இன்றைய இறைமொழி
ஞாயிறு, 13 ஏப்ரல் ’25
ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு
குருத்தோலைப் பவனியில்: லூக்கா 19:28-30
திருப்பலியில்: எசாயா 50:4-7. திபா 22. பிலிப்பியர் 2:6-11. லூக்கா 22:14-23:56
தாழ்ச்சிநிறை அரசரோடு இணைந்த பயணம்
எருசலேம் நகருக்கு வெளியே அமைந்திருந்த ஒலிவத் தோட்டம் ஒன்றில் இளந்தளிர் ஒன்று காற்றில் அசைந்தாடியது. அத்தோட்டத்திலேயே உயரமான மரத்தில் இருக்கிறோம் என்ற பெருமிதம் இருந்தது அந்தத் தளிருக்கு. ஒருநாள் தோட்டத்தைக் கடந்து சென்ற சிலர், ‘மெசியா வருகிறார்! அவர் எருசலேமில் இன்று நுழைகிறார்!’ என்று பேசிக்கொண்டே சென்றார்கள்.
‘மெசியாவை நானும் பார்த்தால் நன்றாக இருக்குமே!’ என்று தளிர் காற்றிடம் சொன்னது. காற்று அதனிடம், ‘அப்படியெனில் வெட்டப்படுவதற்குத் தயாராக இரு!’ என்றது.
வெட்டப்படுவதற்கா? தளிர் பயத்தால் நடுங்கியது.உயர்ந்த மரத்தின் உச்சிக் கொம்பில் இருந்து அகற்றப்படுவோமோ என்ற பயம் வந்தது.
இருந்தாலும், ‘அரசர் வருகையை நான் காண வேண்டும்!’ என்று சொல்லிக் கொண்டது. சற்று நேரத்தில் அந்த இடம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பியது. ‘ஓசன்னா! தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப்பெறுக!’ என்று மக்கள் முழங்கத் தொடங்கினார்கள். யாரோ ஒருவர் மரத்தின் கிளையை வளைத்து தன்னை ஒடித்து எடுப்பதுபோலத் தெரிந்தது. இயேசு கழுதையின்மேல் பவனி வந்தார். அவர் வந்த பாதையின் நடுவில் கிடந்தது ஒடிக்கப்பட்ட தளிர்.
அந்த நேரத்தில் அது வெறும் தளிர் அல்ல – மாறாக அது வரவேற்பு, புகழ்ச்சியின் தரை விரிப்பு, அர்ப்பணத்தின் அடையாளம்.
சில நாள்களில் அத்தளிர் காய்ந்து கருகியது. காற்றில் பறந்து மறைந்தது. சில நிமிடங்களில் அது தன் வாழ்வின் நோக்கத்தை அடைந்தது.
இன்று நாம் இயேசுவின் எருசலேம் நுழைவை நினைவுகூர்கிறோம். இயேசுவோடு இணைந்து நாமும் எருசேலம் செல்கிறோம். இயேசுவின் பணி எருசலேமில் முற்றுப்பெறுகிறது. அங்கிருந்தே அவருடைய புதிய பணி திருத்தூதர்கள் வழியாகத் தொடங்குகிறது. எருசலேம் என்பது முடிவு அல்ல. மாறாக, புதிய தொடக்கம்.
(குருத்தோலைப் பவனி வாசகத்திலிருந்து)
இயேசுவோடு வழிநடந்து பவனியாக வந்தோம். இந்தப் பவனி நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) ‘இது ஆண்டவருக்குத் தேவை’ – கீழ்ப்படிதல்நிறைந்த பற்றுறுதி
கழுதையை அவிழ்க்கச் சென்ற சீடர்கள் அதன் பொருள் தெரியாமல் சென்றார்கள். கழுதையை வைத்து என்ன செய்யப் போகிறார் என்று யோசித்தார்கள். ஆனாலும் சென்றார்கள். கழுதை ஆண்டவருக்குத் தேவை. நாமும் ஆண்டவருக்குத் தேவை. ஆண்டவர் நமக்குத் தேவை என்பதை நாம் உணர்கிறோமா?
(ஆ) ‘அரசராய் வருகிறவர் வாழ்க!’ – மகிழ்ச்சிநிறை அறிவிப்பு
வாடகைக் கழுதையில் வந்த தங்கள் கடைசி நம்பிக்கையான இயேசுவை அரசர் என வாழ்த்துகிறார்கள். ‘ஓசன்னா – எங்களை மீட்டருளும்!’ என்பது அவர்களுடைய வாழ்த்தாகவும் இறைவேண்டலாகவும் அமைந்தது. இயேசுவைப் பற்றிய நம் அறிக்கை என்ன?
(இ) ‘இவர்கள் அமைதியாக இருந்தால்’ – துணிச்சல்நிறை சான்று
கற்களும் இயேசுவுக்குச் சான்று பகரும். ஒளியை கட்டிலின்கீழ் வைக்க இயலாது. நம்பிக்கையை நமக்குள் புதைத்துக்கொள்ள இயலாது. கடவுள் அனுபவம் பெறுகிற நாம் அதை மற்றவர்களுக்கு அறிவிக்கத் தயாராக இருக்கிறோமா?
தாழ்ச்சியிலும் அமைதியும் இயேசுவோடு வழிநடக்கிற நாம் அவரை அரசர் என அறிவிப்போம். அவருடைய அரசநிலையை ஏற்றுக்கொள்வோம்.
(திருப்பலி வாசகங்கள் அடிப்படையில்)
கிறிஸ்துவின் துன்பத்திலும் அர்ப்பணத்திலும் இணைந்து நடத்தல்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் – பாடுகள் வரலாற்றில், மற்ற வாசகங்களில் மூன்று வகையான நகர்வுகளைக் காண்கிறோம்.
(அ) செவிமடுத்தலும் தொடர்ந்து முன்னேறிச் செல்தலும்
‘காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகிறார்’ எனச் சொல்கிற துன்புறும் ஊழியன் தொடர்ந்து வழிநடக்கிறார். ஊழியன் கடவுளின் சீடராக அவருடைய குரலுக்குச் செவிகொடுக்கிறார். தன் துன்பத்திலும் கடவுளின் உடனிருப்பைக் கண்டுகொள்கிறார்.
(ஆ) விரக்தியிலிருந்து பற்றுறுதிக்கு
‘என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்?’ என்னும் கூக்குரல் துன்புறும் ஆன்மாவின் அழுகுரலாக இருக்கிறது. கடவுளை நோக்கி ஆன்மா குரல் எழுப்பும்போது ஆறுதலை அது தன்னகத்தே பெற்றுக்கொள்கிறது.
(இ) நிறைவிலிருந்து வெறுமைக்கு
கடவுளின் தன்மையில் நிறைந்திருந்த இயேசு அதை வெறுமையாக்குகிறார். சிலுவை வெறுமையின் அடையாளமாக இருக்கிறது. இயேசு அனுபவிதத்த நிராகரிப்பு, அமைதி, வலி, தனிமை ஆகியவற்றை வாசிக்கக் கேட்டோம். வலியின் வழியாகவே வாழ்வின் வழி பிறக்கிறது என நமக்குக் கற்பிக்கிறார் இயேசு.
புனித வாரத்தில் நுழைந்திருக்கிற நாம் பேசுதல் விடுத்து செவிமடுப்போம், நம் ஆன்மாவின் அழுகுரலைக் கேட்போம், நம் பெருமை உணர்வை வெறுமையாக்குவோம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதுவர்
Share: