• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

வாழ்வோரின் கடவுள். இன்றைய இறைமொழி. புதன், 3 ஜூன் 2026.

Wednesday, June 3, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
புதன், 3 ஜூன் 2026
பொதுக்காலம் 9-ஆம் வாரம்
2 திமொ 1:1-3. 6-12. மாற் 12:18-27

 

வாழ்வோரின் கடவுள்

 

இயேசுவைச் சோதிக்க வருகிற அடுத்த குழுவினர் சதுசேயர்கள். இவர்கள் இயேசுவின் சமகாலத்து அரசியல்வாதிகள். விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள். இறந்தோர் உயிர்த்தெழுதல், வானதூதர், மறுவாழ்வு ஆகியவற்றின்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள். உயிர்ப்பு பற்றிய நம்பிக்கையைக் கேலி செய்யும்பொருட்டு ‘ஒரு பெண்ணும் ஏழு கணவர்களும்’ என்னும் புதிரை இயேசுவின்முன் வைக்கிறார்கள்.

 

‘குழந்தை பெற்றலும் கணவன்-மனைவி பரஸ்பர அன்பு காட்டுதலும் திருமணத்தின் இரண்டு பயண்கள்’ என்று இன்றைய திருஅவையின் மறைக்கல்வி நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இயேசுவின் சமகாலத்தில் திருமணத்தின் ஒரே பயன் சந்ததி விருத்தி என்பதாகும். இறப்பைத் தழுவுகிற மனிதர்கள் தங்களுடைய குழந்தைகள் வழியாக தாங்கள் இறவாமையில் நிலைத்திருப்பதாக நம்பினார்கள். நிகழ்வில் காட்டப்படும் எடுத்துக்காட்டில், ‘லெவிரேட் முறைப்படி’ பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிற ஏழு கணவர்களும் குழந்தைகள் இல்லாமல் இறக்கிறார்கள். ஆனால், இறுதிக் கேள்வி குழந்தை பிறப்பு பற்றியதாக இல்லாமல், திருமணம் பற்றியதாக மாறுகிறது. இதுதான் சதுசேயர்கள் போடுகிற முடிச்சு.

 

இந்த முடிச்சை அவிழ்ப்பதற்குப் பதிலாக, அவர்களால் அவிழ்க்க முடியாத இன்னொரு முடிச்சைப் போடுகிறார் இயேசு.

 

மனிதர்களின் வல்லமை குழந்தை பெற்றுக்கொள்வதில் இருக்கிறது என்றால், கடவுளின் வல்லமை மனிதர்களை இறவாமையிலேயே வைத்திருப்பதில் இருக்கிறது என்கிறார் இயேசு. ஆகையால்தான், ‘உங்களுக்கு மறைநூலும் தெரியாது, கடவுளின் வல்லமையும் தெரியாது’ என்கிறார். மேலும், இறப்புக்குப் பின்னர் அனைவரும் கடவுளின் நிகழ்காலத்திலேயே – இருக்கிறவரோடு – இருப்பதால் அவர்கள் பெண் கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. கடந்தகாலம், எதிர்காலம் எல்லாம் மறைந்து அவர்கள் கடவுளுடைய நிகழ்காலத்தில் கரைந்துவிடுகிறார்கள்.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தின் செய்தி மூன்று: (அ) கடவுளின் வல்லமையை – அனைவரையும் நிகழ்காலத்தில் வைக்கச் செய்யும் அவருடைய வல்லமையை உணர்ந்து வாழ்தல். (ஆ) நம் கடவுள் வாழ்வோரின் கடவுள் என்பதால், ‘வாழ்வு சார்ந்தவற்றை’ மனத்தில் இருத்தி வாழ்தல். (இ) இவ்வுலக வாழ்வையும் தாண்டிய ஒரு வாழ்க்கை உண்டு என்று நாம் நம்பும்போது நமக்கு எதிர்நோக்கு பிறக்கிறது.

 

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதுகிற மடலில், ‘கடவுளின் அருள்கொடையைத் தூண்டி எழுப்புமாறு’ அறிவுரை கூறுகிறார். கடவுளின் அருள்கொடையை நாம் ஒவ்வொருவரும் தூண்டி எழுப்ப வேண்டும். கோழை உள்ளம் விடுத்து, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தினராக வாழ வேண்டும். நம்மை அழைத்த கடவுள் சாவை அழித்து அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்கிறார். இயேசுவே அந்த நற்செய்தி.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: