• 044-26428162
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஆறு நாள்களுக்கு முன்பு. இன்றைய இறைமொழி. திங்கள், 14 ஏப்ரல் ’25.

Monday, April 14, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Lenten Season Daily Catholic Lectio இன்றைய இறைமொழி

இன்றைய இறைமொழி
திங்கள், 14 ஏப்ரல் ’25
புனித வாரத்தின் திங்கள்
எசாயா 42:1-7. யோவான் 12:1-11

 

ஆறு நாள்களுக்கு முன்பு

 

‘பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள்களுக்கு முன்’ – இப்படியாகத் தொடங்குகிறது இன்றைய நற்செய்திப் பகுதி. ஆறு நாள்களுக்கு முன் நாம் ஆறு நபர்களைச் சந்திக்கிறோம்: (1) இலாசர் – இயேசு இவரை உயிர்த்தெழச் செய்கிறார். வாழ்க்கையை இரண்டாம் முறையாக வாழும் வாய்ப்பு பெற்றவர் இவர். (2) மார்த்தா – இயேசுவுக்கும் விருந்தினர்களுக்கும் பரிமாறுவதில் கருத்தாயிருக்கிறார். (3) மரியா – இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம் கொண்டு வந்து இயேசுவின் காலடிகளில் கொட்டிப் பூசுகிறார். (4) யூதாசு இஸ்காரியோத்து – மரியாவின் செயலை வீண் எனக் கடிந்துகொள்கிற இவர், தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுக்க விழைகிறார். (5) யூதர்கள் – இலாசரைக் காண வந்துள்ள இவர்கள், அவரைக் கொலை செய்ய விரும்புகிறார்கள். ஏனெனில், இலாசரை முன்னிட்டுப் பலர் இயேசுவில் நம்பிக்கை கொள்கிறார்கள். (6) இயேசு – தலைக்குமேல் கத்தி தொங்கினாலும் இயல்பாகவும் அமைதியாகவும் இருந்து, மார்த்தாவின் விருந்தோம்பலையும் மரியாவின் நறுமணப்பூசுதலையும் ஏற்றுக்கொள்கிறார்.

 

இவர்களில் சிலர் கொடுப்பவர்கள், சிலர் எடுப்பவர்கள். மார்த்தா உணவு கொடுக்கிறார். மரியா நறுமணத் தைலம் கொடுக்கிறார். இயேசு இலாசருக்கு உயிர் கொடுக்கிறார். யூதாசு பணத்தை எடுக்கிறார். யூதர்கள் இப்போது இலாசரின் உயிரையும் பின்னர் இயேசுவின் உயிரையும் எடுக்கிறார்கள்.

 

இவ்வுலகம் கொடுப்பவர்கள் மற்றும் எடுப்பவர்களால் நிறைந்துள்ளது. கொடுப்பவர்கள் பிறர்மையம் கொண்டிருக்கிறார்கள், எடுப்பவர்கள் தன்மையம் கொண்டிருக்கிறார்கள். கொடுப்பவர்கள் பொருள்களைவிட மனிதர்களை உயர்வாக நினைக்கிறார்கள். எடுப்பவர்கள் பொருள்களையே உயர்வாக நினைக்கிறார்கள். கொடுப்பவர்கள் நம்பிக்கை பார்வை கொண்டிருக்கிறார்கள். எடுப்பவர்கள் அனைத்தையும் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள்.

 

இன்றைய முதல் வாசகப் பகுதி எசாயாவின் துன்புறும் ஊழியன் பாடல்களின் முதல் பாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. துன்புறும் ஊழியனை இப்பகுதி முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறது. அமைதியும் தன்னடக்கமும் இரக்கமும் நீதியும் உடையவராக அவர் முன்மொழியப்படுகிறார்.

 

இவர் இயேசுவில் பிரதிபலிக்கிறார்.

 

‘நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை’ என்கிறார் இயேசு.

 

தமக்கு நேரப்போவதை இயேசு அறிந்தவராக இருப்பதை இச்சொற்கள் நமக்கு உயர்த்துகின்றன. இப்புனித வாரத்தில் இயேசு நம்முடன் இருக்கிறாரா? நாம் அவரோடு இருக்கிறோமா?

 

பெத்தானியா

 

இயேசுவின் தொடக்கம் நாசரேத்து. அவருடைய இறுதி எருசலேம்.

 

இந்த இரண்டுக்கும் இடையில் அவர் இளைப்பாறிய இடம் பெத்தானியா. தன் வாழ்வில் அவர் சோர்ந்த பொழுதெல்லாம் அவரைத் தூக்கி நிறுத்தியது அவருடைய நண்பர் வட்டம்.

 

துன்புறும் நம் அனைவருக்கும் பெத்தானியா போல இருக்கிறார் நம் கடவுள்.

 

நம் வாழ்வின் பெத்தானியாவாகிய அவரை அனுபவித்தால் துன்பமோ, இன்பமோ சமநிலையில் நாம் இருக்க முடியும்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: