• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இன்றைய இறைமொழி. செவ்வாய், 9 ஜூன் 2026. உப்பும் ஒளியும்

Tuesday, June 9, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
செவ்வாய், 9 ஜூன் 2026
பொதுக்காலம் 10-ஆம் வாரம்
1 அர 17:7-16. மத் 5:13-16

 

உப்பும் ஒளியும்

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மலைப்பொழிவு தொடர்கிறது. ‘பேறுபெற்றவர்கள் யார்’ என்று வரையறுத்த இயேசு, தொடர்ந்து, தம் சீடர்களிடம், ‘நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்கிறீர்கள்!’ என்கிறார். ‘நீங்கள் உப்பாக, ஒளியாக இருக்க வேண்டும்!’ என்று கட்டளையிடவில்லை. மாறாக, அவர்கள் ‘அவ்வாறு இருக்கிறார்கள்’ என்பதை அவர்களுக்கு நினைவூட்டி, ‘தங்களுக்குள் உப்பு என்னும் அடையாளம் கொண்டு வாழவும்,’ ‘தங்களுக்கு வெளியில் ஒளியாக மற்றவர்கள் முன் ஒளிரவும்’ அவர்களை அழைக்கிறார்.

 

சீடர் தன்னகத்தே கொண்டிருக்கிற உப்புத் தன்மையும் ஒளிரும் தன்மையும் அவருடைய சீடத்துவத்தால் – இயேசுவைப் பின்பற்றுவதால் – வருகின்றன. சீடத்துவம் என்பது உப்பு போல ஒருவருக்குள்ளும், ஒளி போல ஒருவருக்கு வெளியிலும் இருக்கிறது. உப்பின் தன்மை என்பது சீடத்துவத்தின் அடையாளம் அல்லது தான்மை, ஒளியின் தன்மை என்பது சீடத்துவத்தின் பணி அல்லது பொறுப்பு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

 

சீடர்கள் கொண்டிருக்க வேண்டிய பொறுப்புணர்வை உப்பு, ஒளி உருவகங்கள் எடுத்துரைக்கின்றன. எனவே, சீடத்துவம் என்பது வெறும் கொடை அல்ல, அதில் ஒரு கடமையும் பணியும் பொறுப்புணர்வும் அடங்கியுள்ளது.

 

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சாரிபாத்துக்குச் செல்கிறார் இறைவாக்கினர் எலியா. காகத்தின் வழியாக அவருக்கு உணவு தந்து அவரைக் காப்பாற்றிய கடவுள், கைம்பெண் ஒருவர் வழியாக அவருக்கு உணவு தருகிறார். எலியாவைக் கண்டவுடன் கைம்பெண் அவரைக் கடவுளின் மனிதர் என அறிந்துகொள்வது நமக்கு வியப்பு தருகிறது. மேலும், முன்பின் தெரியாத ஒருவரைத் தம் வீட்டில் வரவேற்றதோடு, அவருடைய கடவுளை தன் கடவுளாக ஏற்கிறார் கைம்பெண்.

 

இறைவாக்கினர் எலியாவுக்கு அவர் உப்பும் ஒளியுமாக இருக்கிறார்.

 

உப்பாக, ஒளியாக வாழ்தல் நம் ஒவ்வொரு வாழ்வின் பொழுதிலும் நடக்க வேண்டும்.

 

இவ்விரண்டு சொல்லோவியங்களும் நம் உள்ளத்தில் எப்போதும் நிறைந்திருந்தால், நம் வாழ்க்கை இனிமையாகவும், நம் வாழ்வால் மற்றவர்களும் பயன்பெறுவார்கள்.

 

‘இன்று என் ஒளி மனிதர்முன் ஒளிரட்டும்!’ – என்று நாம் ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே சொல்வோம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: