• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

முதன்மைப்படுத்துதல். இன்றைய இறைமொழி. வியாழன், 4 ஜூன் 2026.

Thursday, June 4, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
வியாழன், 4 ஜூன் 2026
பொதுக்காலம் 9-ஆம் வாரம்
2 திமொ 2:8-15. மாற் 12:28-34

 

முதன்மைப்படுத்துதல்

 

சதுசேயர்களைத் தொடர்ந்து மறைநூல் அறிஞர்கள் இயேசுவைக் கேள்வி கேட்டு சோதிக்கிறார்கள். ‘அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?’ என்ற கேள்வி இயேசுவிடம் கேட்கப்படுகிறது. ஆண்டவராகிய கடவுள் சீனாய் மலையில் இஸ்ரயேல் மக்களுக்கு பத்துக் கட்டளைகள் வழங்கினார். தொடர்ந்து வரக்கூடிய மரபுகளில் நிறைய விதிமுறைகளும் நியமங்களும் வழங்கப்பட்டன. மேலும், கட்டளைகளுக்கு விளக்கம் சொல்லக் கூடிய கட்டளைகள் என வளர்ந்து இயேசுவின் சமகாலத்தில் 613 சட்டங்கள் இருந்தன. இயேசு மறைநூல் அறிந்தவரா என்பதைச் சோதிக்கும் நோக்குடன் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.

 

இயேசு முதல் ஏற்பாட்டின் இரண்டு பகுதிகளிலிருந்து – இணைச்சட்டம், லேவியர் – இரண்டு கட்டளைகளை முன்மொழிகிறார்: ‘கடவுளை அன்பு செய்தல்,’ ‘அடுத்திருப்பவரை அன்பு செய்தல்.’

 

இயேசுவின் விடையைக் கேட்டு ஆச்சர்யப்படுகிற மறைநூல் அறிஞர், இயேசுவின் சொற்களை ஏற்றுக்கொண்டு திரும்ப மொழிகிறார். இயேசு அவரைப் பாராட்டுகிறார். ‘அன்பு செலுத்துவது எரிபலிகளை விட மேலானது’ என்னும் கருத்து அவரை இறையாட்சிக்கு அருகில் கொண்டுவருகிறது.

 

ஆலயத்தில் பலி செலுத்திவிட்டு, அண்டை அயலாரைவிட்டுத் தூரமாக இருப்பது இறையாட்சியிலிருந்தும் தூரமாக நிற்பது போன்றதாகும்.

 

அன்பின் வழியாகவே இறையாட்சிக்கு அருகில் வர முடியும் என்பது இயேசுவின் பாடம்.

 

நம் வாழ்வில் இறையன்பையும் பிறரன்பையும் முதன்மைப்படுத்த இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

 

‘நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர்’ என்று ஆண்டவராகிய கிறிஸ்துவைப் பற்றி திமொத்தேயுவுக்கு எழுதுகிறார் பவுல். கடவுளின் பேரன்பே அவருடைய நம்பத்தகு நிலையாக மாறுகிறது.

 

அன்பை நம் வாழ்வின் முதன்மையாகக் கொள்ள முயற்சி செய்வோம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: