இன்றைய இறைமொழி
வெள்ளி, 18 ஏப்ரல் ’25
ஆண்டவருடைய பாடுகளின் புனித வெள்ளி
எசாயா 52:13-53:12. எபிரேயர் 4:14-16. 5:7-9. யோவான் 18:1-19:42
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை அறிவிக்கிறோம் நாங்கள்!
அது ஒரு கிறிஸ்தவக் கோயில். அந்தக் கோயிலுக்கு அடையாளமாக சற்று தூரத்தில் சாலை அருகில் நுழைவாயில் ஒன்று கட்டப்பட்டது. நுழைவாயிலின் மேலே, ‘சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை அறிவிக்கிறோம் நாங்கள்!‘ என்று எழுதப்பட்டது. இதுவே அவர்களுடைய இலக்கு வாக்கியமாக இருந்தது. நொறுங்குண்ட, வலுவற்ற கிறிஸ்து அவர்களுடைய அறிவிப்பு பொருளாக இருந்தார்.
காலப் போக்கில் சில கொடிகள் நுழைவாயிலில் வளர்ந்து படரத் தொடங்கின. யாரும் கண்டுகொள்ளவில்லை. அவை வளர்ந்து ‘சிலுவையில் அறையப்பட்ட’ என்னும் சொற்களை மறைத்துவிட்டன. ‘கிறிஸ்துவை அறிவிக்கிறோம் நாங்கள்!‘ – இதுவே இப்போது அவர்களுடைய நோக்கமாக மாறியது. சிலுவை கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய போதனையிலிருந்து மறையத் தொடங்கியது. இயேசுவை ஓர் அறநெறிப் போதகர், மேலாண்மை குரு, நலம் தருபவர், வளம் தருபவர் என்று அறிவிக்கத் தொடங்கினார்கள். கிறிஸ்துவின் சிலுவையை யாரும் நினைவுகூரவில்லை.
தொடர்ந்து கொடிகள் வளர்ந்தன. இன்னும் சில ஆண்டுகளில் ‘கிறிஸ்துவை’ என்னும் சொல்லும் மறைக்கப்பட்டது. ‘அறிவிக்கிறோம் நாங்கள்‘ – இதுதான் இப்போது அவர்களுடைய நோக்கமாக இருந்தது. அறிவித்தார்கள், போதித்தார்கள். ஆனால், போதனை நீர்த்துப் போனது. உரைகள் வெறும் அறிவார்ந்தவையாக நின்றுவிட்டன. எதுவும் யாரையும் தொடவில்லை.
இன்னும் தொடர்ந்து வளர்ந்த செடிகள் ‘அறிவிக்கிறோம்’ என்னும் சொல்லையும் மறைத்துவிட்டன. இப்போது ‘நாங்கள்‘ மட்டுமே நின்றது. திருச்சபை தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளும் இடமாக மாறத் தொடங்கியது. அடையாளமும் தான்மையும் முன்நிறுத்தப்பட்டன.
நம் வாழ்வில் வளர்ந்து கிறிஸ்துவை மறைத்துவிட்ட கொடிகளை அகற்றுவதற்கு பெரிய வெள்ளி நமக்கு அழைப்பு விடுக்கிறது. இந்த நாளின் மையமாக இருப்பது சிலுவை.
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவே இன்றைய நாளின் மையமாக இருக்கிறார்.
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை அன்று பலர் கண்டார்கள், கேலி செய்தார்கள், முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். ஆனால், இந்தக் கிறிஸ்துவே உயிர்த்தெழுந்தார்.
(அ) இதோ! துன்புறும் ஊழியன்
இன்றைய முதல் வாசகம் துன்புறும் ஊழியனை நம் கண்முன் கொண்டுவருகிறது. துன்புறும் ஊழியன் தன் மௌனத்தால், அர்ப்பணத்தால், இரக்கத்தால் பதிலிறுப்பு செய்கிறார். நலிவுற்ற, கைவிடப்பட்ட நிலையிலும் கடவுளைக் கரம் பற்றிக்கொள்கிறார்.
(ஆ) இதோ! பரிவுநிறை தலைமைக்குரு
இன்றைய இரண்டாம் வாசகம் இயேசுவை தனிப்பெரும் தலைமைக்குரு என முன்மொழிகிறது. துன்பத்தின் வழியாக இயேசு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். துன்பத்தின் வழியாகவே இயேசு நமக்கு நெருக்கமாகிறார்.
(இ) இதோ! மனிதன்
பிலாத்து இயேசுவை மக்கள் முன் நிறுத்தி, ‘இதோ, மனிதன்!’ என்றார். உலகின்முன் அவர் தாழ்த்தப்பட்டார். ஆனால், நம்பிக்கையில் நாம் அவருடைய மாட்சியைக் காண்கிறோம். குத்தித் திறக்கப்பட்ட அவருடைய விலா வழியாக நாம் கடவுளுடைய இதயத்தை நெருங்கிச் செல்கிறோம். அவருடைய குத்தப்பட்ட நிலையே நமக்கு மீட்பின் கதவுகளைத் திறக்கிறது.
இன்றைய நாளில் சிலுவையை, சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை, துன்பத்தை நம் கண்முன் கொண்டு வருவோம். படைப்பின் தொடக்கத்தில் மானுடத்தின் தோள்களில் ஏறிய துன்பம் நம் வாழ்வின் இறுதி வரை தொடர்கிறது. துன்பங்கள் வழியாக மட்டுமே மீட்பும் மாட்சியும் உண்டு. துன்பங்கள் ஏற்கும், துன்பங்களின் முன் சரணாகதி அடையும் வரம் கேட்போம் சிலுவை நாதரிடம்!
அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்
Share: