• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு! இன்றைய இறைமொழி. செவ்வாய், 2 ஜூன் 2026.

Tuesday, June 2, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
செவ்வாய், 2 ஜூன் 2026
பொதுக்காலம் 9-ஆம் வாரம்
2 பேது 3:12-15, 17-18. மாற் 12:13-17

 

வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு!

 

தங்களைப் பற்றியே உருவகம் சொன்னார் என்று வெளியேறிய பரிசேயர்கள் இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்க விரும்புகிறார்கள். இயேசுவிடம் வரக்கூடிய முதல் குழுவினர் ஏரோதியர்கள். இயேசுவின் சமகாலத்தில் இருந்த அரசியல் குழுவினர் இவர்கள். ஒரே நேரத்தில் ஏரோதுவையும் – மண்ணின் மைந்தரை, உரோமையின் அதிகாரத்தையும் ஆதரித்தார்கள் இக்குழுவினர்.

 

‘சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்த வேண்டுமா, வேண்டாமா?’ என்று இயேசுவிடம் கேட்கிறார்கள்.

 

இயேசு உடனடியாக அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொள்கிறார். சீசரை முழுமனதாக ஆதரித்துவிட்டு, அவருக்கு வரி செலுத்துவதைப் பற்றி விவாதிக்கிறார்கள். மேலும், சீசரின் உருவம் பதித்த நாணயத்தையும் வைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வை மிகவும் கவனமாகக் கையாளுகிற இயேசு, ‘சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றை கடவுளுக்கும் கொடுங்கள்’ என்கிறார்.

 

இதற்கு முந்தைய உருவகத்தோடு நாம் இயேசுவின் சொற்களைப் பொருத்திப் பார்ப்போம். கொடிய குத்தகைக்காரர்கள் நிலாக்கிழாருக்கு உரியவற்றைக் கொடுக்க மறுத்தார்கள். கடவுளுக்கு உரியதைக் கடவுளுக்குக் கொடுப்பதே நீதி என்கிறார் இயேசு.

 

வெளிவேடமற்ற வாழ்வையும், கடவுளுக்குரியதைக் கடவுளுக்குக் கொடுக்கும் நீதியையும் இன்றைய வாசகம் நமக்குக் கற்றுத் தருகிறது.

 

நம் வெளிவேடமான செயல்பாடுகளைப் பல நேரங்களில் விவேகமான செயல்பாடுகள் என நாம் நினைத்துக்கொள்கிறோம்.

 

இன்றைய முதல் வாசகத்தில், ‘இயேசு கிறிஸ்துவின் அருளிலும் அறிவிலும் வளர்ச்சி அடையுங்கள்’ என்று தன் குழுமத்தக்கு அறிவுரை வழங்குகிறார் பேதுரு.

 

கடவுளைப் பற்றிய அறிதல் நம் வாழ்வின் வெளிவேடத்தை அகற்றுகிறது.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: