• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இறைவேண்டலின் ஆற்றல். இன்றைய இறைமொழி. திங்கள், 13 ஏப்ரல் ’26.

Monday, April 13, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
திங்கள், 13 ஏப்ரல் ’26
பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் – திங்கள்
திப 4:23-31. யோவா 3:1-8

 

இறைவேண்டலின் ஆற்றல்

 

எருசலேமில் மேலறை உள்ளது. இங்குதான் இயேசு தம் சீடர்களோடு இறுதி இராவுணவைக் கொண்டாடினார். திருத்தூதர்கள் அன்னை கன்னி மரியாவுடன் இங்கு கூடியிருந்தபோதுதான் தூய ஆவியார் அவர்கள்மேல் எரிகிற தீ நாக்கு வடிவில் இறங்கி வந்தார். இந்த இடம் இறைவேண்டலின் வலிமையை நமக்கு எடுத்துரைக்கிறது.

 

இன்றைய முதல் வாசகத்தில் நம்பிக்கையாளர்கள் யாவரும் ஒரே மனத்துடன் கூடி வந்து கடவுளை நோக்கிக் குரல் எழுப்பு மன்றாடினார்கள் எனப் பதிவு செய்கிறார் லூக்கா. இதன் சூழல் என்னவெனில், திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் தலைமைச்சங்கத்தால் கைது செய்யப்படுகிறார்கள். இயேசுவுக்கு நிகழ்ந்ததுபோல இவர்களுக்கும் நேரிடலாம் என்று நம்பிக்கையாளர்கள் பயந்துகொண்டிருக்க, அவர்களுடைய இறைவேண்டலால் பேதுருவும் யோவானும் விடுதலை பெற்று வருகிறார்கள். நம்பிக்கையாளர்களுடைய இறைவேண்டல் திருத்தூதர்களுக்கு விடுதலை பெற்று தருகிறது.

 

நமக்கு நற்செய்தி அறிவித்தவர்களுக்காக, நம்மை நம்பிக்கையில் வழிநடத்துபவர்களுக்காக நாம் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பது முதல் பாடம். மேலும், இறைவேண்டல் ஒரே மனத்துடன் நிறைவேற்றப்படும்போது கூடியிருக்கும் இடமே அதிரும் அளவுக்கு மக்கள் ஆற்றல் பெறுகிறார்கள்.

 

நற்செய்தி வாசகத்தில், இயேசு நிக்கதேமுடன் உரையாடுகிறார். உரையாடல் மெதுவாக நகர்ந்து மறுபிறப்பு நோக்கிச் செல்கிறது. நீரினாலும் ஆவியாராலும் பிறப்பவர் மறுபிறப்பு அடைகிறார் என அவருக்குச் சொல்கிறார் இயேசு. காற்றைப் போல தூய ஆவியாரால் பிறப்பவர் தாம் விரும்புகிற திசையில் இடத்தில் வலம் வருகிறார்.

 

தூய ஆவியாருக்கும் இறைவேண்டலுக்கும் ஒரு நெருக்கம் இருக்கிறது. பவுல் குறிப்பிடுவதுபோல ஆவியார் வழியாகவே நாம் கடவுளை, ‘அப்பா, தந்தையே’ என அழைக்கிறோம்.

 

இறைவேண்டல் என்றால் கடவுளிடம் விண்ணப்பங்களை அடுக்குவது அல்ல. மாறாக, அவரை நம் வாழ்விற்குள் அனுமதித்து நம் வாழ்வின் நிகழ்வுகளை அவர்தாமே நடத்திச்செல்லுமாறு அனுமதித்தல். இதற்கு நிறைய துணிச்சலும் அமைதியும் தேவை.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: