• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இறைவனைத் தெரிந்துகொள்தல். இன்றைய இறைமொழி. திங்கள், 18 ஆகஸ்ட் ’25.

Monday, August 18, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

நிலைவாழ்வு நீதித்தலைவர்கள் பாவம்-அருள் சுழல் இஸ்ரயேல் உடன்படிக்கை சிலைவழிபாடு இயேசுவின் அளவுகோல் இழப்பு தரும் நிறைவு இறைதெளிவு கடவுளின் அருள்கரம்

இன்றைய இறைமொழி
திங்கள், 18 ஆகஸ்ட் ’25
பொதுக்காலம் 20-ஆம் வாரம், திங்கள்
நீதித்தலைவர்கள் 2:11-19. மத்தேயு 19:16-22

 

இறைவனைத் தெரிந்துகொள்தல்

 

யோசுவா இறந்த பின்னர் இஸ்ரயேல் மக்களை வழிநடத்துவதற்கான ஒருங்கிணைந்த தலைமை இல்லை. ஒவ்வொரு குலத்திலும் வேறு வேறு தலைவர்கள் தோன்றுகிறார்கள். இவர்கள் நீதித்தலைவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இந்த நூலில் பாவம்-அருள் சுழல் ஆறு முறை சுற்றுகிறது. இஸ்ரயேல் மக்கள் சிலைவழிபாட்டில் ஈடுபட்டு ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்கிறார்கள். அவர்களைத் திருத்துவதற்காக அல்லது கண்டிப்பதற்காக ஆண்டவர் எதிரிகளை எழுப்புகிறார். அவர்களின் அடக்குமுறை தாங்கமுடியாமல் மக்கள் ஆண்டவராகிய கடவுளை நோக்கிக் குரல் எழுப்புகிறார்கள். ஆண்டவர் நீதித்தலைவர் ஒருவரை அழைக்கிறார். அவர் எதிரிகளை வெல்கிறார். நிலம் அமைதி கொள்கிறது. இஸ்ரயேல் மக்கள் தாங்கள் கொடுத்த உடன்படிக்கை வாக்குறுதியை மறந்துவிட்டதால்தான் அவர்கள் இத்தகைய பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். இருந்தாலும் ஆண்டவருடைய அருள்கரம் மேலோங்கி நின்று அவர்களை வழிநடத்துகிறது.

 

நிலைவாழ்வு பெறும் விருப்பத்துடன் இளவல் ஒருவர் இயேசுவிடம் வருகிறார். கட்டளைகளைக் கடைபிடிக்குமாறு அறிவுறுத்துகிறார் இயேசு. கட்டளைகளை தாம் ஏற்கெனவே கடைப்பிடித்து வருவதாக மொழிகிறார் இளவல். அடுத்த நிலைக்கு அவரை எடுத்துச் செல்கிறார் இயேசு. நிறைவுபெறுவதற்கான வழியை முன்மொழிகிறார். இயேசுவின் அளவுகோல் எப்போதும் முரண்பட்டதாக இருக்கிறது. விண்ணரசில் பெரியவராக மாறுவதற்கு ஒருவர் சிறியவராக மாற வேண்டும். அதுபோல நிறைவு பெறுவதற்கான வழி இழப்பது. இது கணிதவிதிகளுக்கு முரண்பட்டதாக இருக்கிறது. ஆகையால்தான், இளவல் வருத்தத்துடன் இல்லம் செல்கிறார். இளவல் பாதி வழியுடன் திரும்பிச் செல்லக் காரணம் ‘இழப்பு வெறுப்பு’ (‘லாஸ் அவெர்ஷன்’) என்பதாகும். அதாவது, எதிர்வருகிற வரவை விட இழப்பு அதிகமானதாக இருக்குமோ என்று எண்ணுகிற உள்ளம், இழப்பையே பெரிதுபடுத்திப் பார்ப்பதால் முடிவெடுக்க மறுத்து, இப்போது இருப்பதே போதும் என எண்ணும். அதாவது, என் கையில் 10 ரூபாய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். என்னிடம் வருகிற ஒருவர், ‘உன் 10 ரூபாயை என்னிடம் கொடு! நான் உனக்கு 100 ரூபாய் தருகிறேன்’ என்கிறார். அவரை எனக்கு முன்பின் தெரியாது. அவரைப் பார்த்தாலும் அவரிடம் 100 ரூபாய் இருப்பது போலத் தெரியவில்லை. ஆக, அவரை நம்பி 100 ரூபாய் கொடுப்பதற்குப் பதிலாக, ‘இல்லை பரவாயில்லை! எனக்கு வேண்டாம்’ என நான் சொல்லி அனுப்புகிறேன். ஏனெனில், 100 ரூபாய் தரும் மகிழ்ச்சியை விட 10 ரூபாயை இழந்தால் நான் அடையும் துன்பம் எனக்குப் பெரிதாகத் தெரிகிறது.

 

இறைவனைத் தெரிந்துகொள்தல் ஒருநாள் செயல்பாடு அல்ல. மாறாக, அன்றாடம் அது புதுப்பிக்கப்பட வேண்டும். இஸ்ரயேல் மக்கள் தங்கள் உடன்படிக்கை பிரமாணிக்கத்தைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பவில்லை. ஆகையால்தான் சிலைவழிபாடு பக்கம் திரும்புகிறார்கள். நிறைவுள்ளவராக விரும்புவர் இறைவனைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், அதற்கு இடையூறாக இருக்கிற செல்வத்தை விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும்.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: