• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

மக்கள் பார்க்கவேண்டுமென! இன்றைய இறைமொழி. புதன், 17 ஜூன் 2026.

Wednesday, June 17, 2026   Rev. Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

இன்றைய இறைமொழி
புதன், 17 ஜூன் 2026
பொதுக்காலம் 11-ஆம் வாரம்
2 அர 2:1, 6-14. மத் 6:1-6, 16-18

 

மக்கள் பார்க்கவேண்டுமென!

 

மனிதர்களாகிய நாம் சமூக விலங்குகள் என அழைக்கப்படுகிறோம். ஏனெனில், நம் தான்மையை நாம் அடையாளம் காணவும் வளர்க்கவும் மற்றவர்கள் தேவைப்படுகிறார்கள். இன்றைய தகவல் தொடர்புகாலத்தில் நம் கட்புலப்பாடு அல்லது பார்வை பற்றி நாம் மிகவே அக்கறை கொள்கிறோம். எத்தனை பேருக்கு என்னைத் தெரியும், என் ஃபோட்டோவை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று நாம் தேடுகிறோம்.

 

சமூக ஒப்புதல் அல்லது சமூக ஏற்பு நம் ஆன்மிக வாழ்வையும் பாதிக்கிறது. நாம் செய்த உதவியை மற்றவர்கள் பாராட்டும்போது, நாம் செய்த ஒரு செயலுக்கு பொதுவில் அங்கீகாரம் கிடைக்கும்போது நாம் மகிழ்கிறோம்.

 

இயேசுவின் சமகாலத்தில் மூன்று அறச்செயல்கள் முதன்மையாகக் கருதப்பட்டன: தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பு இருத்தல். இம்மூன்று செயல்பாடுகளும் கடவுளுக்கு நெருக்கமாக ஒருவரைக் கொண்டு சென்றன. ஆனால், இதில் உள்ள அபாயம் என்னவென்றால், இந்த மூன்றும் வெளிவேடத்துக்காகச் செய்யப்பட்டன. அல்லது மற்றவர்களின் ஒப்புதல் அல்லது அங்கீகாரத்தைப் பெறுவதற்காகச் செய்யப்பட்டன.

 

‘நான் தர்மம் செய்வதும், இறைவேண்டல் செய்வதும், நோன்பு இருப்பதும் எந்த அளவுக்கு மற்றவர்களுடைய பார்வையில் படுகிறதோ அந்த அளவுக்கு என் செயல்கள் உயர்ந்தவை’ என்ற எண்ணம் உருவாகத் தொடங்கியது. இதில், கடவுளிடமிருந்து நம் பார்வை மறைந்து மற்றவர்களின் – நம்மைப் போன்ற சக மனிதர்களின் – விருப்பு, வெறுப்பு முன்னிடம் பெறுகிறது.

 

தம் சீடர்கள் தம் சக மனிதர்களின் ஒப்புதலையும் ஏற்பையும் அல்ல, மாறாக, இறைஒப்புதலையும் ஏற்பையும் மட்டுமே பெற வேண்டும் என்கிறார் இயேசு.

 

மற்றவர்களின் பார்வை அல்ல, நம் பார்வையும் கடவுளின் பார்வையும் போதும் என்று நாம் எண்ணும்போது மேற்காணும் ஆபத்திலிருந்து வெளிவர வாய்ப்பு உள்ளது.

 

இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலியாவிடமிருந்து எலிசா பணிப்பொறுப்பை பெறுகிறார். யாரும் இல்லாத ஒரு வயல்வெளியில் இந்த நிகழ்வு நடந்தேறுகிறது. யாரும் பார்க்கவில்லை என்றாலும் எலிசா இறைவாக்கினரே.

 

நம் தான்மையை மற்றவர்களின் பார்வையை வைத்து நிர்ணயிக்காமல், இறைவன் நம் உள்ளத்தில் வைத்துள்ள அவருடைய சாயலைக் கொண்டு நிர்ணயிப்போம்.

 

மற்றவர்கள் நமக்குத் தருகிற ஏற்புதலுக்கும் அங்கீகாரத்திற்கும் நாம் கைம்மாறு செய்ய வேண்டும். ஆனால், கடவுளிடமிருந்து கைம்மாறு பெறும்போது அதை நாம் அவருக்குத் திரும்பச் செலுத்தத் தேவையில்லை.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்

 

இது ஒரு ‘யெஸ்னி ப்ரேய்ஸ்’ முயற்சி

Source: Rev. Fr. Yesu Karunanidhi

 


 

Share: