆண்டவர்பணியில் நம்பிக்கைக்குரிய தன்மையும், மனிதப் பணியில் இரக்கமும் உள்ளவராக’ அவர் இருக்கிறார் என மொழிகிறார்.

 

இயேசு என்னும் தலைமைக்குருவின் பண்புகள் எவை? (1) எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர். தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசுவின் சோதனைகள் பற்றிச் சிந்திக்கிறோம். வலுவின்மை, நொறுங்குநிலை ஆகியவற்றை இயேசு ஏற்றவராக இருக்கிறார். (2) அவர் உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி மன்றாடிய நிகழ்வு இயேசு கெத்சமனித் தோட்டத்தில் இயேசு கண்ணீர் விட்டதையும், தம் மனித இயல்பில் துன்பத்தை நீக்கிவிடுமாறு கடவுளை வேண்டியதையும் குறிக்கிறது. (3) இயேசுவின் துன்பம் அவரை நிறைவுள்ளவராக மாற்றுகிறது – இயேசு உயிர்ப்புக்குக் கடந்து பேகிறார்.

 

இன்று நாம் வாசிக்கக்கேட்ட யோவான் நற்செய்தியாளர் எழுதிய பாடுகளின் வரலாற்றின்படி, இயேசுவின் இறுதிச் சொற்களாக இருப்பவை, ‘எல்லாம் நிறைவேறிற்று.’ எருசலேம் ஆலயத்தில் பலி செலுத்துவிட்டு வெளியே வருகிற தலைமைக்குரு கூடியிருக்கிற மக்களைப் பார்த்து, ‘இது முடிந்தது, ‘இது நிறைவேறிற்று’ என்கிறார். இயேசு இறப்பின்போது தலைமைக்குரு போல அனைத்தையும் தம் கட்டுக்குள் வைத்தவராக, தம்மையே மனமுவந்து கையளித்து, ‘எல்லாம் நிறைவேறிற்று’ என்கிறார்.

 

‘நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக’ என அழைக்கிறார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர். இன்றைய நாளில் நாம் கடவுளின் இரக்கத்தைப் பெற்றுள்ளோம் என்பதை மனத்தில் நிறுத்தி, பயம், குற்றவுணர்வு, அவமானம் விடுத்து அவர்முன் செல்வோம்.

 

(இ) பாவம் போக்கும் ஆட்டுக்குட்டி

யோவான் நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் தம்முடைய சீடர்களுக்கு இயேசுவை அடையாளப்படுத்தும் நிகழ்வில், ‘இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி. ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவம் போக்குபவர்’ (காண். யோவா 1:29) என மொழிகிறார். யோவான் நற்செய்தியின்படி, இயேசு யூதர்களின் பாஸ்கா திருநாளன்று சிலுவையில் கொல்லப்படுகின்றார். எருசலேம் ஆலயத்தில் பாஸ்கா ஆடு பலியிடப்படும் பிற்பகல் 3 மணிக்கு இயேசுவும் உயிர்விடுகிறார். அங்கே பலி செலுத்துகிற தலைமைக்குரு வேறு, பலிப்பொருள் வேறு. ஆனால், இங்கே இயேசுவே தலைமைக்குருவாகவும் பலிப்பொருளாகவும் இருக்கிறார் (காண். எபி 9:12).

 

‘ஆட்டுக்குட்டி’ என்னும் உருவகம் நமக்கு இஸ்ரயேல் மக்களின் பாவம் போக்கும் திருநாளான ‘யோம் கிப்பூர்’ என்னும் திருவிழாவையும் (காண். லேவி 16) நினைவூட்டுகிறது. பாடத்தின்படி, ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிற இத்திருநாளில், முதலில் தலைமைக்குரு தன் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒரு கன்றுக்குட்டியைப் பலியிடுகிறார். பின்னர் அவர்முன் இரு ஆடுகள் கொண்டுவரப்படுகின்றன. அவற்றின் மீது சீட்டு குலுக்கப்பட்டு, ஓர் ஆடு பாவம் போக்கும் பலியாக ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படுகிறது. இரண்டாவது ஆடோ ஊரின் நடுவே அனுப்பப்படுகிறது. அதனுடைய முடியைப் பிடித்து இழுத்து, அதன்மேல் துப்பி, தங்களுடைய பாவங்களை அதன்மேல் சுமத்தி ஊருக்கு வெளியே அது துரத்திவிடப்படுகிறது. இயேசு ஒரே நேரத்தில் இந்த இரண்டு ஆடுகள்போல இருக்கிறார். முதல் ஆடு போல அனைவருடைய பாவங்களுக்கான கழுவாயாக மாறுகிறார். இரண்டாவது ஆடு போல அனைவருடைய துன்பங்களையும் ஏற்றவாறு ஊருக்கு வெளியே கல்வாரிக்குச் செல்கிறார். இதையே எசாயா இறைவாக்காக உரைக்கிறார்: ‘அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்’ (எசா 53:12).

 

புனித பவுல் இயேசுவை பாஸ்கா ஆடு என உருவகப்படுத்துகிறார்: ‘பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள் … நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்’ (1 கொரி 5:7)

 

மேற்காணும் இயேசுவின் மூன்று உருவங்களும் நமக்குக் கற்றுத்தருபவை எவை?

 

(அ) மீளுந்தன்மை அல்லது எதிர்த்தகைவு (resilience)

துன்புறும் ஊழியன் துன்பங்களை அனுபவித்தாலும் துன்பத்திலிருந்து எழுகிறார், மாட்சி அடைகிறார். நாம் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் துன்பம் ஏற்கும்போது நாமும் உயர்த்தப்படுகிறோம். யாருடைய கண்களில்? நம்முடைய கண்களில்! துன்பங்கள் வழியாகவே வாழ்க்கை நகர்கிறது. ஒவ்வொரு பொழுதும் துன்பத்தை எதிர்கொண்டு நிற்கும் துணிவு அவசியம்.

 

(ஆ) இரக்கம்

நம் ஆண்டவராகிய கிறிஸ்து அமர்ந்திருக்கும் அரியணை நீதியின் அரியணை அல்ல. மாறாக, இரக்கத்தின் அரணை. நீதியின்படி நாம் தண்டனைக்கு உரியவர்கள் ஆயினும் இரக்கத்தின்படி அவர் நம்மைத் தழுவிக்கொள்கிறார். தாமே சோதனைக்கு உட்பட்டதால், நாம் சோதனையில் விழுந்த நேரங்களை அவர் பொறுத்துக்கொள்கிறார். இயேசுவின் இரக்கத்தைப் பெறுகிற நாம் அதை ஒருவர் மற்றவருக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்.

 

(இ) மன்னிப்பு

ஆண்டவராகிய கடவுள் உலகின் பாவத்தைப் போக்கிவிட்டார். பாவம் என்னும் எதிரியின் வலையிலிருந்து நம்மை விடுவித்துவிட்டார். அவருடைய மன்னிப்பை நாம் இன்று பெற்றுள்ளோம். இந்த நிலையில் நம்மை நாமே முதலில் மன்னித்து, ஒருவர் மற்றவருக்கு மன்னிப்பு என்னும் கொடையை வழங்க வேண்டும்.

 

துன்புறும் ஊழியன், தலைமைக்குரு, கடவுளின் ஆட்டுக்குட்டி என்னும் உருவங்களை இன்றும் நாம் அன்றாட வழிபாட்டின் வழியாக அறிக்கையிட்டுக் கொண்டாடுகிறோம். நாம் கொண்டாடுபவற்றை வாழ்வாக்கிக்கொள்தல் நலம்!

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்

 


 

Share: