• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

திருச்சட்டம் நிறைவேற்றுதல். இன்றைய இறைமொழி. புதன், 10 ஜூன் 2026.

Wednesday, June 10, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
புதன், 10 ஜூன் 2026
பொதுக்காலம் 10-ஆம் வாரம்
1 அர 18:20-39. மத் 5:17-19

 

திருச்சட்டம் நிறைவேற்றுதல்

 

இயேசுவின் சமகாலத்து மக்கள் மெசியா எதிர்பார்ப்பு கொண்டிருந்தார்கள். மெசியா வரும்போது திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் அழித்துவிடுவார் என நினைத்தார்கள். அவர்களுடைய புரிதலைச் சரி செய்கிறார் இயேசு. திருச்சட்டமும் இறைவாக்குகளும் தம்மில் நிறைவேறுகின்றன என்றும், தம் வாழ்வும் பணியும் அவற்றை நிறைவேற்றுவதற்காகவே என்றும் பதில் தருகிறார் இயேசு.

 

‘நிறைவேற்றுதல்’ (கிரேக்கத்தில், ‘ப்ளேரோ’) என்பதை மேன்மையாக்குதல், வளப்படுத்துதல், முழுமையாக்குதல் என்றும் எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து வரக்கூடிய நற்செய்தி வாசகப் பகுதியில், இயேசு சில கட்டளைகளை எடுத்து அவற்றுக்குப் புதிய பொருள் கொடுக்கிறார்.

 

மேலும், திருச்சட்டம் வரையறுக்கிறவற்றை வாழ்வாக்குகிறார். எடுத்துக்காட்டாக, ‘அன்பு’ என்னும் திருச்சட்டத்தின் கட்டளையை தம் வாழ்வின் நெறியாக்கிக்கொள்கிறார் இயேசு.

 

விண்ணரசில் மேன்மை என்பது திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் அடங்கியுள்ளது என்று சொல்வதன் வழியாக, தம் சீடர்களும் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர்கள் என்கிறார்.

 

இன்றைய முதல் வாசகத்தில், பாகால் இறைவாக்கினர்களுக்குச் சவால் விடுகிற இறைவாக்கினர் எலியா, தன் கடவுளே உண்மையான கடவுள் என்பதை அவர்களுக்கு நிரூபிக்கிறார்.

 

வாசகத்தின் இறுதியில் மக்கள் அனைவரும், ‘ஆண்டவரே கடவுள், ஆண்டவரே கடவுள்’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள். இங்கே, மக்கள் கடவுள்மேல் வைக்கும் நம்பிக்கை அல்ல, மாறாக, கடவுளின் நம்பகத்தன்மையே நமக்கு வியப்பளிக்கிறது. இறைவாக்கினர் எலியாவின் அழைப்புக்கு உடனே செவிசாய்க்கிறார் கடவுள்.

 

இன்று நம் வாழ்வுக்கென நாம் வைத்திருக்கிற ஒழுங்குமுறைகள் எவை? கடவுளின் சட்டங்கள் குறித்துக்காட்டுகிற ஆன்மாவை நாம் அடையாளம் கண்டு வாழ்வது எப்படி?

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: