இன்றைய இறைமொழி
செவ்வாய், 1 ஜூலை ’25
பொதுக்காலம் 13-ஆம் வாரம் – செவ்வாய்
தொடக்கநூல் 19:15-29. மத்தேயு 8:23-27
அவரால் வாழப்போகிறோம்!
‘ஆண்டவரே காப்பாற்றும், சாகப் போகிறோம்!’
நற்செய்தி வாசகத்தில் இயேசு நிகழ்த்திய இயற்கை வல்ல செயல் ஒன்றை வாசிக்கிறோம். காற்றின்மேலும் கடலின்மேலும் இயேசு கொண்டிருந்த அதிகாரம் மற்றும் ஆற்றல் இந்நிகழ்வு வழியாக முன்மொழியப்படுகிறது. கடல் கொந்தளிக்கிறது, சீடர்கள் அச்சப்படுகிறார்கள், இயேசுவோ தூங்குகிறார். படகு என்பது திருஅவையையும், கடல் என்பது தொடக்கத் திருஅவை அனுபவித்த துன்பங்களையும் குறிப்பதாகவும், இயேசுவின் தூக்கம் அவருடைய இல்லாமையைக் காட்டியது என்று உருவகமாகவும் இந்நிகழ்வைப் புரிந்துகொள்ளலாம். அச்சப்படுகிற சீடர்கள் இயேசுவின் தூக்கம் களைகிறார்கள். இயேசு சீடர்களையும் கடலையும் ஒருங்கே கடிந்துகொள்கிறார். சீடர்களின் அச்சம் ஐயமாக மாறுகிறது. ‘இவர் யாரோ?’ என்று கேள்வி கேட்கிறார்கள். அலைகளைப் பார்த்து சாகப்போகிறோம் என அச்சம் கொண்டவர்கள், இயேசுவைப் பார்த்து வாழப்போகிறோம் என ஆனந்தம் கொள்ளவில்லை. இதுவே அவர்களுடைய பிரச்சினை. பிரச்சினைமேலா? ஆண்டவர்மேலா? எதன்மேல் இருக்கின்றன நம் கண்கள்?
ஆபிரகாம் கடவுளின் தூதர்களுக்குக் காட்டிய விருந்தோம்பல் அவருக்கு ஒரு மகனைத் தந்தது எனில், லோத்து கடவுளின் தூதர்களுக்குக் காட்டுகிற விருந்தோம்பல் அவர் குடும்பத்தாரை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது எனக் காட்டுகிறது முதல் வாசகம். சோதோமின் பாவச்செயலுக்காக ஆண்டவர் அதன்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்கிறார். லோத்தும் அவருடைய குடும்பத்தாரும் காப்பாற்றப்படுகிறார்கள். லோத்தின் மனைவி நகரைத் திரும்பிப் பார்த்ததால் உப்புச் சிலையாக மாறுகிறாள். சாக்கடலைச் சுற்றி நிறைய உப்புத் தூண்கள் காணப்படுகின்றன. இவற்றில் உள்ள ஓர் உப்புத் தூண் பற்றிய காரணக்கதையாடலாக இந்நிகழ்வு இருக்கலாம் என்பது சில விளக்கவுரையாளர்களின் கருத்து. நம்மைச் சுற்றியுள்ள நகருமும் மக்களும் அழிந்தாலும் ஆண்டவராகிய கடவுளின் பேரன்பு நம்மைக் காப்பாற்றும் எனச் சொல்கிறது முதல் வாசகம்.
‘பதற்றம்’ – இது இன்றை நம்மில் பலரைப் பீடித்திருக்கும் ஒரு நோய். இந்த நோயின் தாயின் பெயர் ‘அவசரம்.’ ‘அவசரம்’ என்ற உணர்வு மூளை சார்ந்ததா அல்லது உடல் சார்ந்ததா? என்று பார்த்தால், உடல் உபாதை அல்லது உடல் பசி நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ‘அவசரம்’ என்பது உள்ளம் சார்ந்ததே. ‘பதற்றம்’ என்பது மூளைக்கும் உடலுக்கும் நடுவில் உள்ள இடைவெளி. எடுத்துக்காட்டாக, நான் 11 மணிக்கு ஒரு கருத்தரங்கத்தில் பேச வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். 10 மணிக்கே எனக்கு பதற்றமாக இருக்கிறது என்றால் என்ன அர்த்தம். என்னுடைய மூளை 11 மணிக்குப் போய்விட்டது. உடல் 10 மணியில் இருக்கிறது. மூளை உடலைப் பார்த்து, ‘வா … வா … சீக்கிரம் பேசு’ என்று அவசரப்படுத்தும். ஆனால், உடலால் 10 மணியிலிருந்து 11 மணிக்கு தாவ முடியாது. அது ஒவ்வொரு நொடியாகத்தான் நகரும். தன்னால் தாவ முடியவில்லையே என்று சொல்லும் கையறுநிலைதான் பதற்றம்.
சீடர்களும் இயேசுவும் படகில் இருக்கிறார்கள். அவர்கள் இருந்த கடல் திபேரியாக் கடல். அலைகள் இல்லாத, அல்லது சிற்றலைகள் எழுகின்ற கடவுள் அது. சீடர்கள் பெரும்பாலானவர்கள் மீனவர்கள், மீன்பிடித் தொழில் செய்தவர்கள். கடலின் அலைகளை எதிர்கொள்ளும் திறன் பெற்றவர்கள். படகில் உள்ள ஒரு விதிவிலக்கு இயேசு. இவர் தச்சர். தண்ணீரின் ஓட்டம், அலைகளின் தாக்கம் தச்சனுக்குத் தெரியாது. ஆனாலும், தச்சன் தூங்குகிறார். மீனவர்கள் அலறுகிறார்கள்.
சீடர்களின் அலறலுக்குக் காரணம் அவர்களின் பதற்றம்.
அவர்களுடைய மூளை சாவுக்கு அருகில் சென்றுவிட்டது. உடல் படகில் இருக்கிறது. இரண்டிற்குமான இடைவெளியைச் சரிசெய்ய முடியாமால், ‘ஆண்டவரே, காப்பாற்றும், சாகப்போகிறோம்’ என அலறி, தூங்கிக்கொண்டிருந்தவரை எழுப்புகின்றனர்.
அலைகள் அடிக்கின்ற நேரத்திலேயே, ‘சாகப்போகிறோம்’ என்ற குரல் எழுப்புவது சீடர்களின் முதிர்ச்சியின்மையையும் காட்டுகின்றது. சீடர்கள் தங்களுடைய அதீத எண்ண ஓட்டங்களால் நடக்கவிருப்பதை மிகைப்படுத்துகிறார்கள்.
ஆனால், இயேசு மிகவும் சாதாரணமாக அல்லது இயல்பாக இருக்கிறார். ‘என்னப்பா ஆச்சு! ஏன் சத்தம் போடுறீங்க?’ என்று எதார்த்தமாகக் கேட்கிறார். ‘நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?’ எனக் கடிந்துகொள்கின்றார்.
‘அவசரம்,’ ‘அச்சம்,’ ‘பதற்றம்,’ ‘சாவு பற்றிய பயம்,’ ‘நம்பிக்கையின்மை’ – இவை சீடர்களின் உணர்வுகள்.
‘அமைதி’ – இது மட்டுமே இயேசுவின் உணர்வு.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 19:15-29) சோதோம் நகரிலிருந்து லோத்தையும் அவரின் குடும்பத்தையும் வெளியேற்றிவிட்டு, ஆண்டவராகிய கடவுள் அந்நகரின்மேல் நெருப்பும் கந்தகமும் பொழியச் செய்கின்றார். ‘திரும்பிப் பார்க்காதே’ என்று ஆண்டவர் கட்டளையிட்டும், லோத்தின் மனைவி திரும்பிப் பார்க்கிறாள். உப்புச்சிலையாக மாறுகிறாள்.
ஏன் அவள் திரும்பினாள்?
‘ஆர்வத்தினாலா,’ ‘உண்மையாகவே அழிகிறதா என்று பார்க்கவா,’ ‘தனக்குப் பின் யாராவது வருகிறாரா?’ என்ற அக்கறையினாலா?
தெரியவில்லை.
ஆனால், நகரை விட்டு ஓடும் அவசரம், பதற்றம் அவளைத் திரும்பிப்பார்க்க வைத்திருக்கலாம். பதற்றத்தில் நாம் அடிக்கடி திரும்பியும் பார்ப்போம் – உடலால் உள்ளத்தால். சீடர்களும் கரைக்குத் திரும்பலாமா என்று திரும்பிப் பார்த்திருப்பார்கள்.
அவசரம், பதற்றம், அச்சம், திரும்பிப் பார்த்தல் ஆகியவற்றை விடுத்து அமைதி மட்டும் பெற்றால் எத்துணை நலம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: