• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Sermons

இவ்வாறு நிறைவேறின. இன்றைய இறைமொழி. சனி, 19 ஜூலை ’25.

Saturday, July 19, 2025   Fr. Yesu Karunanidhi   Archdiocese of Madurai

Daily Catholic Lectio இன்றைய இறைமொழி துன்புறும் ஊழியன் வாழ்வு வரையறை வாழ்க்கைக் குறிப்பு விடுதலை மாற்றங்கள் வாழ்வின் கதை

இன்றைய இறைமொழி
சனி, 19 ஜூலை ’25
பொதுக்காலம் 15-ஆம் வாரம் – சனி
விடுதலைப் பயணம் 12:37-42. மத்தேயு 12:14-21

 

இவ்வாறு நிறைவேறின

 

பகுப்பாய்வு உளவியலில், ‘வாழ்க்கைக் குறிப்பு எழுதுதல்’ என்ற ஒரு பயிற்சி உண்டு. அந்தப் பயிற்சியில், ‘நீங்கள் பிறந்தபோது உங்களைப் பற்றிய ஏதாவது கதை, புனைவு, வாக்கு சொல்லப்பட்டதா?’ என்ற கேள்வியும் உண்டு. நம் ஒவ்வொருவருடைய பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களைக் கேட்டால் இக்கேள்விக்கான விடையை நாம் அறிய முடியும். ஜாதகம் எழுதுவதும், ஜோதிடம் பார்ப்பதும் கூட இதை ஒட்டிய நிகழ்வுதான். ஒரு குழந்தை இப்படி இருக்கும், அல்லது இப்படித்தான் இருக்கும் என்ற வரையறையை ஜோதிடம் தருகின்றது.

 

இது ஒரு பக்கம் இருக்க, ஒரு சிலர் தங்களுக்குத் தாங்களே ஒரு குறிப்பை எழுதி அதை வாழ்வாக்கிக்கொள்வர்.

 

எடுத்துக்காட்டாக, அருள்திரு. ஸ்டேன் சாமி அவர்கள். இவர் தன் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும், தன் பணி இந்த இலக்கு மக்களுக்காகத்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்து அதன்படி வாழ்ந்து, அந்த வரையறையை வாழ்ந்ததற்காகக் கொல்லப்படுகின்றார்.

 

இன்னொரு பக்கம், மற்றவர்கள் நம்மைப் பார்த்து, ‘இவர் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்’ என்று அவர்களாக ஒரு குறிப்பை தங்கள் மனத்திற்குள் எழுதிக்கொள்வதுண்டு.

 

மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை, இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கின் நிறைவாக முன்வைக்கின்றார். ‘இதோ! என் ஊழியர்’ என்று சொல்லப்படுகின்ற துன்புறும் ஊழியனின் பாடலின் பின்புலத்தில் இயேசுவைத் தன் குழுமத்திற்கு அறிமுகம் செய்கின்றார் மத்தேயு.

 

ஒரு கதையை எடுத்து வாழ்தல் என்பது நாம் எல்லாரும் நம்மை அறியாமல் செய்யக் கூடிய ஒன்று. அந்தக் கதையை வாழ்வதனால் ஒட்டுமொத்த மானுடமும் நலம் பெறுகிறது என்றால் அது நல்ல கதையே.

 

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களின் வாழ்வின் கதையைத் திருத்தி எழுதுகின்றார். எகிப்தில் அடிமைகளாக இருந்த அவர்கள் செங்கடலைக் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைகின்றனர்.

 

மக்களோடு மக்களாக விழித்திருக்கின்ற ஆண்டவராகிய கடவுள், அடிமைத்தனம் என்னும் அவர்களுடைய கதையை ஒரே நாளில் மாற்றி விடுதலை என எழுதுகின்றார்.

 

மானுட வரலாற்றில் பலரின் வாழ்வில் இத்தகைய மாற்றங்களை நாம் காண்கின்றோம்.

 

இன்று நான் எந்தக் கதையை வாழ்வாக்குகிறேன்? – என நாம் ஒவ்வொருவரும் கேட்போம்.

 

அந்தக் கதையை நான் என் வாழ்வில் நிறைவேற்ற நான் எப்படி முயற்சி செய்கிறேன்? – என்பது அடுத்த கேள்வி.

 

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

 


 

Share: