இன்றைய இறைமொழி
வெள்ளி, 6 செப்டம்பர் 2024
பொதுக்காலம் 22-ஆம் வாரம், வெள்ளி
1 கொரிந்தியர் 4:1-5. லூக்கா 5:33-39
கடவுளின் நேரம் அறிதல்
நேரம் பற்றிய அறிவு அல்லது காலம் பற்றிய உணர்வே மனிதர்களாகிய நம்மை விலங்குகள் மற்றும் தாவரங்களின் உலகிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. கடவுள் செயலாற்றும் நேரத்தை நாம் தேர்ந்து தெளிய இன்றைய வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. கடவுளின் நேரம் நம் நேரத்திலிருந்து மாறுபடுகிறது. நம்மை கடவுளின் காலத்திட்டத்திற்கு ஏற்றாற்போல ஒருங்கமைத்துக்கொள்வதே ஆன்மிக ஞானம். இவ்வாறு செயல்படும்போது எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், இவ்வுலகின் அழுத்தங்கள் ஆகியவற்றிலிருந்து நாம் விடுதலை பெறுகிறோம்.
(அ) கடவுளின் நீதியையும் நேரத்தையும் ஏற்றுக்கொள்தல்
கடவுள் நம் எண்ணங்களை அறிபவர் மட்டுமல்ல, சரியான நேரத்தில் அவற்றை வெளிப்படுத்துபவர் என கொரிந்து நகர மக்களுக்கு எழுதுகிறார் பவுல் (முதல் வாசகம்). மனித முறைமைகளின்படி நாம் ஒருவர் மற்றவருக்குத் தீர்ப்பிடுதல் கூடாது. கடவுளின் நீதியும் தீர்ப்பும் வெளிப்படுமாறு நாம் காத்திருக்க வேண்டும்.
கடவுளின் தீர்ப்புக்கும் நேரத்துக்கும் காத்திருக்க வேண்டுமெனில் நாம் பொறுமையையும் தாழ்ச்சியையும் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் பார்க்கிற பார்வை அரைகுறையானது. கடவுளின் பார்வையோ அகன்றது. விரைவான விமர்சனங்கள் வழியாகவும் அவசரமான தீர்வுகள் வழியாகவும் நாம் துன்புறுகிறோம். ஆனால், கடவுளின் காலத்திற்காகக் காத்திருக்கும்போது நாம் மகிழ்ச்சியும் நிறைவும் பெறுகிறோம்.
(ஆ) நம் ஆன்மிக வாழ்வின் காலநிலைகளை அறிந்துகொள்வது
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நோன்பு பற்றிய வினாவுக்கு விடையளிக்கிற இயேசு, ஆன்மிகச் செயல்பாடுகள் காலத்திற்கு உட்பட்டவை எனவும், காலத்திற்கேற்றாற்போலவே அவற்றைக் கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுக்கிறார். நோன்பு இருப்பதற்கும் மகிழ்ந்து கொண்டாடுவதற்கும் வேறு வேறு காலங்கள் இருக்கிறது என்பதை மொழிகிற இயேசு அவற்றை நாம் மாற்றலாகாது என அறிவுறுத்துகிறார். மேலும், ‘மணமகன்,’ ‘புதிய திராட்சை இரசம்,’ ‘புதிய ஆடை’ என்னும் சொல்லோவியங்கள் வழியாக தாம் புதிய மணமகன் என்பதை முன்மொழிகிறார். புதிய ஆடையும் புதிய திராட்சை இரசமும் புதியனவற்றோடு மட்டுமே பொருந்திச் செல்லும்.
ஆன்மிக வாழ்வின் காலநிலைகளைக் கண்டுகொள்ள நம்மை அழைக்கிறது நற்செய்தி வாசகம். இயற்கையில் காலநிலை மாற்றங்கள் இருப்பதுபோல ஆன்மிக வாழ்விலும் காலநிலை மாற்றங்கள் உள்ளன. சில நேரங்களில் நாம் நோன்பிருக்கவும், சிந்திக்கவும், மனமாறவும் வேண்டும். சில நேரங்களில் மகிழ்ந்திருக்கவும் புதியனவற்றைத் தழுவிக்கொள்ளவும் வேண்டும். கடவுளின் காலத்தைக் கண்டறிதல் வழியாகவே கடவுளின் செயல்பாடுகளை நாம் தேர்ந்து தெளிய இயலும்.
(இ) கடவுளின் புதிய வழிகளுக்கு மனம் திறத்தல்
‘புதிய திராட்சை இரசம் புதிய தோற்பைகளுக்கு ஏற்றது’ என்னும் இயேசுவின் போதனை புதியனவற்றுக்கு நம் உள்ளங்களைத் திறந்து வைக்க அழைக்கிறது. பழையவை நமக்கு அறிமுகமானவையாக இருப்பதால் அவை நமக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருகின்றன. புதியனவற்றுக்குக் கடவுள் நம்மை அழைக்கும்போது பழையனவற்றை விட்டுவிட வேண்டும். பழையன சார்ந்தவற்றைச் சிந்திப்பவர் புதியனவற்றுக்கு மனம் திறக்க மாட்டார்.
கடவுளின் காலத்தைக் கண்டறிதல் என்றால் மாற்றத்துக்குத் தயாராக இருப்பதாகும். கடவுள் நம் முன்பாக வைக்கும் புதிய சூழல்களையும் வாய்ப்புகளையும் அடையாளம் கண்டு அவற்றைப் பற்றிக்கொள்வதாகும். நமக்கு நலமானவற்றைக் கடவுள் அறிகிறார், அவற்றை நமக்கு அருள்கிறார். திருத்தூதர்கள் தங்களுடைய பழைய வழிகளை விட்டு இயேசு என்னும் புதிய வழியைப் பற்றிக்கொண்டதுபோல, வாழ்வின் பழையவற்றை விட்டு புதியன நோக்கி நாம் நடக்க வேண்டும்.
நிற்க.
கடவுள் தங்களுடைய வாழ்வில் நிகழ்த்தும் புதிய செயல்களுக்கு மனம் திறக்கிற எதிர்நோக்கின் திருப்பயணிகள், அவருடைய காலத்தின்படி தாங்கள் நடத்தப்படுமாறு கடவுளின் திட்டத்துக்குத் தங்களையே கையளிக்கிறார்கள். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 192).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: