
இன்றைய இறைமொழி
புதன், 15 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் வாரம், புதன்
அவிலா நகர் புனித தெரசா – நினைவு
உரோமையர் 2:1-11. லூக்கா 11:42-46
‘இல்லாத ஒன்றை இருப்பதுபோலக் காட்டுவது வெளிவேடம். இதன் ஊற்று இறுமாப்பு!’
நேற்றைய நற்செய்தி வாசகத்தில் கொஞ்சம் மென்மையாக பரிசேயர்களைச் சாடத் தொடங்கிய இயேசு அவர்களை இன்று அதிகமாகவே சாடுகின்றார்.
அவர்கள் வெளிப்புறச் சடங்கைக் கடைப்பிடிக்கும் அளவுக்கு உள்ளார்ந்த மதிப்பீடுகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், தங்களின் இருப்பு என்னவென்று தெரிந்தும் அதிகம் இறுமாந்து இருக்கிறார்கள் என்றும், மற்றவர்கள்மேல் சுமைகளைச் சுமத்தி தாங்கள் ஓய்ந்திருக்கிறார்கள் என்றும் சொல்கின்றார்.
‘நீங்கள் முதன்மையான இருக்கைகளையும் மற்றவர்களின் வணக்கத்தையும் விரும்புகிறீர்கள்’ என்று சொல்கின்ற இயேசு, ‘நீங்கள் அடிப்படையில் மக்கள் ஏறிச்செல்லும் கல்லறைகள்’ என்கிறார்.
கல்லறைகளை யாரும் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. கல்லறைகள் வெளிப்புறத்தில்; அழகாக இருந்தாலும் உள்ளே அழுகியிருப்பவை. கல்லறைகளுக்குள் செல்லும் யாரும் திரும்புவதில்லை.
இப்படியாக, யாரும் ஒரு பொருட்டாகக் கருதாமல், உள்ளுக்குள்ளே அழுகியிருக்கும், மற்றவர்களுக்கு விரக்தியைக் கொடுக்கும் பரிசேயர்கள் தங்களை முதன்மையானவர்களாகவும், அழகானவர்களாகவும், நம்பிக்கை தருபவர்களாகவும் காட்டுவதை இயேசு சாடுகின்றார்.
மொத்தத்தில், இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டுவது தவறு.
இதுவே இறுமாப்பு.
இன்று அவிலா நகர் தெரசாவின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். இவர் திருஅவையின் மறைவல்லுநர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். ‘உள்மனக் கோட்டை’ (Interior Castle) என்பது இவரது புகழ்பெற்ற நூல். புத்தக வாசிப்பிற்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். புத்தகம் வாசிக்காத நாள் தன் வாழ்வில் வீணாய்ப் போன நாள் என அவர் அடிக்கடிக் குறிப்பிடுகிறார். இவருடைய சமகாலத்தவர் இவரை, ‘அந்தாரிகா’ (‘நடந்துகொண்டே இருப்பவர்’) என்று அழைத்தார்கள். தான் நடக்கும்போது தன்னை அறிந்துகொண்டதாகவும், தன் வலிமையை நடையின் வலுவின்மையில் கண்டார் எனவும் எழுதுகின்றார் இவர். அவருடைய சமகாலத்தில் நிறைய இறைவேண்டல்கள் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, நிறுவனமாக்கப்பட்ட வேளையில், தன் சகோதரிகளிடம், ‘நீங்கள் ஒவ்வொருவரும் உங்களை அறிதலும், உங்கள் மொழியில் உங்கள் உள்ளத்து உணர்வுகளை இறைவனிடம் சொல்வதுமே செபம்’ என ஒரு மாற்றுக் கருத்தை முன்வைத்தவர் அவிலா நகர் தெரசா. தான் சில நேரங்களில் சிங்கம் போல உணர்ந்ததாகவும், சில நேரங்களில் எறும்பு போல உணர்ந்ததாகவும் எழுதுகிறார் தெரசா. ஒரே நேரத்தில் தன் வலிமை மற்றும் வலுவின்மையை ஏற்றுக்கொள்கிறார் அவர்.
திருஅவையின் வல்லுநராக இருக்கும் இவரைக் கொண்டாடும் இந்நாளில், இன்னும் அதிகம் புத்தகங்களை வாசிக்கவும், நம் வாழ்வின் இரட்டைத் தன்மையை ஏற்றுக்கொள்ளவும் முன்வருவோம். நம் இருத்தலும் இயக்கமும் இறைவனால், உலகம் தோன்றுவதற்கு முன்பே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதை அறிவதும், அதை வாழ்வாக்குவதும் நம் அன்றாடச் செயல் ஆக வேண்டும். நம் உள்மனக் கோட்டைக்குள் நுழைவதே முதல் படி.
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: