
இன்றைய இறைமொழி
சனி, 10 ஜனவரி ’26
திருக்காட்சிப் விழாவுக்குப் பின் சனி
1 யோவான் 5:14-21. யோவான் 3:22-30
முதலிடத்தில் இருப்பதுதான் மகிழ்ச்சி, அனைவருடைய கண்களும் நம்மேல் படுகிறது போல இருப்பதுதான் மகிழ்ச்சி, நிறையப்பேர் நம்மைத் தேடிவருவதுதான் மகிழ்ச்சி என நாம் பல நேரங்களில் எண்ணிக்கொண்டிருக்கிறோம்.
இரண்டாம் இடத்தில் இருப்பதும், மணமகனுடைய தோழனாக இருப்பதும், இருப்பவர்களே போதும் என எண்ணுவதும் மகிழ்ச்சி எனக் கற்றுத் தருகிறார் திருமுழுக்கு யோவான்.
நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் நிகழ்வு நடக்கும் இடம் யோர்தான் ஆற்றங்கரை. தூய்மைச் சடங்கு பற்றிய விவாதத்தின் பின்புலத்தில், திருமுழுக்கு யோவானிடம் வருகிற யூதர் ஒருவர், ‘எல்லாரும் அவரிடம் (இயேசுவிடம்) போகிறார்கள்!’ எனக் கூறுகிறார். ‘எல்லாரும்’ என்பது மிகைப்படுத்துதல் என்பதை யோவான் உணர்ந்துவிடுகிறார். ஏனெனில், ‘எல்லாரும்’ போனார்கள் என்றால் இவரும் போயிருக்க வேண்டும் அல்லவா!
‘எண்ணிக்கை’ அளவைப் பொருத்தே ஒருவருடைய மதிப்பு என எண்ணுகிற யூதரிடம், இயேசுவும் தாமும் வேறு வேறு எனச் சொல்வதோடு, இருவரையும் ஒப்பிட இயலாது என மொழிகிறார். இறுதியில், ‘அவர் வளர வேண்டும். நான் குறைய வேண்டும்!’ என்கிறார்.
யோவான் கற்றுத்தருகிற வாழ்க்கைப் பாடங்கள் மூன்று:
இந்த உலகம் (அல்லது கடவுள்) நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியைத் தருகிறது. அந்தப் பணிக்கேற்ற பரிசைத் தருகிறது. இவற்றை நாம் மற்றவர்களோடு ஒப்பிட்டு நம்மை நாமே தாழ்த்திக்கொள்ளத் தேவையில்லை. மெசியாவாக இருப்பது ஒரு பணி என்றால், அவருக்கு முன்னோடியாக இருப்பது மற்றொரு பணி.
மணமகள் ஒருவர்தான். அவர் மணமகனுக்கு உரியவர். மணமகனின் தோழர் மணமகளில் அல்ல, மாறாக, மணமகனின் குரலில் மகிழ்கிறார். அவர் மணமகளுக்காக போட்டிபோடத் தேவையில்லை. தன் வரையறையை உணர்ந்து, அந்த வரையறைக்குள் நாம் நம் மகிழ்ச்சியைக் காண வேண்டும்.
‘அவருடைய செல்வாக்குப் பெருக வேண்டும். எனது செல்வாக்குக் குறைய வேண்டும்’ என்று சொல்லி, இயேசுவுக்கு முதலிடம் கொடுத்துத் தன் இடம் அமர்கிறார் யோவான். யோவானுடைய பெருந்தன்மையும் நற்குணமும் போற்றுதற்குரியவை. இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொருவரும் தன் வளர்ச்சியை அடைய முடியும் என்று உணர்ந்தவராக இருக்கிறார். ஒரே தோட்டத்தில் இரண்டு செடிகள் இருக்கின்றன என்றால், இரண்டு செடிகளும் தங்களுடைய முழுமைநிலைக்கு வளர முடியும்.
இந்த நிகழ்வு நடக்கும் இடமும் யோவானுடைய பரந்த உள்ளத்திற்குக் காரணமாக இருக்கிறது. யோர்தான் ஆறு. வாழ்க்கை என்பது ஓடுகிற ஆறு போன்றது என்று உணர்ந்த எவரும், எல்லாம் தற்காலிகமானது என்று அறிந்தவராக இருப்பார். நிரந்திரத்திற்காகப் படைக்கப்பட்ட நாம் தற்காலிகத்துக்குள் நம்மை அடைத்துக்கொள்ளத் தேவையில்லை. ‘ஒரே ஆற்றில் இரண்டு முறை இறங்க முடியாது’ என்கிறார் ஹெராகிளிட்டஸ் என்கிற மெய்யியலாளர். வாழ்க்கை என்னும் கால ஓட்டத்துக்குள் நாம் மீண்டும் இறங்குவதற்குள் அது நகர்ந்துவிடுகிறது. நாமும் நகர்கிறோம். நமக்குப் பின் நம்மைவிடப் பெரியவர் ஒருவர் வருகிறார் என்ற எண்ணத்தில் நாம் மகிழ்ச்சியுடன் நகர்வதே நலம்.
யோவானின் மேற்காணும் நற்குணங்களை மனத்தில் வைத்தே இயேசு பின்நாள்களில், ‘பெண்ணிடம் பிறந்தவர்கள் – மனிதராய்ப் பிறந்தவர்களுள் – திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை’ (மத் 11:11) என்கிறார்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: