இன்றைய இறைமொழி
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024
பொதுக்காலம் 18-ஆம் வாரம் – வெள்ளி
நாகூம் 1:15, 2:2. 3:1-3, 6-7. மத்தேயு 16:24-28
தம் வாழ்வுக்கு ஈடாக
இயேசு தம் இறப்பு உயிர்ப்பை மூன்று முறை முன்னறிவிக்கிறார். ஒவ்வொரு முறை முன்னறிவிக்கும்போதும் அவருக்கு அருகில் இருப்பவர்கள் – சீடர்கள் – அவரைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். இந்தப் பின்புலத்தில் ஒவ்வொரு முறையும் சீடத்துவம் பற்றிக் கற்பிக்கிறார் இயேசு.
சீடத்துவத்தின் மூன்று கூறுகள் எவை?
(அ) தன்னலம் துறத்தல்
(ஆ) தம் சிலுவை சுமத்தல்
(இ) தம்மையே அழித்துக்கொள்தல்
மனிதர்கள் குழும அல்லது சமூக உயிரினங்கள். குழுமத்தையும் சமூகத்தையும் வாழ்விக்க வேண்டுமெனில் ஒருவர் தன்னைவிட்டு வெளியே வர வேண்டும். தன்னைவிட்டு வெளியே வருதல் வழியாகவே தன்னலம் துறக்க முடியும். இதுவே நாம் சுமக்கிற பெரிய சிலுவை. ஒவ்வொரு பொழுதும் நம்மையே அழித்துக்கொள்தல் நடக்கும்போது நாம் வாழ்கிறோம்.
தொடர்ந்து, ‘உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் ஆன்மாவை (வாழ்வை) இழந்தால் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?’ எனக் கேட்கிறார் இயேசு.
அதாவது, கீழானது ஒன்றைத் தேடுகிற முயற்சியில் மேலானதை இழந்துவிடக் கூடாது.
இயேசு மொழிகிற சீடத்துவப்பாடம் அவருடைய சமகாலத்து ரபிக்களின் பாடங்களைவிட வித்தியாசமானதாக இருக்கிறது. மறைநூல் கற்றலிலும், தோராவை ஆராய்ச்சி செய்வதிலும் அல்ல, மாறாக, ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வியல் மாற்றத்தின் வழியாகவே ஒருவர் சீடத்துவத்தை தழுவிக்கொள்ள முடியும்.
இன்றைய முதல் வாசகத்தில் நினிவே நகருக்கு எதிராக இறைவாக்குரைக்கிறார் நாகூம். அசீரிய நாடு இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக இழைத்த தீமையின் பொருட்டு மிகவே துன்புறுகிறது. ஆண்டவராகிய கடவுள் பழிதீர்க்கிற கடவுளாக இறங்கி வருகிறார்.
நிற்க.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் தங்கள் வாழ்வின் முதன்மைகளை முதன்மையாகக் கொண்டிருப்பர் (யூபிலி கி.பி. 2025, துணுக்கு 169).
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: