
இன்றைய இறைமொழி
சனி, 6 ஜூன் 2026
பொதுக்காலம் 9-ஆம் வாரம்
2 திமொ 4:1-8. மாற் 12:38-44
இழத்தலே பெறுதல்
நற்செய்தி வாசகம் மூன்று மனிதர்களை மையமாக வைத்துச் சுழல்கிறது: (அ) மறைநூல் அறிஞர்கள் (அல்லது) திருச்சட்ட வல்லுநர்கள், (ஆ) பணக்காரக் கைம்பெண்கள், மற்றும் (இ) ஏழைக் கைம்பெண். மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் காலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். இவர்கள் குடியியல் மற்றும் சமயச் சட்டங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள். இவர்கள் பெரிதும் மதிக்கப்பெற்றனர். மதிப்பின் அடையாளமாக நீண்ட தொங்கலாடை அணிந்தனர். தொழுகைக் கூடங்களிலும் மக்களின் கூடுகைகளிலும் இவர்களுக்கு முதன்மையான இடம் வழங்கப்பட்டது. சட்டம்சார்ந்த ஆலோசனைகளுக்கு இவர்களுக்குப் பணம் கொடுக்கப்படவில்லை. ஆக, அரசுசார் பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு இவர்கள் பிறரின் தாராள உள்ளத்தையும் கைகளையும் நம்பியிருந்தனர்.
இவர்கள் ‘கைம்பெண்களின் வீடுகளை விழுங்குகிறார்கள்’ எனச் சொல்கிறார் இயேசு. சில திருச்சட்ட அறிஞர்கள் தங்களுடைய வருமானம் மற்றும் வசதிகளுக்காக பணக்காரக் கைம்பெண்களோடு இணைந்து வாழ்ந்தனர். இக்கைம்பெண்கள் தங்களுடைய கணவரின் கட்டுப்பாட்டில் இல்லாததால் பணம் மற்றும் சொத்துகளின் உரிமையாளர்களாக இருந்தனர். தங்களுடைய அழகான வார்த்தைகளாலும், நீண்ட இறைவேண்டல்களாலும் இவர்கள் கைம்பெண்களை ஈர்த்து அவர்களிடமிருந்து பணம் பறித்தனர். சில நேரங்களில் அவர்களுக்கு எதிராக வழக்காடி அவர்களுடைய உரிமைச்சொத்து அனைத்தையும் தாங்களே எடுத்துக்கொண்டனர். சமயத்தின் பெயராலும் சமயத்தின் சட்டங்களின் பெயராலும் கைம்பெண்களை மறைநூல் அறிஞர்கள் பயன்படுத்துவதையும் பயமுறுத்துவதையும் சாடுகின்றார் இயேசு. ஆக, தங்கள் அதிகாரத்தை மறைநூல் அறிஞர்கள் தங்களின் நலனுக்காக மட்டும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
ஏழைக் கைம்பெண்ணுக்கு வேறு பிரச்சினை இருந்தது. எருசலேம் ஆலயம் மற்றும் குருக்களின் நலனுக்காக ஒவ்வொரு யூதரும் அரை ஷெக்கேல் வரியை ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த வரியை எருசலேம் ஆலயத்தில் உள்ள காணிக்கைப் பெட்டியில் அவர்கள் போட வேண்டும். ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரு செப்புக் காசுகளைப் போடுகின்றார். கொடுக்க வேண்டிய வரியில் 60இல் 1 தான் இது. ஆலய வரி கட்டும் அளவுக்கு அவளிடம் பணம் இல்லை. தன்னிடம் உள்ள அனைத்தையும் அவள் போடுகின்றாள். கடவுள்மேல் கொண்டுள்ள பிரமாணிக்கத்தால் தான் அனைத்தையும் போட்டாரா? அல்லது கடவுள் மேல் உள்ள கோபத்தால் போட்டாரா? என்று தெரியவில்லை. ஆனால், அவர் தனக்கென எதையும் வைத்துக்கொள்ளவில்லை.
தனக்கென அவர் எதையும் வைத்துக்கொள்ளவில்லை என்பதால் இனி அவரைக் கடவுளே பராமரிக்க வேண்டும். ஆக, தன்னிடம் உள்ளதை முழுமையாக இழந்த அவர் இறைமகன் இயேசுவால் முன்மாதிரியான நபராகக் காட்டப்படுகின்றார். ஆலய வரி என்பது இறைவனின் பராமரிப்புக்காக மக்கள் செலுத்தும் நன்றிக் காணிக்கை. மற்றவர்கள் இக்காணிக்கையை தங்களிடமிருந்த மிகுதியிலிருந்து போட்டனர். அதாவது, இறைப்பராமரிப்புக்காக நன்றி சொல்வதற்கென அவர்கள் காணிக்கை அளித்தாலும், தங்களைத் தாங்களே பராமரிப்பதற்கென்று அவர்கள் இருப்பை வைத்திருந்தனர். ஆனால், கைம்பெண்ணோ முழுக்க முழுக்க இறைப்பராமரிப்பின்மேல் நம்பிக்கை கொண்டவராக இருக்கின்றார்.
‘இறைவன் நம்மைப் பராமரிக்கிறார்’ என்று வாயால் போதித்தவர்கள் தங்களில் இருந்ததில் மிகுதியானதை காணிக்கையாகப் போட்டார்கள். ‘இறைவன் நம்மைப் பராமரிக்கிறார்’ என்று உள்ளத்தில் நம்பி, வாழ்க்கையாக வாழ்ந்த ஏழைக் கைம்பெண் தன்னிடம் உள்ள அனைத்தையும் போடுகிறார்.
இன்றைய முதல் வாசகத்தில், திமொத்தேயுவுக்கு இறுதி அறிவுரை வழங்குகிற பவுல், ‘நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன்’ என்கிறார். பவுலுடைய தற்கையளிப்பு நமக்கு வியப்பளிக்கிறது. ‘அனைத்திலும் அறிவுத் தெளிவோடு இருந்து, நற்செய்தியாளனின் பணியை ஆற்றி, திருத்தொண்டை முழுமையாகச் செய்து’ விடைபெறுகிறார் பவுல். தன்னிடம் உள்ள அனைத்தையும் கிறிஸ்துவின் நற்செய்திக்காக இழக்கத் துணிந்தார் பவுல்.
இழக்கத் துணிந்தவரே அனைத்தையும் பெற்றவர் என்பது விவிலியம் தரக்கூடிய மேலான பாடம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: