• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இயேசுவின் கேள்வி. இன்றைய இறைமொழி. வெள்ளி, 5 ஜூன் 2026.

Friday, June 5, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
வெள்ளி, 5 ஜூன் 2026
பொதுக்காலம் 9-ஆம் வாரம்
2 திமொ 3:10-17. மாற் 12:35-37

 

இயேசுவின் கேள்வி

 

கடந்த மூன்று நாள்களாக வௌ;வேறு குழுவினர் இயேசுவிடம் கேள்விகள் கேட்டு அவரைச் சோதித்த நிகழ்வுகளை வாசிக்கக் கேட்டோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கோவிலில் கற்பித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கேள்வி கேட்டு, அவரே விடையும் பகர்கிறார்.

 

தாவீதின் மரபில் வரக்கூடியவராக இருப்பார் கிறிஸ்து (மெசியா) என்று மறைநூல் அறிஞர்கள் போதித்தார்கள். ஆனால், தாவீது மெசியாவை ‘ஆண்டவர்’ என அழைக்கிறார் (காண். திபா 110:1). தம் வழிமரபில் வரக்கூடிய ஒருவர் தம்மைவிடச் சிறியவர்தாம் என்றாலும் அவரை ஆண்டவர் என அழைக்கக் காரணம், மெசியா இறைவனின் மகனாக இருப்பதால்தான். இவ்வாறாக, தம் சமகாலத்தவர் இன்னொரு மெசியாவை எதிர்நோக்கியிருக்கத் தேவையில்லை. இறைமகனாகிய தாமே மெசியா என அனைவர் முன்பாகவும் எடுத்துரைக்கிறார் இயேசு.

 

இதை மனமுவந்து மக்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள் என மொழிகிறார் மாற்கு.

 

இந்த நிகழ்வு நமக்கு மூன்று விடயங்களைக் கூறுகிறது:

 

(அ) இயேசுவின் மனிதத் தன்மை இறைத்தன்மை: இயேசு தாவீதின் வழிமரபில் மனிதராகப் பிறந்தவர். இருந்தாலும் கடவுளுடைய மகன் என்ற நிலையில் அவர் இறைத்தன்மை கொண்டிருக்கிறார். அவர், ‘ஆண்டவர்’ என அழைக்கப்படுகிறார்.

 

(ஆ) புதிய வகையான அரசு: மெசியா என்பவரை ஆண்டவர் என்று வரையறுப்பதன் வழியாக, தம் சமகாலத்தவர் நினைத்ததுபோல மெசியா என்பவர் அரசியல் சார்ந்த மெசியாவாக அல்ல, மாறாக, ஆன்மிகம் சார்ந்த மெசியாவாக இருப்பார் என்பது இயேசு தரும் புதிய புரிதல்.

 

(இ) மக்களின் வியப்பு: இயேசுவைச் சந்திக்க வந்த சிறிய சிறிய குழுக்கள் வாயடைத்துப் போகிறார்கள். அவரைப் பின்பற்றி கோவிலில் அவருடைய சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டம் அவர் பேசியதை மனமுவந்து கேட்கிறது.

 

இன்றைய முதல் வாசகத்தில், ‘மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது’ என்று எடுத்துரைக்கிறார் பவுல். இறைவனே மனிதர்களைக் கருவிகளாகப் பயன்படுத்தி தம் வார்த்தையை நமக்குக் கொடுத்துள்ளார்.

 

இயேசுவின் சொற்களை மனமுவந்து மக்கள் கேட்டார்கள்.

 

இறைவார்த்தையின் சொற்களையும் நாம் மனமுவந்து வாசிப்போம், கேட்போம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: