
இன்றைய இறைமொழி
புதன், 14 ஜனவரி ’26
பொதுக்காலம் முதல் வாரம், புதன்
1 சாமுவேல் 3:1-10, 19-20. மாற்கு 1:29-39
இன்றைய முதல் வாசகத்தில் தொடர்ச்சியாக எதிர்மறையான வாக்கியங்களைக் காண்கிறோம் – ‘ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை. ஏலி கண்பார்வை மங்கியிருந்தார்.’ இவற்றின் இறுதியில் வரும் ஒரு வாக்கியம் எதிர்நோக்கு தருகிறது: ‘கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை.’
கடவுளின் விளக்காக இளவல் சாமுவேல் ஆண்டவர் முன்னிலையில் நிற்கிறார். பின் அவரே இஸ்ரயேலின் இறைவாக்கினராக அனைவராலும் அறியப்படுகிறார். இனி சாமுவேல் இறைவாக்கினர் என்னும் ஒளியில் இஸ்ரயேல் மக்கள் கடவுளின் திருவுளம் எது என்பதை அறிந்துகொள்வார்கள். அவர் காட்டும் வழியில் நடப்பார்கள்.
நற்செய்தி வாசகத்தில் இயேசு கடவுளின் விளக்காக கப்பர்நாகூம் மக்கள் நடுவே விளங்குகிறார். பேதுருவின் மாமியார்க்கு உடல்நலம், நகரில் உள்ள அனைவருக்கும் உடல் நலம் என்று வல்ல செயல்கள் ஆற்றுகிற இயேசு, தனிமையில் தம் விளக்குக்கு எண்ணெய் ஊற்றுவதற்காக இறைவேண்டலில் தம் தந்தையிடம் திரும்புகிறார். ‘எல்லாரும் உம்மைத் தேடுகிறார்கள்’ என்று சீடர்கள் சொன்னபோது தம் இலக்கு அறிந்தவராக அடுத்த இடம் நகர்கிறார் இயேசு.
(அ) கடவுளின் விளக்கு நம் நடுவே ஒளிர்கிறது. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் நமக்கு அச்சத்தையும் கலக்கத்தையும் தந்தாலும், நம் உள்ளத்தின் எதிர்நோக்கை அணையாமல் காக்கிறது கடவுளின் விளக்கு. இறைவார்த்தையில், நற்கருணையில், சக மனிதர்களில் கடவுளின் விளக்கு நம் நடுவே ஒளிர்கிறது.
(ஆ) நாம் அனைவரும் கடவுளின் விளக்குகளாக ஒருவர் மற்றவர்க்குத் திகழ வேண்டும். இறைவனால் அழைப்பு பெற்ற சாமுவேல் உடனடியாகச் செயலாற்றுகிறார். இயேசு தம் பணி வாழ்வில் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு பொழுதும் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள் சாமுவேலும் இயேசுவும். கடவுளின் விளக்கு அணையாமல் காத்துக்கொள்கிறார்கள்.
நம் மண்ணின் புனிதர், பொதுநிலையினரின் பாதுகாவலர், புனித தேவசகாயத்தின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம். தன் பணித்தளத்தில் கடவுளின் விளக்காக ஒளிவீசிய நம் புனிதர், பல்வேறு துன்பங்களுக்கு நடுவே நம்பிக்கை என்னும் விளக்கை அணையாமல் காத்துக்கொண்டார். இவர் கொண்டிருந்த மனத்திடம், நம்பிக்கை நமக்கும் கிடைக்க இவர் வழியாக இறைவேண்டல் செய்வோம்.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Source: Rev. Fr. Yesu Karunanidhi
Share: