இன்றைய இறைமொழி
வியாழன், 17 ஏப்ரல் ’25
(தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம்)
திருத்தைலத் திருப்பலி
எசாயா 61:1-3அ, 6அ, 8ஆ-9. திருப்பாடல் 89. திருவெளிப்பாடு 1:5-8. லூக்கா 4:16-21
நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை!
முன்னுரை:
வாழ்த்துக்கள். நம் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கும் கூடி வந்துள்ள துறவற அருள்பணியாளர்களுக்கும். உங்களுடைய திருநாள் இது. உங்களுடைய உடனிருப்புக்கு நன்றி.
நன்றி. அருள்சகோதரிகள், அருள்சகோதரர்கள், இறைமக்கள் அனைவருக்கும்! உங்களுடைய ஒத்துழைப்புக்கு!
இன்றைய நாள் இரண்டு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: (அ) திருவழிபாட்டு அளவில். (ஆ) மேய்ப்புப் பணி அளவில்.
(அ) திருவழிபாட்டு அளவில்
(1) திருஎண்ணெய்கள் அர்ச்சிப்பு
கிறிஸ்மா. கிறிஸ்துவைக் குறிக்கிறது. திருமுழுக்கு, உறுதிப்பூசுதல், குருக்கள் அருள்பொழிவு, ஆயர் திருப்பொழிவு, புதிய ஆலயத்தின் பீடம் அர்ப்பணிப்பு போன்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.
புகுமுக நிலை எண்ணெய். அல்லது ஆயத்த எண்ணெய். திருமுழுக்கு அருளடையாளம் பெறுவதற்காகத் தயாரிப்பவர்களுக்கு பூசப்படுகிறது. வலிமையையும் பாதுகாப்பையும் குறிக்கிறது.
நோயுற்றோர் எண்ணெய். நோயிற்பூசுதல் அருளடையாளத்தின்போது பயன்படுத்தப்படுகிறது. நலத்தையும் ஆறுதலையும் குறிக்கிறது.
(2) ஒன்றிப்பு
மறைமாவட்டம் என்னும் தலத்திருஅவையின் ஆயர் தலைமையில் அருள்பணியாளர்கள், துறவியர், இறைமக்கள் அனைவரும் இணைந்து வருகிறார்கள்.
(3) அருள்பணியாளர்கள் தங்களுடைய வாக்குறுதிகளைப் புதுப்பித்தல்
ஆயர்முன்னும் இறைமக்கள் முன்னும் குருக்கள் தங்களுடைய குருத்துவ வாக்குறுதிகளைப் புதுப்பிக்கிறார்கள்.
(4) புனித வாரத்தில் – வழக்கமாக, பெரிய வியாழன் அன்று – இயேசு குருத்துவத்தை ஏற்படுத்திய நாளில் கொண்டாடப்படுகிறது. நற்கருணை, அன்புக் கட்டளை, பணிவிடை செய்தல் என்னும் பெரிய வியாழன் நாளின் மற்ற அடையாளங்களையும் தாங்கி நிற்கிறது.
(ஆ) மேய்ப்புப் பணி அளவில்
(1) குருத்துவ அடையாளத்தை உறுதிப்படுத்துதல்
குருத்துவ வாக்குறுதிகளைப் புதுப்பிக்கிற அருள்பணியாளர் தன்னையே மறுஅர்ப்பணம் செய்கிறார். தன் குருத்துவ அடையாளத்தையும் பணியையும் உறுதிப்படுத்துகிறார்.
(2) நலம்தருதல், அருள்பொழிவு செய்தல்
அருளடையாளங்கள் வழியாக நாம் பெற்றுள்ள அழைப்பை திருஎண்ணெய்கள் நினைவூட்டுகின்றன.
(3) மறைமாவட்டத்தின் ஒன்றிப்பையும் பணியையும் வளர்க்கிறது
ஒரே குடும்பமாக இணைந்து வரும் நாம், நம் கிறிஸ்தவ வாழ்வின் அடையாளத்தையும், ஒட்டுமொத்த இறைமக்கள் குழாம் என நாம் செய்ய வேண்டிய பணியையும் கொண்டாடுகிறோம்.
(4) புத்தாக்கம்
புதிய திருத்தைலத்தின் உற்சாகம் இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தோடு புதிய வாழ்க்கையை நாம் தொடங்குவதற்குத் தூண்டுகிறது.
பழையன கழிந்து புதியன பிறக்கின்றன.
பாவங்கள் ஒழிந்து மீட்பு பிறக்கிறது.
இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?
(அ) முதல் வாசகம்: ‘மகிழ்ச்சித் தைலம்’
‘மகிழ்ச்சித் தைலத்தை வழங்க ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்!’ என்று இறைவாக்குரைக்கிறார் எசாயா. ‘நாம் அனைவரும் உயிர்ப்பின் கிறிஸ்தவர்கள், மகிழ்ச்சியின் கிறிஸ்தவர்கள்,’ என்கிறார் புனித அகுஸ்தினார். நம் உள்ளத்தில் மகிழ்ச்சி உள்ளதா? அந்த மகிழ்ச்சியை நாம் நாம் குடும்பத்தில், பங்கில், சமூகத்தில் மற்றவர்களுக்கு வழங்குகிறோமா?
(ஆ) பதிலுரைப் பாடல்: ‘என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்’
ஆண்டவராகிய கடவுள் அரசர் தாவீதைக் குறித்துப் பாடுகிற பாடலில், ‘என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்’ என்கிறார். ஆண்டவர் தருகிற திருப்பொழிவு வழியாக, தாவீது ஆண்டவரோடு நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்கிறார்: ‘நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என அழைக்கிறார்.
திருஎண்ணெய்கள் வழியாக ஆண்டவராகிய கடவுள் நம்மையும் திருப்பொழிவு செய்கிறார். நமக்கும் மேற்காணும் உறவையும் உரிமைகளையும் வழங்குகிறார்.
(இ) இரண்டாம் வாசகம்: ‘ஊழியும் புரியும் குருக்களாக’
இயேசு கிறிஸ்து நம்மேல் கொண்ட அன்பால் நம் அழைத்தல் நிலையை உயர்த்துகிறார். கடவுளுக்கு நெருக்கமாக நம்மைக் கொண்டு செல்கிறார்.
நம் பொதுநிலை மற்றும் அருள்நிலை குருத்துவத்தின் வழியாக நாம் ஆண்டவருக்கு நெருக்கமாக இருக்கிறோம்.
(ஈ) நற்செய்தி வாசகம்: ‘ஆண்டவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்’
இயேசுவின் பணித்தொடக்கம். பத்துக் கட்டளைகளைக் கொண்டு அல்ல, மாறாக, அருள்பொழிவைக் கொண்டு பணியைத் தொடங்குகிறார் இயேசு. தம் பணியையும் அதன் இலக்கையும் போக்கையும் நிர்ணயம் செய்கிறார்.
அனைவருடைய கண்களும் அவர்மேல் இருக்கின்றன. இந்த உலகத்தின் கண்களும் நம்மேல் இருக்கின்றன. நாம் மற்றவர்களுக்குத் தருகிற எதிர்நோக்கு என்ன?
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: