• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

கண்களுக்கு ஒளி. இன்றைய இறைமொழி. வெள்ளி, 5 டிசம்பர் ’25.

Friday, December 5, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இறைவேண்டல் கண்களுக்கு ஒளி மெசியாவின் வருகை முதற்படைப்பு காண்கிற கடவுள் எல்-ரோயி அகக்கண்கள்

இன்றைய இறைமொழி
வெள்ளி, 5 டிசம்பர் ’25
திருவருகைக்காலம் முதல் வாரம் – வெள்ளி
எசாயா 29:17-24. திருப்பாடல் 27. மத்தேயு 9:27-31

 

கண்களுக்கு ஒளி

 

மெசியாவின் வருகை பார்வையற்ற நபர்களுக்கு பார்வை தரும் என்பது இன்றைய வாசகங்களின் மையக்கருத்தாக இருக்கிறது.

 

‘கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்’ (மத் 6:22) என்று இயேசு மலைப்பொழிவில் கூறும் சொற்கள், கண்களின், பார்த்தலின் முக்கியத்துவத்தை நமக்குத் தருகின்றன. கடவுளின் முதற் படைப்பே, ‘ஒளி’ தான் (தொநூ 1:3). படைப்பின் இறுதியில் கடவுள் அனைத்தையும் நல்லதெனக் ‘காண்கிறார்’ (தொநூ 1:31). நம் முதற்பெற்றோர் பாவத்தில் விழுவதற்கான காரணம் அவர்களுடைய கண்களே. ஏனெனில், விலக்கப்பட்ட கனி ‘கண்களுக்குக் களிப்பூட்டுவதாக’ (தொநூ 3:6). போத்திபாரின் மனைவி யோசேப்பின்மீது கண்வைத்திருந்ததால், தன்னிடம் உறவுகொள்ளுமாறு அவரை அழைக்கிறார் (தொநூ 39:7).

 

நேர்முகமாக, முதன் முதலாக விவிலியத்தில் வெளிப்படுத்தப்படுகிற கடவுளின் பெயர் ‘எல்-ரோயி’ (‘காணும் கடவுள்’ அல்லது ‘காண்கிற கடவுள்’) என்பதுதான். பாலைநிலத்தில் கடவுள் அனுபவம் பெறுகிற ஆகார், ‘என்னைக் காண்பவரை நானும் இங்கு கண்டேன் அல்லவா?’ எனக் கேட்கிறார் (தொநூ 16:13). பார்வையற்ற தோபித்து பார்வை பெற்றவுடன், ‘என் மகனே, என் கண்ணின் ஒளியே, உன்னைப் பார்த்துவிட்டேன்’ என்று தோபியாவைத் தழுவிக்கொள்கிறார் (தோபித்து 11:13). எருசலேம் ஆலயத்தில் குழந்தை இயேசுவைக் கைகளில் தூக்கிக்கொள்கிற சிமியோன், ‘மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி’ (லூக் 2:30-32) என்று மகிழ்கிறார்.

 

மெசியா பற்றிய முன்னுரைத்தலில், மெசியாவின் வருகையின்போது பார்வையற்ற நபர் பார்ப்பார் என உரைக்கிறார் எசாயா (முதல் வாசகம்). இந்த மெசியா அறிவிப்பு இயேசுவில் நிறைவுபெறுகிறது. ஏனெனில், பார்வையற்ற இருவருக்கு பார்வை தருகிறார் இயேசு (நற்செய்தி வாசகம்). பார்வையற்ற நபர்களைப் பார்க்கச் செய்கிற இயேசு, ‘யாரும் அறியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்!’ என்கிறார். ஆக, ‘பார்த்துக்கொள்தல்’ என்பது ‘கவனமாக இருங்கள்’ என்றும் பொருள் தருகிறது.

 

ஆண்டவரைத் தன் ஒளி என்று கொண்டாடுகிறார் தாவீது (திபா 27).

 

வார்த்தையிலிருந்து வாழ்வுக்கு:

 

(அ) நம் அறிதலில் முதன்மையான பங்காற்றுவது நம் பார்வை. கண்களின் வழியாகவே நாம் நிறையத் தரவுகளை உள்வாங்குகிறோம். எனவே நாம் பார்ப்பவற்றைப் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். நம் கண்களில் படுவது ஒரு பக்கம், நாமே விரும்பிப் பார்ப்பது இன்னொரு பக்கம். இன்று செயல்திறன்பேசியில்தான் நம் கண்கள் இருக்கின்றன. நம்மையறியாமலேயே நாம் தரவுகளை உள்வாங்கிக்கொண்டே இருக்கிறோம். ஆக, இன்று நம் கண்களை அலைபேசியிலிருந்து சற்றே திருப்புவோம்.

 

(ஆ) ‘குருடன், ‘குருட்டுப்பயலே’ என்னும் சொல்லாடல்களை நாம் ஏறக்குறைய நீக்கிவிட்டோம். மற்றவர்களின் திறன்குறைவைச் சுட்டிக்காட்டும் எந்தச் சொற்களையும் நாம் பேச வேண்டாம். பார்வையற்ற நபரின் மாண்பைப் போற்றுவதற்கு முயற்சி செய்வோம். நாம் கட்டுகிற ஆலயங்கள், பொது இடங்கள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டை முன்நிறுத்திக் கட்டப்படட்டும்.

 

(இ) வாழ்வின் முதன்மையானவை அனைத்தும் நம் கண்களை மூடும்போதுதான் நமக்குத் தெரிகிறது. ஆகையால்தான், இறைவேண்டல் செய்யும்போது நாம் கண்களை மூடுகிறோம். இன்று சில நிமிடங்கள் கண்களை மூடி நம் அகக்கண்களைத் திறந்து, நம் இதயத்தில் குடியிருக்கிற கடவுளை, நம் ஆழ்ந்த இருத்தலைக் காண்போம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: yesukarunanidhi.in

 


 

Share: