இன்றைய இறைமொழி
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 21-ஆம் வாரம் – வெள்ளி
1 கொரிந்தியர் 1:17-25. மத்தேயு 25:1-13
ஐந்தும் ஐந்தும்
இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி மத்தேயு நற்செய்தி நூலில் மட்டுமே நாம் காணும் ஓர் உவமை ஆகும். பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டு நம் ஆன்மிக வாழ்க்கைக்கான பாடங்களை வழங்குகிறது:
(அ) தயார்நிலை: தயார்நிலையில் இருத்தலின் அவசியம் என்பதே உவமையின் மையக்கருத்து. முன்மதி உடையவர்கள் தயார்நிலையில் இருக்கிறார்கள். நம்பிக்கையைப் பற்றிக்கொண்ட அவர்கள் தங்கள் விளக்குகளை ஒளிரச் செய்கிறார்கள். அறிவிலிகளோ தங்கள் விளக்குகள் அணைந்து நிற்கிறார்கள்.
(ஆ) தனிப்பட்ட பொறுப்புநிலை: ஆன்மிக வாழ்வு என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பொறுப்புணர்வு. நம் விளக்கு எரியுமாறு காத்துக்கொள்வது நம் பொறுப்பு. கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு தனிப்பட்ட உறவாகும். அதை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கவோ, மாற்றவோ, மற்றவரிடமிருந்து கடன் வாங்கவோ முடியாது.
(இ) குழுமம்: ஒவ்வொருவரும் தன் விளக்கு அணையாமல் காத்துக்கொள்ளும் பொறுப்பைப் பெற்றிருந்தாலும், மணமகனைச் சந்திக்கும் நிகழ்வு குழும நிகழ்வாகவே அமைகிறது. குழுமம் நம்பிக்கை வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது ஆகும்.
(ஈ) எதிர்பாராத நேரம்: மணமகனுடைய வருகையின் நேரம் யாவருக்கும் மறைவாக இருக்கிறது. அவர் தான் விரும்பிய நேரத்தில் வருகிறார். அவரைக் கேள்வி கேட்பார் எவரும் இல்லை. நம்பிக்கையில் விடாமுயற்சி அவசியம்.
(உ) தயாரிப்பின்மையின் தாக்கம்: தயார்நிலையில் இல்லாத அறிவிலிகள் வீட்டுக்குள் நுழைய இயலவில்லை.
(ஊ) விண்ணரசு: தயாராகவும், விழிப்பாகவும், பொறுமையாகவும் இருப்பவர் விண்ணரசுக்குள் நுழைகிறார். ஞானநூல்கள்போல உவமை இறுதியில் தெரிவு ஒன்றை முன்மொழிகிறது. தான் எந்த ஐந்தில் பொருந்துபவர் என்பதை வாசகரே உறுதிசெய்ய வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில், கொரிந்து நகருக்கு எழுதுகிற பவுல், சிலுவையின் மேன்மை பற்றி எடுத்துரைக்கிறார். அவமானம், நொறுங்குநிலை, நெருடலின் அடையாளமாக இருந்த சிலுவை மீட்பின் சின்னமாக மாறுகிறது.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் இறைவேண்டல், நற்செயல்கள், அருளடையாளங்கள் வழியாகத் தங்களுடைய விளக்குகள் அணையாமல் காத்துக்கொள்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 186).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: