இன்றைய இறைமொழி
செவ்வாய், 2 செப்டம்பர் ’25
பொதுக்காலம் 22-ஆம் வாரம், செவ்வாய்
1 தெசலோனிக்கர் 5:1-6, 9-11. லூக்கா 4:31-37
‘நீ பேசும் சொற்களைப் பற்றிக் கவனமாக இரு! ஏனெனில், அவை போலவே உனக்கு நடக்க நேரிடலாம்!’ என்பது ஜப்பானியப் பழமொழி. நாம் பேசும் சொற்கள் நம் உள்ளத்தில் உள்ள சிந்தனையின் வெளிப்பாடுகள். நாம் பேசும் சொற்கள் நம் செயல்களுக்கான முன்னோடிகள். ஆக, நம் சிந்தனைகளுக்கும் செயல்களுக்குமான இணைப்புக் கோடுகளே நாம் பேசுகிற சொற்கள்.
நேற்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு நாசரேத்தூரில் பணியைத் தொடங்கிய நிகழ்வை வாசித்தோம். நிகழ்வின்படி தொழுகைக்கூடத்திற்குச் செல்கிற இயேசு இறைவாக்கினர் எசாயாவின் சொற்களைக் கொண்டு தம் பணியைத் தொடங்குகிறார். எருசலேம் ஆலயத்தில் நடந்த வியாபாரத்தைக் கண்டிக்கும் இறைவாக்கினர் செயல் அல்ல, அல்லது எருசலேம் ஆலயம் சென்று வழிபாடு செய்யும் செயல் அல்ல, அல்லது நோயுற்றவர்களுக்கு நலம் தரும் செயல் அல்ல, மாறாக, சொற்களைக் கொண்டு தம் பணியைத் தொடங்குகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், தொடர்ந்து இயேசுவின் போதனை மற்றும் போதனை ஏற்படுத்திய தாக்கம் பற்றி எழுதுகிறார் லூக்கா:
(அ) இயேசு அதிகாரத்தோடு கற்பித்து வந்தார் – இயேசுவின் சமகாலத்துப் போதகர்கள் தாங்கள் சார்ந்திருந்த பள்ளிகளின் அதிகாரத்தைக் கொண்டு, அல்லது தாங்கள் போதித்த மறைநூலின் அதிகாரத்தைக் கொண்டு போதித்தார்கள். ஆனால் இயேசுவோ தம் சொந்த அதிகாரத்தால் போதிக்கிறார் இறைமகன் என்னும் நிலையில் அல்ல. மாறாக, தன்னை அறிந்தவராக, தன்மேல் ஆளுமை கொண்டவராக இயேசு இருந்ததால் அவரால் அதிகாரத்தோடு போதிக்க முடிந்தது.
(ஆ) இயேசு தம் சொற்களால் தீய ஆவியைக் கடிந்துகொள்கிறார். தீய ஆவியும் இயேசுவின் சொற்களுக்குக் கட்டுப்படுகிறது. தம்மேல் மட்டுமல்லாமல் தமக்கு வெளியே இருப்பவற்றின்மேலும் ஆளுகை கொண்டவராக இருக்கிறார் இயேசு.
(இ) இயேசுவின் பேச்சைக் குறித்து ஊரார் பேசுகிறார்கள். எங்கும் இயேசுவைப் பற்றிய பேச்காக இருக்கிறது. இயேசுவின் கற்பித்தலும் செயல்பாடுகளும் மக்கள்மேல் நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில், மற்றவர்களின் ஏமாற்றுப் பேச்சால் கவரப்பட வேண்டாம் என்று தெசலோனிக்க நகர் மக்களை எச்சரிக்கிறார் பவுல். தொடர்ந்து, ‘விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்’ என அறிவுறுத்துகிறார்.
நாம் பேசுகிற சொற்கள் அதிகாரம் கொண்ட சொற்களாக இருக்க வேண்டுமெனில் நம் சொற்களுக்கும் செயல்களுக்குமான இடைவெளி குறைய வேண்டும். நாம் பயன்படுத்துகிற சொற்கள் மற்றவர்கள்மேல் நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்துகிற சொற்களாக இருக்க நாம் முயற்சி செய்வோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: