• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

துணியும் திராட்சை இரசமும். இன்றைய இறைமொழி. சனி, 5 ஜூலை ’25.

Saturday, July 5, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

புதிய-மது-புதிய-தோற்பை சூழலியல் அறநெறி Situation Ethics யாக்கோபு-ஏசாவு Daily Catholic Lectio இன்றைய இறைமொழி Ordinary Time

இன்றைய இறைமொழி
சனி, 5 ஜூலை ’25
பொதுக்காலம் 13-ஆம் வாரம் – சனி
தொடக்கநூல் 27:1-5, 15-29. மத்தேயு 9:14-17

 

துணியும் திராட்சை இரசமும்

 

‘புதிய மதுவை புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர்!’

 

இயேசுவிடம் வருகிற யோவானின் சீடர்கள் நோன்பை முன்வைத்து கேள்வி ஒன்றை எழுப்புகிறார்கள்: ‘உம் சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?’ அதாவது, இயேசுவின் இறையாட்சிக் குழுமத்தை ஓர் அமைப்பாக மாற்ற நினைக்கிறார்கள். அல்லது அது ஓர் அமைப்பு எனத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். இயேசு அதைத் தெளிவுபடுத்துகிறார். தம் குழுமத்தில் நிலையான சட்டம் எதுவும் கிடையாது. தாம் இருக்கும் வரை ஓர் ஓழுங்கு, தான் சென்றபின் இன்னோர் ஒழுங்கு. மணமகன் இருக்கும் வரை மகிழ்ச்சி. மணமகன் சென்றவுடன் துக்கம், நோன்பு. ஒரு வகையான சூழலிய அறநெறியை (ஆங்கிலத்தில், ‘ஸிட்டுவேஷன் எதிக்ஸ்’) முன்மொழிகிறார் இயேசு. மேலும், பழைய துணி மற்றும் பழைய மது என்னும் உருவகங்கள் வழியாக, தம் கொள்கைகள் பழையவற்றோடு பொருந்தாது எனவும் தெளிவுபடுத்துகிறார்.

 

ஈசாக்கு ரெபேக்கா வழியாக இரு மகன்களைப் பெற்றெடுக்கிறார்: மூத்தவர் ஏசா, இளையவர் யாக்கோபு. யாக்கோபின்மேல் ரெபேக்கா மிகுதியான அன்புகூர்கிறார். அதீத அன்பின் ஆபத்தை(!) இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். பார்வை மங்கி, வாழ்வின் இறுதிக்காலத்தில் இருக்கும் ஈசாக்கு மூத்த மகன் ஏசாவுக்கு ஆசி வழங்க விரும்புகிறார். ஈசாக்கின் சொற்களை மறைவாக நின்று கேட்கிற ரெபேக்கா யாக்கோபுவிடம் உணவு கொடுத்தனுப்பி, ஏசாவுக்குரிய ஆசியை யாக்கோபு பெற்றுக்கொள்ளுமாறு செய்கிறார். ‘எழுந்து உட்கார்ந்து என் வேட்டையை (‘விளையாட்டை’ என்பது எபிரேயப் பாடம்) உண்ணுங்கள்’ எனச் சொல்கிறார் யாக்கோபு. விளையாட்டில் மாட்டிக்கொள்கிறார் ஈசாக்கு. ‘உம் கடவுளாகிய ஆண்டவரால்தான் இது நிகழ்ந்தது’ என இந்நிகழ்வுக்கு இறைவனையும் உடந்தையாக்குகிறார் யாக்கோபு. யாக்கோபு அணிந்திருந்த விலங்குத் தோலாடைகளையும் முகர்ந்து பார்த்து, அவர் கொண்டு வந்த திராட்சை ரசத்தைப் பருகிய ஈசாக்கு யாக்கோபுவுக்கு ஆசி வழங்குகிறார். இளையமகன் தேர்ந்துகொள்ளப்படுதல் என்னும் கருத்துருவை இது நியாயப்படுத்துவதாக இருந்தாலும், மூத்த மகன்கள் (காயின், இஸ்மயேல், ஏசா) தொடர்ந்து ஏமாற்றப்படுவது வேதனை அளிக்கிறது. கடவுளின் திட்டமா, தாயின் பாரபட்சமா, குடும்பத்தில் அரசியலா – விடை தெரியாத கேள்விகளில் ஒன்றாக இது இருக்கிறது. ஆனால், அறநெறிப்படி அனைத்தும் நடப்பதில்லை என்பதே இந்நிகழ்வு சொல்லும் பாடம். ஒரு நிகழ்வு நடக்கிறது, அவ்வளவுதான். அதன் விதிமுறைகள் பற்றி ஆராய்ச்சி செய்வதில் பயனில்லை. எந்த ஒரு நிகழ்வும் சூழலின் அமைவுதானே தவிர, இதுதான் நல்லது இதுதான் கெட்டது என யாரும் எதையும் வரையறுக்க இயலாது.

 

முதல் வாசகத்தில், யாக்கோபின் துணியும் திராட்சை இரசமும் (உணவும்) ஈசாக்கை ஏமாற்றுகின்றன. நற்செய்தி வாசகத்தில், இவ்விரண்டையும் உருவகங்களாகப் பயன்படுத்தி, யோவானின் சீடர்களின் தவறான புரிதலைத் திருத்துகிறார் இயேசு. வாழ்வின் நிகழ்வுகள் அவை நடக்கும் தளம் மற்றும் இடத்தைப் பொருத்தே பொருள் தருகின்றன. நோன்பு பற்றிய பழைய நெறிமுறை புதிய மணமகனமாகிய இயேசுவுக்குப் பொருந்தாது. தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் கதையின் இறுதியிலேயே முழுமையான பொருள் தருகின்றன. யாக்கோபு பெற்ற ஆசி அவருக்கு அச்சமும், கலக்கமும் தந்ததை இறுதியில்தான் வாசகர் அறிவார். யாக்கோபுவுக்கு மாற்றம் தேவைப்பட்டது. அவர் அதை விரைவில் அடைவார். நோன்பு பற்றிய புரிதல் இயேசுவின் இறப்புக்குப் பின்னரே சீடர்களுக்குப் புரியும்.

 

எதற்காக ‘ஆசீர்’ தேவை?

 

அ. ஆசீர் நம்முடைய எதிர்நோக்கை நீட்டிக்கிறது.

 

ஆ. ஆசீர் நமக்கு நேர்முகமான ஆற்றலைத் தருகின்றது.

 

இ. ஆசீர் அன்பைக் கூட்டுகிறது.

 

இதற்கு மாறாக,

 

ஒருவர் தனக்கு ஏற்பட்ட அநீதியின் காரணத்தால் மற்றவருக்கு வழங்கும் சாபம், அல்லது ஆற்றல் இல்லாத ஒருவர் ஆற்றல் பெற்ற ஒருவர்மேல் தன் இயலாமையில் ஏவும் சாபம் அடுத்தவரை அழித்துவிடும் அளவுக்குச் செல்கிறது.

 

அன்பு ஒன்றே சாபத்தை நீக்கும் ஆற்றல் கொண்டது – தவளையும் இளவரசியும் கதையில் வருவது போல.

 

நிற்க.

 

இன்றைய முதல் வாசகத்தில் ஏசா தன் தந்தை ஈசாக்கிடம் மிகவும் சோகமான கேள்வி ஒன்றைக் கேட்கின்றார்: ‘அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா?’ ‘எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா’ என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுகிறான்.

 

தன் தம்பி தனக்கு இழைத்த துரோகம், அதற்கு உடந்தையான தாய், அவசரப்பட்ட அப்பா என எல்லார்மேலும் இந்த ஏழை அண்ணனுக்கு கோபம் வந்திருக்கும்.

 

இந்த அண்ணன்கள் பல நேரங்களில் பாவம். தங்களுக்குரியவற்றைத் தம்பிகள் தட்டிப் பறிக்கும்போது கையறுநிலையில் புலம்புவார்கள் – ஊதாரி மைந்தன் எடுத்துக்காட்டில் வரும் அண்ணன் போல.

 

ஏசாவின் கேள்வியில் ஏமாற்றப்பட்டதன் வலி நிறையவே தெரிகிறது.

 

ஆனால், கதையின் இறுதியில் ஏசாவே யாக்கோபுக்கு ஆசியாக மாறுகின்றார் – தன்னுடைய பெருந்தன்மையால்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: