• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

யோனாவைவிடப் பெரியவர்! இன்றைய இறைமொழி. திங்கள், 13 அக்டோபர் ’25.

Monday, October 13, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இயேசுவில் நம்பிக்கை இறைவாக்கினர் யோனா தன்அடையாளம் அடையாள சோதனை இயேசுவை சோதித்தல் நம்பிக்கையின்மை தாழ்வான மதிப்பீடு தீய தலைமுறையினர் யோனா அடையாளம் சாலமோன் அடையாளம் இயேசுவின் இறப்பு-உயிர்ப்பு நினிவே நகர் இயேசு உயிருள்ள ஆலயம் கடவுளின் நற்செய்தி பணி

இன்றைய இறைமொழி
திங்கள், 13 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் வாரம், திங்கள்
உரோமையர் 1:1-7. லூக்கா 11:29-32

 

யோனாவைவிடப் பெரியவர்!

 

‘தன்அடையாளம் கொண்டிருக்கிற எவரும் பிறரிடமிருந்து அடையாளம் கேட்பதில்லை.’

 

இயேசுவை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகிற அவர்களுடைய சமகாலத்து மக்கள் சிலர் அவரிடம் அடையாளம் ஒன்றைக் கேட்கிறார்கள். முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள், ‘ஆண்டவர் நம்மோடு இருக்கிறாரா?’ என்று அடையாளம் கேட்டுச் சோதிக்கிறார்கள் (காண். விப 17:7). இறைவாக்கினர்களின் செய்தி சரியானதா என்று அறிந்துகொள்ள அரசர்கள் அடையாளம் கேட்கிறார்கள் (காண். எசா 7:14). அடையாளம் கேட்பது ஆண்டவரைச் சோதிப்பது என்று கருதப்படுகிறது. அடையாளம் கேட்பது அடையாளம் கேட்பவரைப் பற்றிய மூன்று விடயங்களைச் சொல்கிறது: (அ) அடையாளம் கேட்பவரின் தயக்கம் அல்லது நம்பிக்கையின்மை. (ஆ) மற்றவர் பொய்யுரைக்கிறார் என்னும் ஐயம். (இ) மற்றவர் பற்றிய தாழ்வான மதிப்பீடு.

 

இயேசுவிடம் அடையாளம் கேட்பவர்கள் அவர்மேல் நம்பிக்கைகொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள். அவர் உரைக்கும் செய்தி பொய் என எண்ணுகிறார்கள். தாழ்வான பின்புலம் கொண்ட இவர் விண்ணரசு பற்றி எப்படிப் போதிக்க முடியும் என்று எண்ணுகிறார்கள்.

 

தம்மிடம் அடையாளம் கேட்கும் சமகாலத்து மக்களை ‘தீய தலைமுறையினர்’ என அழைக்கிறார் இயேசு. அவர்களுடைய தீமை என மொழிவது அவர்களுடைய இரட்டை வேடம் அல்லது வெளிவேடத்தையே. ‘தலைமுறையினர்’ என்னும் சொல் அவர்களுடைய முன்னோர்களைக் குறிக்கிறது.

 

யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறொன்றும் தரப்படாது எனச் சொல்கிற இயேசு, சாலமோன் அடையாளத்தையும் முன்மொழிந்து, இறுதியாக, தாம் யோனாவைவிடப் பெரியவர் என்றும், சாலமோனைவிடப் பெரியவர் என்றும் அறிவிக்கிறார்.

 

யோனா நினிவே நகரில் மனமாற்றத்தின் நற்செய்தியை அறிவித்தவர். ஆண்டவராகிய கடவுள் அவரை அழைத்தபோது அவரிடமிருந்து தப்பி ஓடியவர். மீனின் வயிற்றில் மூன்று நாள்கள் தங்கியிருந்தவர். மூன்று நாள் நடக்க வேண்டிய தூரத்தை ஒரே நாளில் கடந்து ஏனோதானோ என்று நற்செய்தியை அறிவித்தவர். இருந்தாலும் மக்கள் அவருடைய நற்செய்தியைக் கேட்டு அதற்கேற்ற பதிலிறுப்பு செய்கிறார்கள்.

 

இயேசு யூதேயா, சமாரியா, கலிலேயா பகுதிகளில் நற்செய்தி அறிவிக்கிறார். தந்தையாகிய கடவுளின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிந்து மனித உரு ஏற்கிறார். இறந்து உயிர்க்கும்முன் மூன்று நாள்கள் நிலத்தின் வயிற்றில் இருப்பார். நற்செய்தி அறிவிப்புடன் இணைந்து வல்ல செயல்களும் ஆற்றினார். ஆனால், மக்கள் அவரையும் அவருடைய செய்தியையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

ஆக, யோனாவைவிடப் பெரியவர் இயேசு.

 

தாவீதின் மகனாகிய சாலமோன் ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராக இருக்கிறார். கடவுளிடம் ஞானத்தை வேண்டிப் பெறுகிறார். ஞானத்துடன் ஆலயத்தைக் கட்டி எழுப்புகிறார், மக்களை அரசாள்கிறார். சாலமோனின் ஞானம் பற்றிக் கேள்விப்படுகிற சேபா நாட்டு அரசி அவரைத் தேடி வருகிறார். அவருடைய ஞானம் கண்டு வியந்து பாராட்டிப் பரிசுகள் வழங்குகிறார்.

 

தாவீதின் மகன் என அழைக்கப்பட்ட இயேசு இறையாட்சியை அறிவிக்கிறார். கடவுளின் ஞானமாக இருந்த அவர் மனுவுருவாகிறார். தாமே உயிருள்ள ஆலயம் என முன்மொழிகிறார். மக்களைத் தம் போதனையால் நெறிப்படுத்துகிறார். ஆனால், மக்கள் அவருடைய ஞானத்தைப் பாராட்டுவதற்குப் பதிலாக அவருடைய எளிய பின்புலம் கண்டு இடறல்படுகிறார்கள்.

 

ஆக, சாலமோனைவிடப் பெரியவர் இயேசு.

 

நினிவே நாட்டு மக்களும், சேபா நாட்டு அரசியும் இயேசுவின் சமகாலத்தவருடைய நம்பிக்கையின்மைகண்டு அவர்களைக் கடிந்துரைப்பர்.

 

இந்நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?

 

(அ) ‘அடையாளம் கேட்பவர் நம்புவதில்லை. நம்புகிறவருக்கு அடையாளம் தேவையில்லை’ என்கிறார் அக்வினா நகர் புனித தோமா. இயேசுவின் சமகாலத்தவர் அவரை நம்பாதவர்களாகவே இருந்தனர். இன்று நாம் இயேசுவை ஏற்றுக்கொள்ள, பின்பற்றி வாழத் தேவையான நம்பிக்கையைப் பெற்றிருக்கிறோமா? அல்லது அவரிடமிருந்து அடையாளம் கேட்கிறோமா?

 

(ஆ) யோனா, சாலமோன், இயேசு ஆகியோர் தங்களுக்குக்குரிய பணிகளைச் சரியாகச் செய்தார்கள். மற்றவர்களின் ஏற்றுக்கொள்தலும் நிராகரிப்பும் அவர்களுடைய பணிகளைப் பாதிக்கவில்லை. ஆனால், பல நேரங்களில் நமக்கு வெளியிலிருந்து வரும் பதிலிறுப்பைப் பொருத்தே, அல்லது மற்றவர்களின் நேர்முக, எதிர்மறை விமர்சனங்களைப் பொறுத்தே நம் வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்கிறோம். இப்படிச் செய்வதால் நாம் நம் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை நமக்கு வெளியே இருப்பவர்களுக்குக் கொடுத்துவிடுகிறோம். இது தவறு.

 

இன்றைய முதல் வாசகத்தில், உரோமை நகரத் திருஅவைக்கான தன் மடலைத் திறக்கும் பவுல், ‘கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்டவனாகிய பவுல் எழுதுவது’ என்று தன்அடையாளம் தருகிறார். தான் பெற்றிருக்கிற அழைப்பையும் தான் செய்கிற பணியையும் ஒன்றாகக் குறிப்பிட்டு, தன் அழைப்பு கடவுளிடமிருந்து வந்தது என்பதையும், தான் செய்கிற பணியும் அவருடையது என்பதையும் அறிவிக்கிறார்.

 

தன்அடையாளம் கொண்டிருக்கிற எவரும் பிறரிடமிருந்து அடையாளம் கேட்பதில்லை.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: