இன்றைய இறைமொழி
வெள்ளி, 7 ஜூன் 2024
பொதுக்காலம் 9-ஆம் வாரம் – வெள்ளி
இயேசுவின் திருஇதயம் – பெருவிழா
ஓசேயா 11:1, 3-4, 8-9. எபேசியர் 3:8-12, 14-19. யோவான் 19:31-37
அடையாளம்-அழைப்பு-அர்ப்பணம்
‘இறுதிவரை தம் சீடர்களை அன்பு செய்த இயேசு அதை வெளிப்படுத்த தம் சீடர்களின் பாதங்களைக் கழுவுகிறார். தம் விலா திறக்கப்பட்டு இறுதி சொட்டு இரத்தத்தைக் கொண்டு மனுக்குலத்தின் பாவங்களைக் கழுவுகிறார்.’
இன்று இயேசுவின் திருஇருதயப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். தொடக்கத் திருஅவை இயேசுவின் அன்பு மற்றும் இரக்கம் குறித்து தியானித்தது. தொடக்கத் திருஅவைத் தந்தையர்களில் புனித அகுஸ்தீன் மற்றும் புனித கிறிஸோஸ்தம் ஈட்டியால் குத்தித் திறக்கப்பட்ட விலா குறித்தும் இயேசுவின் இதயம் குறித்துக்காட்டும் அன்பு பற்றியும் எழுதியுள்ளார்கள். மத்தியக் கால மறைஞானியர் (‘மிஸ்டிக்’) புனித ஜெர்ட்ருட் மற்றும் புனித மெக்டில்ட் போன்றோர் இரக்கம்நிறை இயேசு பற்றிய அனுபவங்களையும் காட்சிகளையும் பெற்றனர்.
இயேசுவின் திருஇதய பக்தியும் வணக்கமும் பரவலாக்கம் செய்ததில் முக்கியமானவர் புனித மார்கரெட் மேரி அலகாக் (1647-1690) ஆவார். பல முறை இவருக்குத் தோன்றுகிற இயேசு தம் இதயத்தைத் திறந்து காட்டி, திருஇதய பக்தி முயற்சிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்துகிறார். மனம் திரும்புதல், நற்கருணை ஆராதனை, முதல் வெள்ளிக் கிழமைகளில் நற்கருணை, திருஇதயத்துக்கு அர்ப்பணித்தல், திருஇதயப் படம் நிறுவுதல் என பல பக்தி முயற்சிகள் உருவாகின்றன.
திருத்தந்தை 9-ஆம் பயஸ் (1856) அகில உலக திருஅவையின் கொண்டாட்டமாக இத்திருவிழாவை அறிவித்தார். திருத்தந்தை 13-ஆம் லியோ (1899) அகில உலகத்தையும் இயேசுவின் திருஇதயத்துக்கு அர்ப்பணம் செய்தார். திருத்தந்தை 11-ஆம் பயஸ் ‘இரக்கம்நிறை மீட்பர்’ என்னும் சுற்றுமடல் (1928) வழியாக இயேசுவின் திருஇதய பக்தி முயற்சியின் பொருளை உலகறியச் செய்தார்.
பின் வரும் திருஇதய பக்தி முயற்சிகள் நமக்கு அறிமுகமானவை: (1) படம் அல்லது திருவுருவம் நோக்குதல்: இயேசுவின் திருஇதயப்படத்தை அல்லது திருவுருவத்தை நோக்கி, அதில் காணும் அடையாளங்களை தியானித்தல். (2) இயேசுவின் திருஇதயத்துக்கு தனிநபர் மற்றும் குடும்பங்களை அர்ப்பணம் செய்தல்: தங்களுடைய வாழ்வு இயேசுவின் திருஇதயத்தை மையமாகக் கொண்ட வாழ்வாக இருக்கும் என்று உறுதி ஏற்றல். (3) பரிகாரங்கள் செய்தல்: நம் குற்றங்கள் அல்லது தவறுகளால் இயேசுவின் திருஇதயத்தை மனம் நோகச் செய்த நேரங்களுக்காகப் பரிகாரம் செய்தல்.
(4) நற்கருணை ஆராதனை: முதல் வெள்ளிக் கிழமைகளில் தனிப்பட்ட அல்லது குழும நற்கருணை ஆராதனை செய்தல். திருப்பலி கண்டு நற்கருணை உட்கொள்தல். (5) இல்லம் மற்றும் பணியிடங்களில் படம் அல்லது திருவுருவம் நிறுவுதல்: அவருடைய கண்கள் நம்மை நோக்கியிருக்குமாறு, அவருடைய கண்பார்வையில் நம் வாழ்க்கையை வாழ்தல். (6) திருஇதய செபமாலை: திருஇதய செபமாலை, மன்றாட்டு மாலை செபித்தல்.
(அ) அடையாளம்
எமோஜிகள் பயன்படுத்தும் நமக்கு ‘இதயம்’ என்னும் உருவத்தின் பொருள் தெரியும். ‘விருப்பம்,’ ‘அன்பு,’ ‘கருணை’, ‘பிடித்தம்’ போன்றவற்றைக் குறிக்க இந்த உருவத்தைப் பயன்படுத்துகிறோம். இயேசுவின் இருதயம் நமக்கு கடவுளின் அன்பையும் பரிவையும் அடையாளப்படுத்துகிறது. இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கள்மேல் காட்டுகிற நெருக்கத்தை ‘அன்பு,’ ‘பரிவு’ என்னும் இரு சொற்களால் உருவகப்படுத்துகிறார். அன்பும் பரிவும் வெறும் உணர்வுகளாக அல்லாமல், கடவுளின் செயல்களாக மாறுகின்றன.
(ஆ) அழைப்பு
எபேசுநகரத் திருஅவைக்கு எழுதுகிற பவுல், ‘அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!’ என மொழிந்து, ‘கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!’ என அழைக்கிறார். இதன் வழியாகவே இவர்கள் கடவுளின் முழுநிறைவையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது பவுலின் புரிதலாக இருக்கிறது. அளக்கக்கூடிய அளவுகளைக் குறிப்பிட்டு, அன்பை அளக்க முடியாது என எடுத்துரைக்கிறார். இந்தத் தேடலில் நாம் மறைந்துபோவோம். கடவுளை நாம் முழுமையாக அன்பு செய்வதற்கான அழைப்பை இன்றைய நாள் தருகிறது.
(இ) அர்ப்பணம்
யோவான் நற்செய்தியாளர் தன் நற்செய்தியின் பல கூறுகளை தொடக்கநூலின் பின்புலத்திலேயே எழுதுகிறார். இயேசுவின் விலா குத்தித் திறக்கப்படுகிற நிகழ்வை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். இயேசுவின் உடலிலிருந்து இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தன. இவ்வாறாக, இறுதிச் சொட்டும் சிந்தப்படுகிறது. இன்னொரு பக்கம், முதல் ஆதாமின் விலா திறக்கப்பட்டு முதல் பெண் உருவாக்கப்படுகிறார். இங்கே திறக்கப்படுகிற விலா புதிய மனுக்குலத்தைத் தோற்றுவிக்கிறது. நம் உடலுக்குத் தேவையான புதிய இரத்தத்தைத் தொடர்ந்து வழங்குவது இதயம். இயேசுவின் இதயம் நமக்கு அன்றாடம் புதிய உயிரைத் தருகிறது. இயேசு தம் இறுதிச்சொட்டு இரத்தத்தையும் நமக்கு அர்ப்பணம் செய்கிறார். முழுமையான தற்கையளிப்பை நமக்குக் கற்றுத்தருகிறது இந்நாள்.
நிற்க.
‘தாங்கள் ஊடுவருக் குத்தியவரை உற்றுநோக்குவர்’ என்கிறது விவிலியம். இயேசுவின்மேல் நம் கண்களைப் பதியவைப்போம். அவரின் பார்வை நம்மேல் படும்வரையே நாம் வாழ்கிறோம். (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 118).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: