• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

அச்சம். இன்றைய இறைமொழி. வெள்ளி, 17 அக்டோபர் ’25.

Friday, October 17, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

ஆபிரகாம் முற்சார்பு எண்ணம் புளிப்பு மாவு கடவுளின் நம்பகத்தன்மை அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசி அச்சம் உணர்வு நேர்முக அச்சம் எதிர்மறை அச்சம் தீய எண்ணம் அடுத்தவர் தீமை இரகசியம் வெளியிடுதல் வலுவின்மை தாழ்வாக மதிப்பிடுதல் தாழ்வு மனப்பான்மை

இன்றைய இறைமொழி
வெள்ளி, 17 அக்டோபர் ’25
ஆண்டின் பொதுக்காலம் 28-ஆம் வாரம், வெள்ளி
அந்தியோக்கு நகர் புனித இஞ்ஞாசி

உரோமையர் 4:1-8. லூக்கா 12:1-7

 

அச்சம்

 

இன்றைய நற்செய்தி வாசகம், ‘அச்சம்’ என்ற உணர்வை நாம் எப்படி கையாளுவது எனக் கற்றுத்தருகிறது. ‘அச்சம்’ ஒரு நடுநிலையான உணர்வு. நேர்முக அச்சம் நம்மைக் கவனமுள்ளவர்களாக இருக்க உதவி செய்வதுடன், நம் வாழ்க்கையைக் காத்துக்கொள்ள உதவி செய்கிறது. எடுத்துக்காட்டாக, சாலையில் செல்லும்போது எதிர்வரும் வாகனங்கள் பற்றிய அச்சமே நாம் சாலைமேல் கவனமாக இருக்க நம்மைத் தூண்டுகிறது. எதிர்மறையான அச்சம் நம்மை முடக்கிப் போடுகிறது. எடுத்துக்காட்டாக, பொதுவெளியில் பேசுவதை அச்சமாகக் கருதுகின்ற குழந்தை இறுதி வரையில் பொதுவெளியைக் கண்டு பயந்துகொண்டே இருக்கின்றது.

 

மூன்று நிலைகளில் அச்சம் நமக்கு வருகின்றது என்று இன்றைய நற்செய்தி உணர்த்துகின்றது:

 

(அ) அடுத்தவரின் தீமை அல்லது தீய எண்ணம்

 

எடுத்துக்காட்டாக, எனக்கு அடுத்த அறையில் இருக்கும் ஒருவர் எனக்கு எதிராகத் தீங்கு செய்வார் என்ற எண்ணம் எனக்குத் தோன்றுகிறது என வைத்துக்கொள்வோம். மனிதர்கள் நாம் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டிருந்தாலும் நம் எண்ணம், செயல் ஆகியவற்றில் தீமை நிறைந்து நிற்கின்றது. நாம் அதை முயற்சி எடுத்து வெற்றி கொள்ள வேண்டும். ‘பரிசேயரின் புளிப்பு மாவு குறித்து எச்சரிக்கையாக இருங்கள்’ என்கிறார் இயேசு. இங்கே ‘புளிப்பு மாவு’ என்பது எதிர்மறையான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, புளிப்பு மாவு தவிர்க்கப்பட வேண்டியது. ஏனெனில், அது பார்ப்பதற்கு நல்ல மாவு போல இருந்தாலும் உள்புறத்தில் புளிப்பாக இருக்கின்றது. மேலும், அது எளிதில் நல்ல மாவையும் புளிப்பு மாவாக்கிவிடும். ஆக, அடுத்தவரில் இருக்கும் புளிப்பு என்னும் தீமை நமக்கு அச்சம் தருகின்றது. இந்த அச்சத்தைக் களைய நாம் என்ன செய்ய வேண்டும்? எச்சரிக்கையாக, முன்மதியோடு இருக்க வேண்டும்.

 

(ஆ) இரகசியம் வெளியிடுதல்

 

நம்மைப் பற்றிய இரகசியம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் நம்மை ஒருவிதமான அச்சம் பற்றிக்கொள்கின்றது. ஏனெனில், நம் வலுவின்மை மற்றவர்களுக்குத் தெரிந்தவுடன் நம் வலிமை நம்மைவிட்டு எளிதில் அகன்றுவிடுகிறது. இன்னொரு பக்கம், மற்றவர்கள் நமக்குத் தெரிவித்த இரகசியத்தை நாம் வெளியிடும்போதும் நாம் அஞ்சுகிறோம். ஏனெனில், அது நமக்கே தீங்காக முடியும். இன்றைய உலகில் இரகசியம் என்று எதுவும் இல்லை. நாம் இருளில் செய்வது வெளிச்சத்தில் தெரியும். உள்ளறையில் காதோடு காதாய்ப் பேசுவது கூரை மீதிருந்து அறிவிக்கப்படும். இந்த அச்சத்தை நாம் எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்? நம் உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரியான இயல்பு இருக்க வேண்டும். நமக்கு நாமே முரண்படுபவர்களாக வாழக் கூடாது.

 

(இ) தாழ்வாக மதிப்பிடுதல்

 

‘சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்’ என்கிறார் இயேசு. இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் எனில், ஐந்தாவது குருவி இலவசக் குருவி, அல்லது கொசுறுக் குருவி. மற்றவர்களின் இரக்கத்தில் இருக்கின்ற அந்தக் கொசுறுக் குருவியே இறைவனின் பார்வையில் மதிப்புள்ளதாக இருக்கிறது எனில், இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள்! ஆக, நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை அல்லது குறைவான மதிப்பீட்டைக் களைதல் அவசியம். ‘நான் இதுதான்!’ ‘நான் இப்படித்தான்!’ என்று தன்னையே உணர்பவர் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை. ஆக, ‘சிட்டுக்குருவியை விட நான் மேலானவர்’ என்ற உணர்வு என் அச்சத்தைக் களைகிறது.

 

நம் அச்சம் மற்றும் முற்சார்பு எண்ணம் நம்மை விட்டு அகன்றால், சிட்டுக்குருவிகள் போல நாம் கட்டின்மையோடு இலகுவாகப் பறக்க முடியும்.

 

இன்றைய முதல் வாசகத்தில், ஆபிரகாம் அவர் கொண்டிருந்த நம்பிக்கை வழியாகக் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனார் என மொழிகிறார் பவுல். கடவுளின் நம்பகத்தன்மையால் ஏற்புடையவர் ஆகிற எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: