இன்றைய இறைமொழி
புதன், 2 ஜூலை ’25
பொதுக்காலம் 13-ஆம் வாரம் – புதன்
தொடக்கநூல் 21:5, 8-20. மத்தேயு 8:28-34
‘இறைமகனே, உமக்கு இங்கு என்ன வேலை?’
பேய் பிடித்த இருவர் இயேசுவை எதிர்கொள்கிறார்கள். ‘இறைமகனே’ என அவரை அழைக்கிறார்கள். பன்றிகளின் கூட்டத்திற்குள் பேய்களை அனுப்பிவிடுகிறார் இயேசு. பன்றிக்கூட்டம் கடலில் வீழ்ந்து மடிகிறது. நிகழ்வைக் கண்ட மக்கள் தங்கள் ஊரை விட்டு அகலுமாறு இயேசுவை வேண்டுகிறார்கள். அந்த ஊராருக்கு இயேசுவோ, அவரால் நலம்பெற்றவர்களோ பெரிதாகத் தெரியவில்லை. அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ரொம்ப ப்ராக்டிகலான மக்கள்!
‘உனக்கொரு மகன் பிறப்பான்’ என்னும் கடவுளின் செய்தி கேட்டு சாரா சிரித்தார். அவருக்கு ஈசாக்கு பிறந்தார். ‘ஈசாக்கு’ என்றால் ‘அவன் சிரித்தான்’ என்பது பொருள். ஈசாக்கு பிறப்பதற்கு முன்னரே ஆகார் வழியாக இஸ்மயேலைப் பெற்றெடுக்கிறார் ஆபிரகாம். ‘இஸ்மயேலும் சிரிக்கிறான்’ என்பதைக் காண்கிற சாரா கோபம் கொள்கிறாள். அடிமையின் மகன் தன் மகனுக்குப் பங்காளியா என நினைக்கிற அவள், அவனையும் அவனுடைய தாயையும் வீட்டை விட்டு விரட்டுமாறு வேண்டுகிறாள். பெண் அரசியல் பொல்லாதது! ஆபிரகாம் இதனால் வேதனை அடைந்தாலும் இருவரையும் அனுப்புகிறார். பாலைநிலத்தில் இஸ்மயேல் அழுகிறான். தாய் ஆகாரும் அழுகிறாள். இருவருடைய கண்ணீரையும் கடவுள் காண்கிறார். தண்ணீர் கிணற்றைக் காட்டுகிறார். அழுகை மீண்டும் சிரிப்பாக மாறுகிறது. கண்ணீர் மல்க நாம் கடவுள்முன் நிற்கும்போதெல்லாம் அவர் தண்ணீர் என்னும் நிறைவைக் காட்டுகிறார். சிறிய குடிசை என வாழ்ந்த ஆகாரும் இஸ்மயேலும் ஒட்டுமொத்தப் பாலைநிலத்தையே உரிமையாக்கிக்கொள்கிறார்கள். இதுதான் கடவுளின் செயல்.
‘எம்மை விட்டு அகலும்!’ என முதல் வாசகத்தில், சாரா ஆகாரிடம் சொல்கிறார். ‘எவ்வழி செல்வது?’ என அறியாமல் சென்ற ஆகார் மற்றும் இஸ்மயேல் ஆண்டவரைக் கண்டுகொள்கிறார்கள். ‘எம்மை விட்டு அகலும்!’ என நற்செய்தி வாசகத்தில், ஊரார் இயேசுவிடம் சொல்கிறார்கள். அவர்களால் இயேசுவில் இறைமகனைக் கண்டுகொள்ளவில்லை. ஆகாரின் நம்பிக்கை அவருடைய கண்களைத் திறந்து கிணற்றைக் கண்டது. பன்றிகள் விழுந்த கடலைக் கண்டவுடன் ஊராரின் நம்பிக்கைக் கண்கள் மூடிக்கொண்டன. ஆகாரும், இஸ்மயேலும், இயேசுவும் தங்கள் வழியே நடக்கிறார்கள்! நம் நம்பிக்கைக் கண்கள் திறந்தால் பாலைநிலத்திலும் தண்ணீர் காண முடியும். கண்கள் மூடினால் இறைமகனும் சாதாரண மனிதராகவே நமக்குத் தெரிவார்.
‘மறுகரைக்குச் செல்கின்ற’ இயேசு கதரேனர் வாழ்ந்த பகுதிக்குச் செல்கின்றார். ‘மறுகரைக்குச் செல்தல்’ என்பது இயேசுவுக்குப் பிடித்தமான ஒரு செயல். ‘மறுகரை’ ஒரே நேரத்தில் நமக்கு ஈர்ப்பாகவும், கண்ணியாகவும் இருக்கிறது. நம் முதற்பெற்றோருக்கு விலக்கப்பட்ட கனி ஒரு மறுகரை. மறுகரைக்குச் சென்றவர்களில் மலர்ந்து மணம் வீசியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் முதல் ஏற்பாட்டு யோசேப்பு. அடிமையாகச் சென்ற அவர் ஆளுநராக மாறுகிறார். இளைய மகன் சொத்துகளை எடுத்து மறுகரைக்குச் செல்கின்றார். மீண்டும் தான் புறப்பட்ட மறுகரைக்கே மீண்டும் வருகின்றார்.
மறுகரைக்குச் செல்கின்ற இயேசு, ‘பேய் பிடித்த நிலை’ என்ற கரையிலிருந்து, ‘விடுதலை பெற்ற நிலை’ என்ற மறுகரைக்கு இரு இனியவர்களை அனுப்புகின்றார். பேய் பிடித்த இருவரும் இயேசுவைத் தங்களிடமிருந்து விலகுமாறு வேண்டுகின்றனர். பன்றிக் கூட்டத்திற்குள் பேய்கள் அனுப்பப்பட அவர்கள் விடுதலை பெறுகின்றனர். இப்போது மக்கள் கூட்டத்தினர் இயேசுவைத் தங்கள் நகரிலிருந்து வெளியேறுமாறு வேண்டுகின்றனர். வெளியேறிய பேய் பன்றிக்கூட்டத்திற்குள் போகவில்லை. மாறாக, ஊருக்குள்தான் சென்றிருக்கிறது.
எதற்காக அவர்கள் இயேசு தங்கள் நகரை விட்டு அகலுமாறு வேண்டினர்?
(அ) மறுகரையில் இருக்கின்ற அவர் தங்கள் கரைக்குள் வருவதை அவர்கள் விரும்பவில்லையா?
(ஆ) பன்றிக்கூட்டத்தின் இழப்பைப் போல இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டும் என அஞ்சினார்களா?
(இ) பேய் பிடித்தவர்கள் பேய் பிடித்தவர்களாகவே இருத்தல் நலம் என அவர்கள் விரும்பினார்களா?
‘ஏன் இங்கு வந்தீர்?’ எனக் கேட்டனர் பேய் பிடித்தவர்கள்.
‘எப்போது இங்கிருந்து செல்வீர்?’ எனக் கேட்டனர் ஊரார்.
மறுகரைக்குச் சென்ற இயேசு மீண்டும் தன் கரைக்கு வருகின்றார். மறுகரையிலிருந்து பார்த்தால் தன் கரையும் மறுகரையே.
முதல் வாசகத்தில், ஆகாரும் அவருடைய அன்புக் குழந்தையும் சாரா மற்றும் ஆபிரகாம் ஆகியோரால் தங்கள் இல்லத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். கடவுளின் தெரிவு ஈசாக்கு என இருந்தாலும், பச்சிளங் குழந்தையை வீட்டை விட்டு வெளியேற்றுவதை நம் மனம் ஏற்க மறுக்கின்றது. ஓர் அப்பத்தையும் தோற்பை நிறையத் தண்ணீரையும் கொடுத்து அவர்களை அனுப்பும் ஆபிரகாமும் நம் பார்வையில் சிறியவராகவே தெரிகிறார். அப்பமும் தண்ணீரும் தீர்ந்துவிட அந்த அபலைப் பெண் ஆண்டவரை நோக்கி அழுகிறார். ஆண்டவரின் தூதர், ‘அஞ்சாதே!’ என அவரைத் தேற்றி, நீருள்ள கிணற்றை அவருக்குக் காட்டுகின்றார்.
நகரிலிருந்தும் வீட்டிலிருந்தும் வெளியே அனுப்பப்படுகிறவர்கள் அனைவரையும் ஆண்டவரின் தூதர் எதிர்கொள்வதில்லை.
அவர்கள் தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தொடங்கித் தொடர முயற்சி செய்கின்றனர்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: