• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இவர் யோசேப்பின் மகன் அல்லவா? இன்றைய இறைமொழி. திங்கள், 1 செப்டம்பர் ’25.

Monday, September 1, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி யோசேப்பின் மகன் தெசலோனிக்கத் திருச்சபை இறந்தோர் உயிர்ப்பு எசாயா இறைவாக்கு நாசரேத்து எதிர்ப்பு இயேசுவின் பணிவாழ்வு

இன்றைய இறைமொழி
திங்கள், 1 செப்டம்பர் ’25
பொதுக்காலம் 22-ஆம் வாரம், திங்கள்
1 தெசலோனிக்கர் 4:13-17. லூக்கா 4:16-30

 

இவர் யோசேப்பின் மகன் அல்லவா?

 

இறப்புக்குப் பின் உள்ள வாழ்வு பற்றிய ஐயநிலையில் இருந்த தெசலோனிக்கத் திருச்சபைக்கு எழுதுகின்ற இறந்தோர் உயிர்ப்பு பற்றிய தெளிவை வழங்குகிறார் பவுல். கல்லறையுடன் முடிந்துவிடக் கூடியது வாழ்வு என எண்ணிய மக்களுக்கு, கல்லறையையும் தாண்டிய வாழ்வு உண்டு என்பதைக் குறிப்பிட்டு, மனித வாழ்க்கைக்கு உரிய நோக்கம் பற்றி எடுத்துரைக்கிறார்.

 

இயேசு தன் பணிவாழ்வை நாசரேத்தில் தொடங்குகிறார். தன் பணியின் நோக்கம் பற்றி எடுத்துரைக்க விரும்புகிற இயேசு, எசாயா இறைவாக்குப் பகுதியை எடுத்தாளுகிறார். ‘இது ஆண்டவரின் வாக்கு’ என்று நிறைவு செய்திருந்தால், எல்லாரும் கைதட்டி வாழ்த்துச் சொல்லியிருப்பார்கள். மாறாக, ‘நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று’ என்று அவர் சொன்னதால், அவரைப் பற்றி மக்கள் இடறல்படுகிறார்கள். ‘இவர் யோசேப்பின் மகன் அல்லவா?’ என்று அவருடைய இறந்தகாலத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒருவரின் நிகழ்காலத்தின் மேன்மை நமக்கு நெருடலாக இருக்கும்போது அவருடைய இறந்தகாலத்தைச் சுட்டிக்காட்டுவது மனித இயல்பு. இயேசு மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தன் பணியைத் தொடர்கிறார். தம் பணிவாழ்வில் இயேசு பிற்காலத்தில் அனுபவிக்கப் போகிற எதிர்ப்பை இந்நிகழ்வு முன்னுரைப்பதாக இருக்கிறது.

 

கல்லறையைத் தாண்டியது நம் வாழ்க்கை எனில், அந்த வாழ்க்கைக்கான நோக்கம் நமக்குத் தெளிவாக இருக்கிறதா? நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளுக்கான நம் பதிலிறுப்பு என்ன?

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: