• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

பகைமை உணர்வு. இன்றைய இறைமொழி. வியாழன், 16 அக்டோபர் ’25.

Thursday, October 16, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

சீடத்துவம் கடவுளின் நம்பகத்தன்மை வெளிவேடம் பகைமை உணர்வு புனித மார்கரீத் மரியா அலக்கோக் இயேசு சாடுதல் தவறை சுட்டிக்காட்டுதல் இறைவாக்குப் பணி மனமாற அழைப்பு போலி வாழ்க்கை வேறுபாடு

இன்றைய இறைமொழி
வியாழன், 16 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் வாரம், வியாழன்
புனித மார்கரீத் மரியா அலக்கோக்கு – நினைவு
உரோமையர் 3:21-30. லூக்கா 11:47-54

 

பகைமை உணர்வு

 

பரிசேயர் ஒருவரின் வீட்டுக்கு உணவருந்தச் சென்ற இயேசு, அங்கே, தூய்மை பற்றிய போதனையில் தொடங்கி, அவர்களின் முதன்மை விரும்பும் எண்ணம், இரட்டை வேடம், வெளிவேடம், திருச்சட்ட அறிஞர்கள் நடந்துகொள்ளும் விதம் என அனைத்தையும் சாடுகின்றார். அவரின் சாடுதல் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நிறைவு பெறுகிறது.

 

இயேசு பரிசேயர்களைச் சாடும் பகுதிகள் பலருக்கு நெருடலை ஏற்படுத்துகின்றன. பகைவருக்கும் அன்பு எனக் கற்பித்த இயேசு தனக்குப் பகைவர்களாக இருந்த பரிசேயர்கள்மேல் அன்பு காட்டாதது ஏன்? என்றும் மாணவர்கள் கேள்வி எழுப்புவதுண்டு.

 

இயேசு சாடுதல் பகுதியை எப்படிப் புரிந்துகொள்வது?

 

(அ) தவற்றைச் சுட்டிக்காட்டுதல் இறைவாக்குப் பணியே. அருள்பணி அல்லது இறைவாக்குப் பணி என்பது வெறும் அன்பையும் இரக்கத்தையும் போதிக்கும் பணி அல்ல. மாறாக, தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்துவதும் அருள்பணியே. நாம் தவறு செய்பவர்களைக் கடிந்துகொள்ளக் கூடாது. ஆனால், தவறுகளைக் கடிந்துகொள்ள வேண்டும். இயேசு தவறுகளைக் கடிந்துகொள்ள விரும்புவதால் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றார்.

 

(ஆ) மனமாற்றத்திற்கான அழைப்பு. தவறுகளைச் சுட்டிக்காட்டுவதன் வழியாக இயேசு அவர்களை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார். வெளிவேடம், போலியான வாழ்க்கை ஆகியவற்றை விட்டு அவர்கள் உண்மையின்பால் திரும்ப வேண்டும் என்பது இயேசுவின் விருப்பமாக இருக்கிறது.

 

(இ) தன் சீடர்கள் நடுவே அவை இருத்தல் ஆகாது. மற்றவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதன் வழியாக, அத்தவறுகள் தன் சீடர்களின் குழுவிலும் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகின்றார். பரிசேயர்கள் மற்றும் திருச்சட்ட அறிஞர்களின் தவறுகள் சீடர்கள் நடுவிலும் எழ வாய்ப்பிருக்கிறது என்பதால் இயேசு மறைமுகமாகத் தன் சீடர்களையும் எச்சரிக்கின்றார்.

 

இயேசுவின் சாடுதல்கள் பகைவர்களை மனமாற்றுவதற்குப் பதிலாக அவர்களின் கோபத்தைத் தூண்டி எழுப்புகின்றன. தன் செயல்களின் விளைவை அறிந்தவராக இருக்கும் இயேசு தொடர்ந்து வழிநடக்கின்றார்.

 

இன்றைய முதல் வாசகத்தில் செயல்களின் அடிப்படையிலா? நம்பிக்கையின் அடிப்படையிலா? என்று கேள்விகள் கேட்கிற பவுல், நம்பிக்கையின் அடிப்படையிலேயே நாம் பெருமை பாராட்ட வேண்டும் என்கிறார். நம் கடவுளின் நம்பகத்தன்மையே நம் வாழ்வின் அடித்தளமாக இருக்கும்போது வெளிவேடத்துக்கும் வேறுபாட்டுக்கும் பகைமை உணர்வுக்கும் இடமில்லை.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: