• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஒளியிடம் வருகிறார்கள். இன்றைய இறைமொழி. வியாழன், 15 ஏப்ரல் 2026.

Wednesday, April 15, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
வியாழன், 15 ஏப்ரல் 2026
பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் – புதன்
திப 5:17-26. யோவா3:16-21

 

ஒளியிடம் வருகிறார்கள்

 

இயேசு-நிக்கதேம் உரையாடல் இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியில் நிறைவுக்கு வருகிறது. உரையாடல்போலத் தொடங்கி இயேசுவின் உரையாக நகர்கிறது வாசகம். ‘ஒளி-இருள்’ உருவகத்தோடு தம் உரையை நிறைவு செய்கிறார் இயேசு.

 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் நற்செய்தியாளரின் நம்பிக்கை அறிக்கையை வாசிக்கிறோம்: ‘தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.’ கடவுள் நமக்குக் காட்டும் அன்பு அவருடைய தற்கையளிப்பில் வெளிப்படுகிறது. இந்த அன்பின் நோக்கம் நாம் அவர்மேல் கொள்கிற நம்பிக்கையும் அந்த நம்பிக்கையின் வழியாக நாம் பெறுகிற நிலைவாழ்வுமே.

 

நிக்கதேம் இயேசுவைச் சந்திக்க இரவில் வருகிறார். இயேசுவை ‘விண்ணிலிருந்து வந்தவர்’ என மனதளவில் ஏற்றுக்கொண்டாலும் வெளிப்படையாக அதை அறிக்கையிட அஞ்சுகிறார். இருளில் இருந்த அவரை ஒளிக்கு அழைக்கிறார் இயேசு.

 

ஒளி-இருள் உருவகத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்: ‘ஒளி உலகிற்கு வந்திருந்தது’ – இயேசுவின் மனுவுருவாதல். ‘மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்’ – இதற்குக் காரணம் மனிதர்களுடைய தீச்செயல்கள் என்கிறார் இயேசு.

 

யோவான் நற்செய்தியில் ஒளி மூன்று செயல்களைச் செய்கிறது:

 

(அ) ஒளி உண்மையை வெளிப்படுத்துகிறது – ஓர் அறையின் தரையில் கிடப்பது பாம்பா அல்லது கயிறா என்பதை அந்த அறையின் வெளிச்சம் வெளிப்படுத்துகிறது. ஒன்றின் இயல்பு என்ன என்பதை – இருப்பதை இருப்பது போல, உண்மையாக – வெளிப்படுத்துவது ஒளியே!

 

(ஆ) ஒளி விடுதலை தருகிறது – அதே இருட்டறையில் நாம் நடந்துசெல்கிறோம் எனில், நம் கால்கள் கட்டப்பட்டவை போல நாம் உணர்கிறோம். ஏனெனில், நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் மிகக் கவனமாக எடுத்து வைக்கிறோம். ஏனெனில், அறையில் உள்ள பொருள்களின்மேல் நம் கால்கள் மோதிவிடலாம். ஒளி நம் கால்களின் கட்டுகளை அகற்றி நாம் வேகமாக நகரும் விடுதலையைத் தருகிறது.

 

(இ) ஒளி வாழ்வு கொடுக்கிறது – உயிரின் தொடக்கம் இருளில் நிகழ்ந்தாலும் – தாயின் கருவறை, நிலத்தின் ஆழ்பகுதி, உயிரின் வளர்ச்சி ஒளியைச் சார்ந்தே இருக்கிறது. ‘பிறத்தல்’ என்பதை ‘ஒளியைக் காணுதல்’ என்றே எழுதுகிற எபிரேய மொழி வழக்கு (காண். சஉ 11:7). அனைத்து உயிர்களையும் ஒளி மேம்படுத்துகிறது.

 

உண்மையும் விடுதலையும் வாழ்வும் தரக்கூடிய ஒளி நமக்குத் தாமாக வழங்கப்படுவதில்லை. நாம் அதைத் தெரிவு செய்ய வேண்டும், அதை நோக்கி வர வேண்டும், அதைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

 

ஒளிக்கு வருபவர்கள் பெறுகிற கொடை கடவுள் அவர்களோடு இணைந்து செயலாற்றுகிறார் என்பதுதான். ஏனெனில், கடவுள் ஒளியாக இருக்கிறார்.

 

இன்றைய முதல் வாசகத்தில், சிறையின் இருளில் கிடந்த திருத்தூதர்கள் கடவுளுடைய வியத்தகு செயலால் விடுதலை பெற்று ஒளிக்கு வருகிறார்கள். சங்கிலிகளால் அவர்களைக் கட்டலாம் என நினைத்தவர்கள் கையறுநிலையில் இருக்கிறார்கள்.

 

கடவுள் தருகிற ஒளி மாந்தரின் இருளை ஊடுருவக் கூடியதாக இருக்கிறது.

 

இருள் இயல்பாகவே இருக்கக் கூடியது. ஒளியை ஏற்றும்போது இருள் அகன்றுவிடுகிறது. நம் தனிப்பட்ட வாழ்வில் ஒவ்வொரு நொடியும் இருளை விடுத்து ஒளியை நோக்கிப் பயணம் செய்ய நாம் முயற்சி எடுத்தல் நலம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

 

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: