
இன்றைய இறைமொழி
திங்கள், 12 ஜனவரி ’26
பொதுக்காலம் முதல் வாரம், திங்கள்
1 சாமுவேல் 1:1-8. மாற்கு 1:14-20
திருவருகைக்காலம், கிறிஸ்து பிறப்புக் காலம் முடிந்து பொதுக்காலத்துக்குள் நாம் நுழைகிறோம். எதிர்நோக்கு, அமைதி, மகிழ்ச்சி, அன்பு என்னும் மதிப்பீடுகளையும், கிறிஸ்து பிறப்பு நிகழ்வில் கடவுளின் உடனிருப்பையும் உணர்ந்த நாம், அருளுக்கு மேல் அருள் பெற்ற நாம் அந்த அருளை அசை போட்டவர்களாக பொதுக்காலத்தில் நுழைவோம்.
இன்றைய முதல் வாசகத்தில், சாமுவேல் நூலின் தொடக்கத்தை வாசிக்கிறோம். இஸ்ரயேலின் இறுதி நீதித் தலைவராகவும் முதல் இறைவாக்கினராகவும் திகழ்ந்து, அரசாட்சிக்கு வித்திட்ட சாமுவேலின் தாய் அன்னாவின் கையறு நிலையை நாம் இங்கே வாசிக்கிறோம். தன் மலட்டுத்தன்மையின் பொருட்டு கண்ணீர் வடிப்பவராகவும், குடும்பத்தில் கேலி செய்யப்படுபவராகவும் இருக்கிறார் அன்னா. தங்கள் வாழ்வின் கண்ணீர், கவலை அனைத்தின் நடுவிலும் ஆண்டவராகிய கடவுளின் இல்லத்திற்கு ஆண்டு தோறும் பயணம் செய்கிறது அன்னாவின் குடும்பம். அன்னாவை மலடியாக்கிய ஆண்டவரே பின்நாளில் அவர் வழியாக மாபெரும் இறைவாக்கினர் தோன்றச் செய்கிறார். வாழ்வின் எதார்த்தங்கள் அழுகை தரும்போது பொறுமையோடு இருக்கக் கற்றுக்கொடுக்கிறார் அன்னா.
நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் பணித்தொடக்கத்தை வாசிக்கிறோம். ‘அறிவிப்பு,’ ‘அழைப்பு’ என்னும் இரண்டு பகுதிகளாக உள்ளது இந்த வாசகம். ‘காலம் நிறைவேறிவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்’ என்கிறார் இயேசு. இது கடவுள் செயலாற்றும் காலம். இயேசுவே கடவுளின் நற்செய்தி. இயேசு அறிவிக்கும் சொற்களும் அவர் ஆற்றிய செயல்களுமே நற்செய்தி. நம்மை நோக்கி தினமும் இந்த நற்செய்தி வருகிறது. நாம் அதற்கேற்ப பதிலிறுப்பு செய்ய வேண்டும்.
தம் பணிக்குத் துணையாக சீடர்களைத் தெரிந்துகொள்கிறார் இயேசு. தம் முதற்சீடர்களைப் பணிக்கு அழைக்கும் இயேசு, ‘மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்’ என்று வாக்குறுதி தருகிறார். மீன்களைப் பிடித்துக் கொண்டவர்களின் பார்வையை அகலப்படுத்துகிறார். மீன்களைப் பிடிக்கும்போது நம் வாழ்க்கை வெறும் மீன்களோடு முடிந்துவிடுகிறது. ஆனால், மனிதர்கள்மேல் நாம் ஏற்படுத்தும் தாக்கம் அவர்கள் வழியாக என்றென்றும் தொடர்கிறது. கடவுளைப் பிடித்துக்கொள்கிற ஒருவரே மனிதர்களைப் பிடிக்க முடியும். கடவுளிடமிருந்து தூரமாக அல்ல, மாறாக, கடவுளை நோக்கி மற்றவர்களை அழைத்து வருவதே சீடர்களின் பணி.
அன்னாவின் பொறுமை அவருடைய வாழ்க்கையின் கதவுகளைத் திறக்கிறது.
முதற்சீடர்களின் தயார்நிலை அவர்களுடைய வாழ்வின் பார்வையை விரிவுபடுத்துகிறது. கடவுளைப் பற்றிக்கொள்கிற அவர்கள் மனிதர்களைப் பிடிக்கத் தொடங்குகிறார்கள்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: