இன்றைய இறைமொழி
வெள்ளி, 3 மே 2024
பாஸ்கா காலம் 5-ஆம் வாரம் – வெள்ளி
1 கொரி 15:1-8. யோவா 14:6-14
புனித பிலிப்பு மற்றும் சிறிய யாக்கோபு – விழா
கொடையும் கடமையும்
இன்று நம் தாய்த் திருஅவை புனித பிலிப்பு மற்றும் புனித சிறிய யாக்கோபு என்னும் இரண்டு திருத்தூதர்களின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறது.
புனித பிலிப்பு கிரேக்க, சிரியா, மற்றும் ஃபிர்கியா நாடுகளில் மறைபரப்பு பணி செய்ததாக பாரம்பரியம் குறிப்பிடுகின்றது. யோவான் நற்செய்தியில் பிலிப்பு அழைக்கப்படும் நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருடைய சொந்த ஊர் பெத்சாய்தா. அந்திரேயா மற்றும் பேதுருவும் இதே ஊரைச் சார்ந்தவர்கள் என யோவான் தொடர்பை ஏற்படுத்துகின்றார். திருமுழுக்கு யோவான் இயேசுவைச் சுட்டிக்காட்டி, ‘இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி!’ என்று சொல்லும் நிகழ்வில் பிலிப்பு திருமுழுக்கு யோவானின் சீடராக இருக்கின்றார். நத்தனியேல் என அழைக்கப்படும் பார்த்தலோமேயுவை இயேசுவிடம் அழைத்து வந்தவர் பிலிப்பு. ஐயாயிரம் பேருக்கு எப்படி உணவு அளிப்பது என்ற கேள்வியை இயேசுவிடம் கேட்பவரும், நம்மிடம் இரண்டு அப்பங்கள் மட்டுமே உள்ளன என்று சொன்னவரும் பிலிப்பே. மேலும், இயேசுவைக் காண விரும்பிய கிரேக்கர்களை அந்திரேயாவிடம் அழைத்துச் சென்றவர் இவரே (காண். யோவா 12:21). மேலும், இறுதி இராவுணவில், ‘தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும்!’ என்று இயேசுவிடம் சொன்னவர் பிலிப்பு (நற்செய்தி வாசகம்). ஆக, யோவான் நற்செய்தியில் பிலிப்பு ஒரு முதன்மையான கதைமாந்தராக விளங்குகின்றார்.
‘பிலிப்புவின் நற்செய்தி’ என்ற ஒரு நூல் தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும், ‘பிலிப்புவுக்கு பேதுரு எழுதிய கடிதம்’ என்னும் ஏற்றுக்கொள்ளப்படாத நூலில், திருத்தூதர்கள் அனைவருடனும் வந்து இணைந்துகொள்ளுமாறு ஒலிவ மலைக்கு வாரும் என்று பேதுரு பிலிப்புவுக்கு எழுதுகிறார். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் பிலிப்பு தானாக மறைபரப்புப் பணியைத் தொடங்கியிருக்கிறார். இந்த நேரத்தில் பேதுரு அவரைத் திரும்ப அழைப்பது போல இருக்கிறது இக்கடிதம். ‘பிலிப்புவின் பணிகள்’ என்னும் இன்னொரு நூலில் பிலிப்பு ஆற்றிய பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிலிப்பு சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என ஒரு மரபும், அவர் தலை வெட்டுண்டு இறந்தார் என இன்னொரு மரபும் சொல்கின்றன.
நாம் இலத்தீன் திருஅவையில் பயன்படுத்தும் சிலுவையை வடிவமைத்தவர் பிலிப்பு. பிலிப்பு கையில் ஏந்தியிருக்கும் சிலுவையில், இரண்டு அப்பங்கள் உருவகங்களாக சில இடங்களில் வரையப்பட்டுள்ளன.
புனித சின்ன யாக்கோபு என்பவர் பெரிய யாக்கோபிலிருந்து வித்தியாசப்படுத்துவதற்காக அவ்வாறு அழைக்கப்படுகின்றார். பெரிய யாக்கோபுவை செபதேயுவின் மகன் என்றும், சின்ன யாக்கோபுவை அல்பேயுவின் மகன் என்றும் நற்செய்தயாளர்கள் அழைக்கின்றனர். அல்பேயுவின் மகன் யாக்கோபு என்னும் சின்ன யாக்கோபை, ‘இயேசுவின் சகோதரர்’ என அடையாளப்படுத்துகின்றார் புனித எரோணிமு. இவரை மத்தேயுவின் சகோதரர் என்றும் சிலர் அழைப்பதுண்டு. ஏனெனில், மத்தேயுவின் தந்தை பெயரும் அல்பேயு என வழங்கப்பட்டுள்ளது (காண். மாற் 2:14, 3:18)
இன்று நாம் கொண்டாடும் புனிதர்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) திருத்தூதர்கள் இயேசுவையும் நம்மையும் இணைக்கும் பாலங்கள். இயேசுவை நாம் இவர்கள் கண்கள் வழியாகவே பார்க்கின்றோம், இவர்களின் கரங்கள் வழியாகவே தொடுகின்றோம். நமக்குப் பின் வரும் நம் தலைமுறைகளுக்கு நம் வழியாக பாலங்கள் நீள்கின்றன. நாமும் திருத்தூதர்களின் நம்பிக்கையின் நீட்சிகளே. இன்றைய முதல் வாசகத்தில், ‘நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்தது’ இதுவே என நற்செய்தியின் மேன்மையையும் அதற்கான பொறுபு;புணர்வையும் எடுத்துரைக்கிற பவுல், நற்செய்தியைப் பெற்றுக்கொள்கிற அனைவரும் மற்றவர்களிடம் அதை ஒப்படைக்க வேண்டியதன் கட்டாயத்தையும் எடுத்துரைக்கிறார். ‘பெற்றுக்கொள்தல்,’ ‘ஒப்படைத்தல்’ (‘வழங்குதல்’) என்று இரு தன்மைகள் உண்டு நற்செய்திக்கு. ஒன்றைப் போலவே மற்றொன்றும் முக்கியமானது.
(ஆ) உரையாடும் பிலிப்பு. பிலிப்பு எதார்த்தமாகப் பேசுபவராகவும், தன் பேச்சுக்கலையால் பலரின் நல்லெண்ணத்தை வென்றவராகவும் நமக்குத் தெரிகிறார். உரையாடல் என்பது ஒரு கலை. குறைவாகப் பேசி, நிறைவாகக் கேட்பவரே உரையாடலில் சிறக்க முடியும். இன்று நாம் ஒருவர் மற்றவருடன் உரையாட பிலிப்பு நம்மைத் தூண்டுகிறார். இறுதி இராவுணவில் இயேசுவோடு உரையாடுகிற பிலிப்பு, தந்தையைக் காண விழைகிறார். தன்னைக் கடந்து நிற்பவர் கடவுளோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
(இ) திரும்பாத திடம். திருத்தூதர்கள் தங்களின் நம்பிக்கைக்காக, தாங்கள் பெற்ற இயேசு அனுபவத்திற்காக உயிர் துறக்கவும் துணிகின்றனர். ஒருபோதும் தங்களின் முந்தைய வாழ்க்கை நோக்கித் திரும்பவில்லை அவர்கள். நம்பிக்கைப் பயணத்திலும், இறையழைத்தல் பயணத்திலும் திரும்பாத திடம் நல்லது.
நிற்க.
நற்செய்திப் பணி என்பது ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களுக்கும் துறவியருக்கும் மட்டும் உரியது அல்ல. திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் தான் அழைக்கப்பட்ட நிலையில் நற்செய்திப் பணி ஆற்றும் பொறுப்பைப் பெறுகிறார். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 88)
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: