இன்றைய இறைமொழி
சனி, 5 ஏப்ரல் ’25
தவக்காலம் நான்காம் வாரம் – சனி
எரேமியா 11:18-20. யோவான் 7:40-53
அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்!
இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதி வரி நம் சிந்தனையைத் தூண்டுகிறது: ‘அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்’
நற்செய்தியாளர் இந்தக் குறிப்பைத் தருவது ஏன்?
ஒவ்வொருவரும் நாளின் இறுதியில் அவரவர் வீட்டுக்குத்தானே செல்ல வேண்டும். இந்தத் தகவலால் வாசகருக்கு என்ன பயன்?
இதையொத்த வரியை நாம் 1 சாமு 8:22-இல் வாசிக்கின்றோம்: பின்பு, சாமுவேல் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, ‘ஒவ்வொருவரும் தம் நகருக்குச் செல்லட்டும்!’ என்றார்.
அங்கே, இஸ்ரயேல் மக்கள் ஒட்டுமொத்தமாக சாமுவேல் இறைவாக்கினரிடம் கூடி வந்து தங்களுக்கென்று ஓர் அரசன் வேண்டுமென்று கேட்கிறார்கள். மக்களின் வார்த்தைகளை ஆண்டவரிடமும், ஆண்டவரின் வார்த்தைகளை மக்களிடமும் சொன்ன சாமுவேல் அனைவரையும் தத்தம் நகருக்குச் செல்லுமாறு பணிக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு யார்? என்ற குழப்பம் யூதர்களில் அறிவிற்சிறந்தவர்களுக்கு வருகிறது. ‘மெசியா’ என்றும் ‘மெசியா இல்லை’ என்றும் அவர்கள் பிளவுபட்டு நிற்கின்றனர். இதற்கிடையில் இயேசுவைக் கைது செய்ய ஆள்கள் அனுப்பப்படுகிறார்கள். வெறுங்கையராய் வந்த அவர்கள், ‘அவரைப் போல எவருமே என்றுமே பேசியதில்லை’ என்று சான்று பகர்கின்றனர். மேலும், பரிசேயர்கள் நடுவிலும் நிக்கதேம் மற்றும் மற்றவர்கள் என பிரிவு ஏற்படுகிறது. நிக்கதேம் இயேசுவுக்காகப் பரிந்து பேசுகின்றார். இயேசுவின் கலிலேயப் பின்புலம் அவர்களுக்கு இடறலாக இருக்கின்றது.
முதல் வாசகத்தில், தன் இறைவாக்குப் பணி பற்றிய குழப்பத்தில் இருக்கின்ற இறைவாக்கினர் எரேமியா தன் வாழ்வின் பொருள் எது என்று அறியாதவராய் இறைவனிடம் சரணடைகின்றார்.
நற்செய்தி வாசகம், இயேசுவைப் பற்றி மக்களிடையே நிலவிய குழப்பம் பற்றிப் பேசுகின்றது.
இங்கேதான், அவரவர் வீட்டுக்குத் திரும்புதல் முக்கியமானதாக அமைகிறது.
பொதுவான ஒரு பிரச்சினையைப் பற்றி – அரசன் தேவை அல்லது இயேசு மெசியா என்று – பேசுவதற்கு முன்பாக மக்கள் தங்கள் வீட்டுக் குழப்பங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். தங்கள் குழப்பங்கள் தெளிவுறாத மக்கள் இறைவனைப் பற்றி அறிந்துகொள்தல் இயலாது. தன் உள்ளத்தின் குழப்பம் தீர்க்க முயற்சி செய்கிறார் எரேமியா.
இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று கேள்விகளை எழுப்புகின்றது:
ஒன்று, என் உள்ளம் என்னும் வீட்டுக்குள் நான் திரும்பி எனக்குள்ளே இருக்கும் குழப்பத்தை நான் அகற்றத் தயராhக இருக்கிறேனா?
இரண்டு, இயேசுவை ஏற்றுக்கொள்ள அவருடைய எளிய பின்புலம் பரிசேயர்களுக்குத் தடையாக இருக்கின்றது. இறைவனை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருக்கும் அக மற்றும் புறக்காரணி எது?
மூன்று, காவலர்கள் கொண்டிருந்த துணிச்சல் நமக்கு ஆச்சர்யம் தருகிறது. தங்களுடைய வேலைக்குப் பாதகம் வந்தாலும் பரவாயில்லை என்று சான்று பகரும் அத்துணிச்சல் இன்று என்னிடம் இருக்கிறதா? இயேசுவையும் அவருடைய போதனை மற்றும் செயல்களையும் நான் எப்படிப் பார்க்கிறேன்?
இறுதியாக,
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆனால், விடை ஏதும் இல்லை.
விடை தெரியாத கேள்விகளா அவை?
அல்லது விடை தெரிந்து கேட்கப்பட்ட கேள்விகளா?
அல்லது விடைகளை விரும்பாத கேள்விகளா?
நீங்களும் ஏமாந்து போனீர்களோ?
இந்த நிகழ்வு இரு விடயங்களை நமக்குக் கற்றுத் தருகின்றது: ஒன்று, இயேசுவைப் பற்றிய என் அறிவிக்கை எப்படி இருக்கிறது? இரண்டு, வாழ்வில் பல பிரச்சினைகளுக்கு நம்மால் விடை காண இயல்வதில்லை. பொதுவான பிரச்சினைகளை நம்மால் எதிர்கொள்ள இயலாதபோது வீட்டுக்குத் திரும்புதல் நலம். ஏனெனில், வீட்டில்தான் தெளிவு பிறக்கும்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: