• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம். இன்றைய இறைமொழி. சனி, 16 ஆகஸ்ட் ’25.

Saturday, August 16, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

யோசுவா ஏகக்கடவுள் நம்பிக்கை சீனாய் உடன்படிக்கை விண்ணரசு உரிமையாளர்கள் இயேசுவும் சிறு குழந்தைகளும் நீதிபதிகளின் காலம் தன்ஒழுக்கம்

இன்றைய இறைமொழி
சனி, 16 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 19-ஆம் வாரம், சனி
யோசுவா 24:14-29. மத்தேயு 19:13-15

 

ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்

 

யோசுவா நூலின் இறுதிப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது இன்றைய முதல் வாசகம். தாம் இறப்பதற்கு முன்னர் அனைவரையும் செக்கேமில் ஒன்றுகூட்டுகிறார் யோசுவா. இந்தக் கூடுகைக்கு மூன்று காரணங்கள் உள்ளன: (அ) ஆண்டவராகிய கடவுள் இதுவரை இஸ்ரயேல் மக்களுக்குச் செய்த நன்மைகள் அனைத்தையும் சுட்டிக்காட்டி, இனிவரும் காலங்களிலும் அவர் அவர்களைத் தாங்கிக்கொள்வார் என்று உற்சாகம் தருவதற்கு. (ஆ) ஆண்டவராகிய கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்குமான உடன்படிக்கையை (சீனாய் மலையில் ஏற்படுத்தப்பட்டது) புதுப்பித்துக்கொள்வதற்கு. (இ) தாம் இறப்பதற்கு முன்னர் அவர்களுக்குத் தம் பிரியாவிடை உரை வழங்குவது. ஏகப்பட்ட கடவுளர் நம்பிக்கையிலிருந்து ஏகக்கடவுள் நம்பிக்கை நோக்கிய இஸ்ரயேல் மக்களின் பயணம் எளிதாக இல்லை. திரும்பத் திரும்ப அவர்கள் மற்றக் கடவுளர்களை நோக்கித் திரும்பவே செய்தனர். நதிக்கு அப்பால் அவர்கள் வழிபட்ட கடவுளர்களை அவர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்குகிற யோசுவா, தாமே அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும்பொருட்டு, ‘நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்’ என அறிக்கையிடுகிறார்.

 

சிறு குழந்தைளுக்கு இயேசு ஆசி வழங்கும் நிகழ்வை நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். சிறு குழந்தைகள் என்பவர்கள் இஸ்ரயேலைப் பொறுத்தவரையில் எண்ணிக்கைக்குள் வராதவர்கள். அதாவது, பன்னிரு வயதை அடைவதற்கு முன் அவர்கள் ‘அது’ என்றே வழங்கப்பட்டனர். குறிப்பாக, பொதுவிடங்களில் ரபிக்கள் அருகில் அவர்கள் வருவது தடைசெய்யப்பட்டதாக இருந்தது. இந்தப் பின்புலத்தில்தான் சீடர்கள் குழந்தைகளை அதட்டுகிறார்கள். ஆனால், இயேசுவோ அவர்களைத் தம்மிடம் வரவழைத்ததோடல்லாமல் அவர்களுக்கே விண்ணரசு எனச் சொல்லி, விண்ணரசின் முதல் உரிமையாளர்கள் ஆக்குகிறார்.

 

யோசுவாவின் இறப்புக்குப் பின்னர் நீதிபதிகளின் காலம் தொடங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் சரியான தலைமைத்துவம் இன்றித் துன்பம் அனுபவிப்பார்கள். ஆகையால், தன்ஒழுக்கத்திற்கு அவர்களைப் பழக்குகிறார் யோசுவா. தனிநபர் உடன்படிக்கைப் பிரமாணிக்கமின்மையே தன்ஒழுக்கத்திற்கு அடிப்படையாக இருக்கும் என எண்ணுகிறார். ஆண்டவராகிய கடவுளை மட்டுமே தெரிந்துகொள்கிறார். நம் தன்ஒழுக்கம் மற்றும் இறைத்தெரிவு எப்படிப்பட்டதாக இருக்கிறது? குழந்தைகளை அல்லது வலுவற்றவர்களைப் பற்றிய நம் பார்வை எப்படிப்பட்டதாக இருக்கிறது? அவர்களைக் கண்டு நாம் இடறல்படுகிறோமா? அல்லது அவர்களை ஏற்றுக்கொள்கிறோமா?

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: