• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

நுகத்தடித் துணை. இன்றைய இறைமொழி. வியாழன், 17 ஜூலை ’25.

Thursday, July 17, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இருக்கிறவராக இருக்கிறவர் ஆண்டவர் குலமுதுவர் வாக்குறுதி அடிமை நுகம் நுகத்தடித் துணை பாரவோனின் உள்ளம் இயேசு-சுமைதாங்கி இயேசுவின் நுகம் இளைப்பாறுதல் வாழ்வின் சுமைகள் எதிர்மறை எண்ணங்கள் கனிவு மனத்தாழ்மை பரிவு-பொறுப்புணர்வு

இன்றைய இறைமொழி
வியாழன், 17 ஜூலை ’25
பொதுக்காலம் 15-ஆம் வாரம் – வியாழன்
விடுதலைப் பயணம் 3:13-20. மத்தேயு 11:28-30

 

நுகத்தடித் துணை

 

எகிப்து நாட்டில் தம் மக்கள் படும் துயரத்தால் எழுந்த குரலுக்குப் பதில்தரும் விதமாக இறங்கி வந்த கடவுள் தாம் யார் என்பதையும், தாம் கொடுக்கிற பணி எப்படிப்பட்டது என்பதையும் மோசேக்குத் தெளிவுபடுத்துகிறார். கடவுளின் பெயர் இரு வடிவங்களில் தரப்பட்டுள்ளது: ஒன்று, ‘ஆண்டவர்’ (‘இருக்கிறவராக இருக்கிறவர்’). இரண்டு, ‘ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்.’ முந்தைய பெயர் கடவுளின் நீடித்த இருத்தலைக் குறிப்பதாகவும், பிந்தைய பெயர் குலமுதுவர்களுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதியைக் குறிப்பதாகவும் உள்ளது. இஸ்ரயேல் மக்கள் சுமக்கிற துன்பம் என்னும் அடிமைத்தன நுகத்தைச் சேர்ந்து சுமக்க இறங்கி வருகிறார் கடவுள். தம் பணியில் மோசேயை நுகத்தடித் துணையாக இணைத்துக்கொள்கிறார். இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெறுவது மோசே மற்றும் ஆரோனின் தலைமைத்துவத்தால் அல்ல, மாறாக, ஆண்டவரின் உடனிருப்பால்தான் என்பதை பின்னர் வாசகர் அறிவார். ஏனெனில், பாரவோனின் உள்ளத்தை இறுகச் செய்பவராகவும், உருகச் செய்பவராகவும் அவரே இருக்கிறார்.

 

சமயத்தில் நிகழ்ந்த சடங்குமுறைகள், பொருளாதார அடக்குமுறைகள், அரசியல் தளத்தில் உரோமைக்கு அடிமைப்பட்ட நிலை, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் எனச் சுமைகள் பல சுமந்து சோர்ந்து போன தம் சமகாலத்தவரை நோக்கி உரையாடுகிற இயேசு, ‘பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, என்னிடம் வாருங்கள்!’ என அழைக்கிறார். சுமை இல்லாத வாழ்க்கையை அவர் உறுதியளிக்கவில்லை. மாறாக, அவர்கள் தங்களுடைய சுமைகளை இயேசுவின் நுகத்தோடு இணைத்துக்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார். இயேசுவை நுகத்தடித் துணையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அவரிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

நாம் விருப்பப்பட்டுச் செய்தால் அது நம் வாழ்வின் நோக்கமாகவும், விருப்பமின்றிச் செய்தால் அது நம் வாழ்வின் சுமையாகவும் மாறிவிடுகிறது என்பது எதார்த்தம்.

 

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களைத் தன்னிடம் வருமாறு அழைக்கின்றார் இயேசு. ‘சுமை’ என்று இயேசு எதைக் குறிப்பிடுகிறார்? என்ற கேள்விக்கு பல விடைகள் தரப்படுகின்றன. இயேசுவின் சமகாலத்திலிருந்த உரோமை அரசின் ஆதிக்கம் என்னும் அரசியல் சுமை, அதிகமான வரிவிதிப்பு மற்றும் வறுமையால் நாளுக்கு நாள் அதிகரித்த பொருளாதார சுமை, மதத் தலைவர்கள் மக்கள்மேல் ஏற்றி வைத்த மதம்சார் கடமைகள் என்னும் சமயம்சார் சுமை என பல விடைகள் தரப்படுகின்றன. சில அருங்கொடை இல்லங்களில், ‘பெருஞ்சுமை’ என்பது பாவச்சுமை என்றும் சொல்லப்படுகிறது.

 

மொத்தத்தில், நாம் விரும்பாத ஒன்று, ஆனால் நம்மை அழுத்துகின்ற ஒன்று சுமை எனக் கருதப்படுகிறது.

 

இயேசு ஓர் ஆறுதலும் ஒரு பாடமும் தருகின்றார்: ‘நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்பது ஆறுதல். ‘என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், கனிவையும் மனத்தாழ்மையையும்’ என்பது பாடம்.

 

சுமைகளை நீக்குவதாக இயேசு வாக்களிக்கவில்லை. ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு நாம் பெரிய மூடை ஒன்றைத் தூக்கிச் செல்கின்றோம். செல்லும் வழியில் ஒரு மரம் நிழல் தந்தால், அல்லது ஒரு நபர் தண்ணீர் தந்தால் அது இளைப்பாறுதல். அவர்களால் அவ்வளவுதான் செய்ய முடியும். சுமையை நாம்தான் சுமக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இயேசுவின் சிலுவைப் பாதையில் அவரோடு உடன் வந்த அவருடைய தாய், சீரேன் ஊரைச் சார்ந்த சீமோன், வெரோணிக்கா, எருசலேம் நகர்ப் பெண்கள் இவர்கள் அனைவரும் இளைப்பாறுதல்கள். அவர்கள் இளைப்பாறுதல் தருவார்களே அன்றி சுமையைக் குறைக்கமாட்டார்கள். ஆக, சுமைகளை நாம்தான் சுமக்க வேண்டும். வாழ்வின் சுமைகளிலிருந்து நமக்கு விதிவிலக்கு கிடையாது.

 

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுமையை வரையறுக்கிறது. சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் இதை மிக அழகாக வரையறுக்கிறார்: ‘கருஞ்சிவப்பு உடையும் பொன்முடியும் அணிந்தோர் முதல் முரட்டுத்துணி உடுத்தியோர் வரை எல்லாருக்கும் சீற்றம், பொறாமை, கலக்கம், குழப்பம், சாவு பற்றிய அச்சம், வெகுளி, சண்டை ஆகியவை உண்டு’ (காண். சீஞா 40:4). மேற்காணும் எதிர்மறை எண்ணங்கள்கூட நாம் சுமக்க வேண்டிய சுமைகளே.

 

இயேசுவின் இளைப்பாறுதலைக் கண்டடைய நாம் இரண்டு விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்: (அ) கனிவு. (ஆ) மனத்தாழ்மை.

 

‘கனிவு’ அல்லது ‘இரக்கம்’ நமக்கு நாமே முதலில் நாம் காட்ட வேண்டியது. அதாவது, நம்மேல் கோபம் இல்லாத நிலையே கனிவு. கோபம் இருக்கின்ற இடத்தில் கனிவுக்கு இடமில்லை. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னைக் கோபமின்றி ஏற்றுக்கொள்வது. ‘மனத்தாழ்மை’ என்பது ‘எனக்கும் இது வரலாம்! எனக்கும் இது வரும்!’ என எதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது. இந்த இரண்டும் வந்துவிட்டால் எதுவும் சுமையாகத் தெரிவதில்லை.என்னை ஏற்றுக்கொள்வதில் கனிவு. என்னை அடுத்தவரில் ஒருவராக ஏற்றுக்கொள்வதில் மனத்தாழ்மை.

 

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அனுபவித்த சுமைக்கு இளைப்பாறுதலாக மோசேயை அனுப்புகின்றார் ஆண்டவராகிய கடவுள். பாரவோனுக்குப் பணிந்திருந்த அவர்கள் இனி ஆண்டவராகிய கடவுளுக்குப் பணிந்திருப்பார்கள். அதுவும் அவர்களுக்குச் சுமையே.

 

ஒரு சுமையைச் சுமந்த அவர்கள் இனி மற்றொரு சுமையைச் சுமக்க வேண்டும். சுமைகள் நீங்குவதில்லை. இளைப்பாறுதலும் நீங்குவதில்லை.

 

ஆண்டவராகிய கடவுள் தம் பணியைச் செய்வதற்கு மனிதத் துணையை நாடுகிறார். இவ்வாறாக, மனிதர்கள் தங்கள் சக மனிதர்கள்மேல், குறிப்பாக வலுவற்றவர்கள்மேல், ஒடுக்கப்படுபவர்கள்மேல் காட்ட வேண்டிய பரிவையும் பொறுப்புணர்வையும் அவர்களுக்கு நினைவுறுத்துகிறார். கடவுளின் நுகத்தடித் துணையாக இருக்க விரும்புபவர்கள் அவருடைய அழைப்புக்குப் பதிலிறுப்பு செய்தல் அவசியம். நம் வாழ்வின் சுமைகளை நாம் எளிதாகச் சுமக்க வேண்டுமெனில் கடவுளை நுகத்தடித் துணையாகக் கொள்தல் நலம். கடவுளை நுகத்தடித் துணையாகக் கொள்ளும் நாம் ஒருவர் மற்றவரின் சுமைகளைத் தாங்கிக்கொள்தல் அவசியம்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: